மகளிர் மருத்துவம் - சினைப்பையில் முட்டைகள் குறைவதால் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள்
- 25 முதல் 32 வயது பெண்களுக்கு 2 சினைப்பையிலும் ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை 15 முதல் 25 வரை இருந்தால் நல்ல விஷயம்.
- 20 முதல் 25 ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை இருந்தால் 10 முதல் 15 நல்ல முதிர்ச்சி அடைந்த முட்டைகள் கிடைக்கும்.
குழந்தையின்மை பிரச்சினையில் பெண்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்களில் ஒன்று, ஆன்ட்ரல் பாலிக்கில் கவுன்ட் (ஏ.எப்.சி) என்பதாகும். இன்றைக்கும் குழந்தையின்மை சிகிச்சைக்காக வரும் நிறைய நோயாளிகள், டாக்டர் என்னுடைய ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை 5 தான் இருக்கிறது, 6 தான் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.
ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை என்பது என்ன?
ஆன்ட்ரல் பாலிக்கல் என்பது சினைப்பையில் உள்ள கருமுட்டைகள் இருக்கும் திரவம் நிறைந்த சிறிய பைகள் ஆகும். ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை, ஒரு பெண்ணின் கருத்தரிக்கும் திறனுக்காக, சினைப்பையில் முட்டைகள் இருப்பை (ஓவரியன் ரிசர்வ்) குறிக்கும் ஒரு முக்கியமான விஷயம் ஆகும். ஒவ்வொரு பெண் குழந்தையும் பிறக்கும் போதே ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கருமுட்டைகள் அவர்களுடைய சினைப்பையில் இருக்கும். இந்த சினைப்பையில் உள்ள கருமுட்டைகள் இருக்கும் திரவம் நிறைந்த சிறிய பைகளின் எண்ணிக்கை தான் ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை என்பதாகும்.
இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை, அளவில் சரியாக இருந்தால், அந்த பெண்களால் நல்ல முறையில் கருத்தரிப்பதற்காக வாய்ப்புகள் அதிகம். இயல்பான ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை என்றால் என்ன? அதை எப்படி எண்ணுவோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இயல்பான ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை, வயதுக்கு ஏற்ப அளவில் மாறுபடும்.
25 முதல் 32 வயது பெண்களுக்கு 2 சினைப்பையிலும் ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை 15 முதல் 25 வரை இருந்தால் நல்ல விஷயம். இது நன்றாக கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை கொடுக்கும். தோராயமாக ஒரு சினைப்பையில் 8 முதல் 10 ஆன்ட்ரல் பாலிக்கில் இருக்க வேண்டும். 2 சினைப்பையையும் சேர்த்து பார்க்கும் போது 20 முதல் 25 இருக்கலாம். இது இயல்பான தன்மையாகும்.
35 வயதுக்கு மேலே உள்ள பெண்களுக்கும் இதுபோன்று ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை இருக்கலாம். ஆனால் 2 சினைப்பையிலும் சேர்த்து 5-க்கு கீழ் இருந்தால் மிகவும் மோசமான நிலையாகும். இதை எந்த மட்டத்தில் அளவீடு செய்கிறோம் என்றால், பொதுவாக மாதவிடாய் வந்த 2-வது நாள், 3-வது நாளில் இந்த அளவீட்டை எடுப்போம். சினைப்பையில் இருக்கிற 2 எம்எம் முதல் 10 எம்எம் அளவு கொண்ட பாலிக்கில்களை அல்ட்ரா சவுண்ட் மூலமாக அளவீடு செய்வோம்.
சில நேரங்களில் நன்றாக வட்டமாக இருக்கும் பாலிக்கிலுக்கு ஒரு அளவீடு இருக்கும். கொஞ்சம் வடிவம் மாறி இருந்தால் இரண்டு புறத்தையும் அளவீடு எடுத்து சராசரியை பார்ப்போம். இந்த வகையில் எத்தனை எண்ணிக்கை அளவில் பாலிக்கில் இருக்கிறது என்பதை முறையாக எண்ணி அந்த பாலிக்கில் எண்ணிக்கையை பொருத்துதான் இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையை நாங்கள் குறிக்கிறோம்.
ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையை முன்பே கணிப்பது ஏன்?
