குருவை காட்டிய திருச்செந்தூர் முருகன்
- குமரகுருபரர் மீனாட்சி அம்மன் சன்னதியில் ‘மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்’ என்னும் நூலை பாடி அரங்கேற்றினார்.
- காசியில் கருடன் வட்டமிட்ட அதிசயம் பலராலும் வியந்து பேசப்பட்டது.
திருச்செந்தூர் முருகனின் அருள் வாக்கைப் பெற்ற நிறைவுடன் அங்கிருந்து குமரகுருபரர் தனது பயணத்தைத் தொடர்ந்தார். மதுரை திருத்தலத்தை அடைந்தார். மீனாட்சி அம்மையை தரிசனம் செய்தார். குமரகுருபரரது புகழைக் கேள்விப்பட்ட திருமலை நாயக்க மன்னர், அவரை அரசவைக்கு அழைத்து கவுரவித்தார். அன்னை மீது பாடல் பாடுமாறு வேண்டினார்.
குமரகுருபரர் மீனாட்சி அம்மன் சன்னதியில் 'மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்' என்னும் நூலை பாடி அரங்கேற்றினார். அதனை மீனாட்சி அன்னையே, ஆலய அர்ச்சகரின் குழந்தை வடிவில் வந்து மன்னன் மடியில் அமர்ந்து கேட்டாள்.
ஒரு கட்டத்தில் குமரகுருபரர் பாடலைக் கேட்டு மனம் மகிழ்ந்த அன்னை, மன்னனின் கழுத்தில் இருந்த மணிமாலையைக் கழற்றி அதனைக் குமரகுருபரரின் கழுத்தில் அணிவித்து விட்டு மறைந்தாள். அது கண்டு அனை வரும் வியந்தனர். குமரகுருபரரைப் பணிந்து தொழுதனர்.
தொடர்ந்து அன்னை மீனாட்சி மீது மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை போன்ற நூல்களை இயற்றினார் குமரகுருபரர், மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கி அரசனுக்கும் மக்களுக்கும் எது நீதி என்பதைப் போதிக்கும் வகையில் 'நீதிநெறி விளக்கம்' என்ற நூலையும் இயற்றியருளினார்.
பின் மன்னரிடம் விடைபெற்று தனது திருத்தல யாத்திரையைத் தொடர்ந்தார்.
திருச்சிராப்பள்ளியை அடைந்தார் குமரகுருபரர் அப்பகுதியை அப்போது ஆண்டு வந்த நாயக்க மன்னர் இவரைப் பணிந்து வரவேற்றார். அங்கு சில நாட்கள் தங்கினார். பின் ஸ்ரீரங்கத்தில் அஷ்டப் பிரபந்தம் பிள்ளைப் பெருமாள் ஐயங்காரைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்தார். சமயவாதிகள் பலரது வேண்டுகோளுக்கிணங்க, பிள்ளைப் பெருமாள் ஐயங்காருடன் சமய வாதம் நிகழ்த்தி வென்றார்.
பல தலங்களைத் தரிசித்துவிட்டுத் தருமபுரம் சென்றார். அத்தலத்தின் ஆதினகர்த்தர் மாசிலாமணி தேசிகரால் வரவேற்கப்பட்டார். ஆதீனகர்த்தர் இவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். குருபரரும் தகுந்த விடைகளை அளித்து அவரை மகிழ்வித்தார் இறுதியில் தேசிகர், பெரியபுராணப் பாடலைக் கூறி, அதன் அனுபவப் பொருளை விளக்குமாறு கேட்டுக் கொண்டார். திகைத்துப் போனார் குமரகுருபரர். அது தில்லையில் உறையும் அம்பலக் கூத்தனின் ஆனந்த நாட்டியத்தைக் கண்டு வார்த்தையற்று மெய்யுருகி நின்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் நிலையைச் சொல்வதாகும்.
அந்த அனுபவத்தை எப்படி அதனைப் பெறாத குமரகுருபரரால் சொல்ல இயலும்? அனுபவித்து அறியவேண்டியதை அவ்வாறு அறியாத அவரால் எப்படி விளக்கிச் சொல்ல இயலும்? அதனால் பதில் கூறமுடியாமல் குமரகுருபரர் மவுனமாகிப் போனார்.