பொதுவாக இந்த ஆன்ட்ரல் பாலிக்கல் எண்ணிக்கையை எதற்காக முன்பே கணிக்கிறோம் என்றால், ஒரு பெண்ணின் கருத்தரிக்கும் திறனை அறியவும், முட்டைகளின் எண்ணிக்கை தெரிந்து கொள்ளவும் இதனை கணிக்கிறோம். சில நோயாளிகள் எல்லா பாலிக்கில்கள் உள்ளேயும் முட்டை இருக்குமா என்று கேட்பார்கள். ஆனால் எல்லா பாலிக்கில்கள் உள்ளேயும் முட்டை இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
உதாரணத்துக்கு 10 பாலிக்கில்கள் இருக்கிறது என்றால், அதில் 7 முதல் 8 முட்டைகள் கிடைக்கலாம். அதாவது 72 முதல் 80 சதவீதம் வரை முட்டைகள் இருக்கலாம். எனவே ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை 25 ஆக இருந்தால், அந்த பெண்ணுக்கு 15 அல்லது 16 முட்டைகள் நன்றாக கிடைக்கும்.
அந்த வகையில் தான் இயல்பான ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை 20 முதல் 25 வரை கொண்ட பெண்களுக்கு கருத்தரிக்கும் திறனுக்கான வாய்ப்புகள் அதிகம் என்று சொல்கிறோம். ஒருவேளை அவர்களுக்கு செயற்கை கருத்தரிப்பு ஐ.வி.எப். செய்தாலும் அதன் பலன் நன்றாக இருக்கும்.
இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை பொதுவாக எந்த நாட்களில் பார்க்க வேண்டும், எதற்காக பார்க்க வேண்டும் என்கிற விஷயங்களில் சில தெளிவுகள் தேவை. இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை முதலில் பெண்களின் சினைப்பையில் பிரீஆன்ட்ரல் பாலிக்கில் ஆக இருக்கும்.
பின்னர் அந்த பிரீஆன்ட்ரல் பாலிக்கில் சினைப்பையில், ஆன்ட்ரல் பாலிக்கில் ஆக உருமாறும். ஒரு பெண்ணின் சினைப்பையில் பல கோடி முட்டைகள் இருக்கும். தாயின் வயிற்றில் பெண் குழந்தை உருவாகி 5 வார கருவாக இருக்கும் போதே அந்த குழந்தையின் சினைப்பையில் முட்டைகள் உருவாகிவிடும். இந்த முட்டைகள் வளர்ச்சி அடைந்து பின்நாளில் இயல்பான நிலைக்கு வரும்.
வயதுக்கு ஏற்ப ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை எத்தனை இருக்க வேண்டும்?
பிரீஆன்ட்ரல் நிலையில், அதாவது 2 மில்லி மீட்டருக்கு குறைவாக இருக்கும் முட்டைகள் ஸ்கேன் செய்து பார்த்தால் தெரியாது. பின்னர் இந்த முட்டைகள் ஒவ்வொரு மாதமும் வளர்ச்சி அடையும். வளர்ச்சி அடையும் இந்த முட்டைகள் 2 மில்லி மீட்டர் முதல் 10 மில்லி மீட்டர் அளவில் இருப்பதுதான் பின்நாளில் கருமுட்டைகளாக உருவாகும்.
கருப்பையில் முட்டைகள் இருப்பு என்பதை 2வது அல்லது 3வது நாளில் பார்க்கும்போது, அந்தந்த மாதங்கள் வருகிற காலத்தில் குறிப்பிட்ட முட்டைகள் உருவாகி இருக்கும். அதில் ஆதிக்கம் செலுத்தும் தன்மை கொண்ட சில முட்டைகள் தான் இயற்கையாக வளரும்.
நாம் செயற்கை கருத்தரிப்பு செய்வதற்காக மருந்துகள், மாத்திரைகள் கொடுக்கும் போது இந்த முட்டைகளின் எண்ணிக்கையை தூண்டு வதற்கு தான் மருந்துகளை கொடுக்கிறோம். அதனால் முட்டைகள் தூண்டப்படுதல் அதிகமாகிறது. முட்டைகள் தூண்டப்படும் போது உருவாகிற கருவின் திறனும் அதிக மாகும். கருத்தரிப் பதற்கான வாய்ப்புகளும் அதிகமாகும். இதைத்தான் ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையின் அடிப்படையாக கருதுகிறோம்.