அதே சமயம், "உனது குருவை நீ காணும்போது உன்னால் அவரது கேள்விக்கு பதில் சொல்ல இயலாத நிலை ஏற்பட்டு மவுனமாவாய்" என்ற திருச்செந்தூர் முருகனின் வாக்கு அவருக்கு நினைவுக்கு வந்தது. மாசிலாமணி தேசிகரே தனது குரு என்பதை அடையாளம் கண்டுகொண்டவர், ஆதீனகர்த்தரைப் பணிந்து வீழ்ந்து வணங்கி, தன்னைச் சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார்.
ஆதீனகர்த்தர், இவரைச் சிதம்பரத்துக்குச் சென்று அம்பலவாணரைத் தரிசித்து வருமாறு கூறி அனுப்பி வைத்தார். அவ்வாறே சிதம்பரத்துக்குப் புறப்பட்டார் குமரகுருபரர். சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் எனப் பல தவங்களுக்கும் சென்றார். வைத்தீஸ்வரன் கோவிலில் முருகப்பெருமானை வழிபடச் சென்றபோது, அர்ச்சகர் உருவில் அந்தச் சன்னதிக்கு வந்த ஒருவர், இவருக்குத் திருநீறு அளித்து 'அம்மையைப் பாடியதுபோல் எம்மீதும் ஒரு பிள்ளைத் தமிழ் பாடுவாயாக" என்று கூறினார்.
இவர் புரியாது திகைத்து நிற்கும்போது, புன்னகைத்தவாறே அவர் மறைந்துவிட்டார். வந்தது முருகன்தான் என்பதை அறிந்த குமரகுருபரர், ஆலயத்திலேயே தங்கியிருந்து 'முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்' என்னும் சொற்சுவை, பொருட்சுவை மிக்க நூலை அரங்கேற்றினார். பின் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் தலத்தை அடைந்தார் அங்கு இறைவனைப் புகழ்ந்து, 'திருவாரூர் நான்மணி மாலை' நூலைப் பாடியருளினார் பின்னர் இறுதியாகச் சிதம்பரம் திருத்தவம் சென்றார்.
சிதம்பரம் தலத்து இறைவனைப் புகழ்ந்து சிதம்பர மும்மணிக் கோவை" என்ற நூலை இயற்றித் தொழுதார்.
சைவ சித்தாந்தம் பற்றி சந்தேகம் கொண்டி ருந்தவர்களுக்கு அதுபற்றி விளக்கி அவர்களுக்கு உண்மையைப் புரியவைத்தார். சிவகாமியம்மை மீது 'சிவகாமி இரட்டை மணிமாலை' என்ற நூலையும் இயற்றியருளினார்.
பின்னர் மீண்டும் தருமபுரம் சென்றார், ஆதீனகர்த்தர் ஸ்ரீ மாசிலாமணி தேசிகரை அணுகி, அவரது ஆசி மற்றும் அனுமதி பெற்றுத் துறவு பூண்டார். தம்முடைய ஞானாசிரியரின் பெருமையை விளக்கும் பொருட்டு 'பண்டார மும்மணிக் கோவை என்ற நூலை இயற்றினார். பின்னர் தன் குருநாதரான மாசிலாமணி தேசிகரின் கட்டளைப்படி வடக்கே காசித் திருத்தலம் நோக்கிப் பயணமானார்.
புனித பூமியான காசி நகர் குமரகுருபரரை வரவேற்றது. அங்கு ஒரு சத்திரத்தில் அவர் தங்கினார். அவர் கனவில் காட்சி தந்த கேதாரீஸ்வரர் தாம் பல இடிபாடுகளுக்கிடையே புதைந்திருப்பதாகத் தெரிவித்தார். அதோடு மலைப் பகுதியில் அந்த இடத்தையும் காட்டியருளினார். குமரகுருபரர் மறுநாள் காலை தனது அடியவர்களுடன் தேடிச்சென்று அந்த இடத்தைக் கண்டார். அதனைச் சீர் செய்தவதற்கான வழிமுறைகளில் இறங்கினார்.
அப்போது காசியில் இந்துஸ்தானி மொழி ஆதிக்கம் செலுத்தியது. தாரா ஷூகோ என்ற இஸ்லாமிய மன்னர் ஆண்டு வந்ததால் உருது மொழிக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ் மட்டுமே அறிந்திருந்த குமரகுருபரர் மன்னரின் உதவியைப் பெற்று காசியில் ஒரு மடம் அமைக்க எண்ணினார். அதற்காக மன்னனைச் சந்திக்க அரண்மனைக்குச் சென்றார்.
ஆனால், குமரகுருபரரின் பெருமை அறியாத மன்னன், அவரது எளிய தோற்றத்தைக் கண்டு ஏளனத்துடன் உதாசீனம் செய்தான். அமர்வதற்கு ஆசனமும் கொடுக்கவில்லை. குமரகுருபரர் தனது வேண்டுகோளை முன்வைத்தபோது மிக அலட்சியமாக "நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை. என் மொழியில் பேசினால்தான் நான் உங்களுக்குப் பதில் கூறமுடியும் அதுவும் நான் மதிக்கத்தக்க வகையில் நீங்கள் வந்தால் தான் உங்களுடன் உரையாட முடியும்" என்று ஆணவத்துடன் பதில் அளித்தான்.
மறுநாள் வருவதாகக் கூறிவிட்டுக் கிளம்பினார் குமரகுருபரர்.
மறுநாள் பொழுது புலர்ந்ததும் எழுந்து கங்கையில் நீராடி வந்தார் குமரகுருபரர். பின் கலைவாணியை தியானம் செய்தார். தொடர்ந்து கலைமகளைத் துதித்துப் பாட ஆரம்பித்தார். அந்த வகையில் சரஸ்வதியைப் போற்றும் 'சகலகலாவல்லி மாலை' நூலைப் பாடி முடித்தார். கலைமகளின் அருளால் உடனடியாக அவருள் ஞானம் பொங்கியது. இந்துஸ்தானி மொழியின் வார்த்தைகளும் இலக்கணங்களும் முழுமையாக அறியப் பெற்றார்.
'உன் வாகனத்தைச் சிறிது நேரம் எனக்கு இரவலாகத் தரவேண்டும்' என்று அம்பிகையை வேண்டித் துதித்தார். உடன் அங்கே கர்ஜனை ஒலி கேட்டது. அம்பிகையின் வாகனமான சிங்கம் தோன்றியது. துணையாகச் சில சிங்கங்களும் அங்கே வந்தன. சிங்கம் ஒன்றின்மீது தாவி அமர்ந்து மன்னனைக் காணப் புறப்பட்டார் குமரகுருபரர்.
அரண்மனைக்குள் சிங்கம் நுழைந்ததும் அங்குள்ளோர் அச்சத்தில் சிதறி ஓடினர். சிம்ம கர்ஜனையால் அந்த இடமே போர்க்களம் போல் ஆனது. குமரகுருபரர் சிங்கத்தின் மீது அமர்ந்து வருவதைக் கண்ட மன்னன் தாரா ஷூகோ அதிர்ச்சி அடைந்தான். குமர குருபரரை அலட்சியப்படுத்தி சாதாரணமாக நினைத்து விட்டோமே என்று வருந்தி பயப்பட்டான். பிறகு சிங்கம் மீது ஏறி வந்த தமிழ் முனியைக் கண்டு வியந்தான். அதோடு குமரகுருபரர் மிகப்பெரிய மகாஞானி என்பது புரிந்து பணிந்தான்.
மன்னனிடம் குமரகுருபரர் இந்துஸ்தானி மொழியிலேயே தன் வேண்டுகோளை முன் வைத்தார். மன்னனும் அதனை நிறைவேற்றுவதாக வாக்களித்தான். குமரகுருபரர், காசியில் தான் தங்குவதற்கும் திருமடம் அமைப்பதற்குத் தேவையான நிலம் வேண்டும் என்று கேட்டார். மன்னன் அதற்கு, 'காசியில் கருடன் பறப்பதில்லை. கருடன் வட்டமிட்டால் அது வட்டமிடும் இடம் முழுவதையும் உங்களுக்குக் கொடுக்கிறேன்" என்று வாக்களித்தான்.