பொதுவாக இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை எந்த அளவு இருக்க வேண்டும் என்றால், இயல்பான வயதில் 25 என்று சொல்கிறோம். இதுவே 37, 38 வயது ஆகும் பெண்களுக்கு இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை 10க்கு கீழே வரும். அது ஓரளவு நல்ல நிலை தான். இதுவே 5-க்கு கீழே வந்தால் அவர்களுக்கு மோச மான நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். இதனால் முட்டைகள் குறைவதால் பெண்கள் கருத்த ரிப்பதில் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.
சில நேரங்களில் இருக்கிற எல்லா ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையும் முட்டைகளாக உருவாவது இல்லை. எனவே தான் 7 அல்லது 8 ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை இருந்தால் இவர்களுக்கு 4 முதல் 5 முட்டைகள் உருவாகலாம். இதன் பலன் பொதுவாக மோசமாக இருக்கும் என்று சொல்கிறோம்.
அந்த வகையில் வயதுக்கேற்ற வகையில் இது மாறுபடும். இளம் வயது பெண்களுக்கு ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை 10க்குள் இருந்தால் இவர்களுடைய முட்டைகள் இருப்பு எல்லைக்கோட்டில் இருக்கிறது என்று அர்த்தம்.
டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701
ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையை வைத்து ஐ.வி.எப். சிகிச்சை:
அந்த வகையில் ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை என்பது ஒரு பெண்ணின் சினைப்பையின் முட்டைகள் இருப்பை குறிக்கும் விஷயமாக கருதப்படுகிறது. இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையை வைத்துதான் பொதுவாக ஐ.வி.எப். சிகிச்சை கொடுக்கும் போது முட்டைகளின் எண்ணிக்கை எத்தனை கிடைக்கும்? எந்த அளவுக்கு அந்த முட்டைகள் வளரும்? அதில் எத்தனை முட்டைகள் கருவாகும் என்கிற கணிப்பு மதிப்பீடாக இதை நாங்கள் கருதுகிறோம்.
எனவே 20 முதல் 25 ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை இருந்தால் 10 முதல் 15 நல்ல முதிர்ச்சி அடைந்த முட்டைகள் கிடைக்கும். இந்த முதிர்ச்சியடைந்த முட்டைகள் நன்றாக இருந்தால்தான் இதன் மூலம் உருவாகிற கருவின் கருத்தரிப்பு திறனும் அதிகமாகும்.
எனவே கருத்தரிக்கும் விஷயத்தை இந்த முட்டைகளின் எண்ணிக்கைகளை வைத்துதான் முடிவு செய்ய முடியும். அந்த வகையில் ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு செய்யும் போது, அதற்கான தூண்டுதல் கொடுக்கிற மருந்தின் அளவுகளையும் இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கையை வைத்துதான் நாங்கள் நிர்ணயிக்கிறோம்.
பொதுவாக சினைப்பையில் இயல்பாக முட்டைகள் இருப்பு கொண்ட இளம் பெண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட நாளிலேயே தூண்டுதல் கொடுத்தால், குறிப்பிடத்தக்க அளவில் கருமுட்டைகள் வளரும். அதன் மூலம் முதிர்ச்சியடைந்த நல்ல முட்டைகள் கிடைக்கும். நிறைய ஊசி மற்றும் நிறைய மருந்துகள் கொடுப்பதால் மட்டும் முட்டைகளின் வளர்ச்சி தூண்டப்படுவது இல்லை.
ஆனால் சில காலகட்டங்களில் குறிப்பாக வயதான பெண்களுக்கு முட்டைகள் குறைவாக இருந்தால் அவர்களுக்கு மருந்துகளின் அளவை அதிகப்படுத்துவோம்.
இந்த வகையில் சில மருந்துகளின் அளவை நிர்ணயிப்பதற்கும், அதைப்பொருத்து அவர்களுடைய எதிர்வினை எப்படி முன்னேற்றம் அடையும், எத்தனை முதிர்ச்சி அடைந்த முட்டைகள் வரும் என்பதை கணிப்பதற்கும், இந்த ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை ரொம்ப முக்கியமான ஒன்றாகும்.
பெண்களுக்கு ஆன்ட்ரல் பாலிக்கில் எண்ணிக்கை குறைவதற்கு என்ன காரணம்? அவர்களுக்கான சிகிச்சை முறைகள் என்ன? அவர்கள் குழந்தை பாக்கியம் பெறுவது எப்படி என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.