மறுநாள் காலை தான் தங்கியிருந்த இடத்திற்கு வருமாறு மன்னனைக் கேட்டுக்கொண்டு விடைபெற்றார் குமரகுருபரர். அதுபோல மறுநாள் குமரகுருபரர் இருக்கும் இடத்திற்குப் பரிவாரங்களுடன் சென்றான்.
குமரகுருபரர் அவனை வரவேற்றார் தியானத்தில் அமர்ந்து சிவபெருமானைத் துதித்தார் உடன் குரலெழுப்பியவாறு வானில் கருடன் தோன்றியது. மன்னன் வியந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே மேலே வட்டமிடத் தொடங்கியது. மூன்று முறை அவ்வாறு வட்டமிட்டுப் பின் விரைந்து பறந்து காணாமல் போனது.
காசியில் கருடன் வட்டமிட்ட அதிசயம் பலராலும் வியந்து பேசப்பட்டது. மன்னனும் தான் கூறியவாறே கருடன் வட்டமிட்ட அந்த நிலப்பகுதியை குமரகுருபரருக்கு தானமாக அளித்தான். அந்த இடம்தான் 'கேதார் காட் பகுதியில் இருக்கும் காசி குமாரசுவாமி மடம் ஆகும். அந்த திருமடத்தில் நாள்தோறும் இந்துஸ்தானி மொழியிலும் தமிழிலும் சொற்பொழிவாற்றித் தமிழுக்கும் சமயத்திற்கும் சேவை புரிந்தார் குமரகுருபரர். கம்ப ராமாயணம் குறித்து அவர் ஆற்றிய சொற்பொழிவுகளைத் துளசிதாசர் தினந்தோறும் வந்து கேட்டதாக ஒரு நம்பிக்கை உண்டு.
காடுகளாலும், கட்டிடங்களாலும் குழப்பட்டிருந்த கேதாரேஸ்வரர் ஆலயத்தைப் புதுப்பித்து தினந்தோறும் பூஜைகள் நடக்க ஏற்பாடு செய்தார். பல ஆண்டுக் காலம் காசியில் வாழ்ந்த குமரகுருபரர் தனது குருவைத் தரிசிக்கும் ஆசையில் மீண்டும் தமிழகம் திரும்பினார். குருவைத் தரிசித்தார்.
குருவுடனேயே இறுதிவரை வாழ வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார். குருவோ காசியிலேயே இருந்து தொண்டாற்றி வரும்படிச் சீடரைப் பணித்தார். அதனை ஏற்று மீண்டும் காசிக்குத் திரும்பி தன் இலக்கிய, ஆன்மீக சேவைகளைத் தொடர்ந்தார் குமரகுருபரர்.
காசியில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திச் சைவத்தின் பெருமையைப் பரப்பினார். மாற்று மதத்தவரும் மதிக்கத்தக்க மகாஞானியாய் அவர் விளங்கினார். அத்தலத்தின் முக்கியத் தெய்வமான துண்டி விநாயகர் மீது 'காசி துண்டி விநாயகர் பதிகம் பாடினார்.
காசியின் புகழைக் கூறும் 'காசிக் கலம்பகம்' என்னும் நூலை இயற்றியருளினார். நேபாள நாட்டின் 'மோரங்கி' என்ற ஊரிலும் தன் காலத்தில் கிளை மடம் ஒன்றை ஸ்தாபித்தார் குமரகுருபரர்.
காசியில் மகாஞானியாக வாழ்ந்த குமரகுருபரர். 1668-ம் ஆண்டு வைகாசி மாதம் பவுர்ணமியை அடுத்த மூன்றாம் நாள், திருதியை திதியில் மகா சமாதி அடைந்தார். ஆண்டுதோறும் அவரது குருபூஜை குமாரசாமி மடத்தினரால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
குமரகுருபரர் காசி சென்று ஆன்மிக சேவை செய்ததற்கு அடித்தளமாக இருந்தது திருச்செந்தூர் முருகனின் அருளே என்பது குறிப்பிடத்தக்கது. திருச்செந்தூர் முருகனின் மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் காணலாம்.