60 வயதிலும் ஆரோக்கியமான தோற்றம்!
- வெயிலில் செல்லும்போது குடை எடுத்து செல்லுங்கள்.
- அன்றாடம் லிப்ஸ்டிக் பயன்படுத்துபவர்கள் வாழ்நாளில் 4½ கிலோ வரை லிப்ஸ்டிக் சாப்பிடுகின்றார்கள்.
தோற்றம் என்பது அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் படாதபாடுபடுகின்றனர். வெறும் மேக்கப் போட்டு இருக்கும் குறைகளை மறைக்க முயலும்போது அது அவரை பற்றி நன்கு சொல்லி விடும். ஆரோக்கிய குறைபாடு தெரியும். முறையாய் பராமரிக்காத சோம்பறித்தனமும் தெரியும். போதிய அளவு நம் தோற்ற பராமரிப்பினை நன்கு அறியவில்லை என்று காட்டி விடும். இங்கு கூறப்படுபவை 60 வயது இளம் வயது போல் தன்னைக் காட்டிக் கொள்வது அல்ல. 60 வயது தோற்றத்திலும் ஆரோக்கியமாக இருப்பதனைப் பற்றியதுதான்.
ஒருவருக்கு முகம் என்பது மிக முக்கியம். தலை என்பது மிக முக்கியம். எண்ணை வடியும் தலையும், முகமுமாக இருந்தால் அவர்கள் சொல்லும் நல்ல கருத்துகள் கூட வரவேற்கப்படாமல் போகலாம். ஆக அன்றாடம் முகத்தினை பராமரிப்பு என்ற வகையில் சில நிமிடங்கள் கொடுத்தால் தான் முகம் 'பளிச்'சென்று இருக்கும். கோடை காலமும் ஆரம்பித்து விட்டது. நம்ம ஊர் கோடையைப் பற்றி சொல்லவா வேண்டும். எனவே தினம் இருமுறை முகத்தினை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
இதற்கான உபயோகப் பொருட்கள் தனிப்பட்ட நபரின் சரும நிலைக்கேற்ப மாறும். அலர்ஜி, சரும பாதிப்பு, பருக்கள் என சில பாதிப்புகள் நம் முகத்தினை உண்டு, இல்லை என ஆக்கி விடும். தலையில் தீராத பொடுகு பிரச்சினை உள்ளவர்கள் முகத்தில் ஏதோ பாதிப்புடன் இருப்பார்கள். இது ஒருவரின் தன்னம்பிக்கையினை குறைத்து விடும். எனவே முதலில் இதற்கான சரும சிகிச்சை சரும நிபுணர் மூலம் செய்வது அவசியம். இதற்கான சில உணவு முறை மாற்றங்களும் தேவைப்படலாம். குடல் சுத்தம், குடல் ஆேராக்கியம் மிக அவசியம் ஆகின்றது. பொதுவில் மாலையில் வீடு திரும்பிய பின் முகத்தினை கழுவுவது என்பது தூசுகள் அடையாமல் பாதுகாக்கும்.
முகத்திற்கு என தனி பராமரிப்பு முறைகள் வந்துள்ளன. அதற்கான முறைகளை அனைவருமே ஒரு சரும நிபுணரிடம் கேட்டு பயன்படுத்த வேண்டும். மாஸ்ட்சரைஸர், சன் ஸ்கீரின் இவை இன்று அவசியம்தான். பொதுவில் நான் பார்த்த வரையில் சிலர் அன்றாடம் முகத்தில் தேங்காய் எண்ணை அல்லது நல்ல எண்ணை அல்லது பாதாம் எண்ணை தடவி சில நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்து கடலை மாவு, ப.மாவு கொண்டு முகத்தினை சுத்தம் செய்கின்றனர். கேரளாவிலும், வடஇந்தியாவிலும் இம்முறை அதிகம் பின்பற்றப்படு கின்றது. அது போல் வெயிலில் சென்று வந்தவுடன் இரண்டு விலை வெள்ளரிக்காயினை முகம், கைகளில் தேய்த்து கழுவி விடுகின்றனர். யதார்த்தமான இயற்கை முறையில் ரசாயன கலப்பு இன்றி இருப்பதால 'பளிச்'சென இருக்கின்றனர். செலவும் வெகு குறைவு. இது அவரவரர் வசதி, விருப்பத்தினை பொறுத்தது. அதிக வெயில், தூசு கொண்ட சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாய் சிறப்பு கவனிப்பு தேவைப்படும். இதனையெல்லாம் விட்டு வெறும் மேல் பூச்சு மட்டும் பலன் தராது.
போதுமான, தேவையான அளவு நீர் குடித்தாலே முகம் பொலிவாக இருக்கும். உடல் வறட்சி இன்றி இருக்கும்.
இரவில் ரெடினல் கிரீம் உபயோகிப்பது, பகலில் வைட்டமின் 'சி' சீரம் உபயோகிப்பது போன்ற நவீன முறைகள் பிரபலமாய் உள்ளன. ஆனால் இவையெல்லாம் சரும நிபுணரின் முறையான பரிந்துரை இன்றி எடுத்துக் கொள்ளக் கூடாது.
சிலர் முகத்தினை விரல்களால் அடிக்கடி தொடுவார்கள். முரட்டு தனமாக தேய்த்து கொள்வார்கள். இது பல கிருமிகள் தாக்குதலை உருவாக்கும். மென்மையான தசைகள் என்பதால் பொலிவு இறங்கி விடும்.
பலருக்கு குப்புறப்படுத்தே தூங்கும் பழக்கம் உண்டு. இது ஆரோக்கியத்தினை பாதிப்பதுடன் முகத்தில் அதிக சுருக்கங்களை ஏற்படுத்தும். தலையணை உறை மென்மையான பட்டில் இருப்பது முகத்திற்கு பலம்.
தலைமுடி- வகை வகையான ஷாம்புக்களை தினமும் உபயோகிப்பது இன்றைய தலைமுறையின் வழக்கமாகி விட்டது. இது முடியின் இயற்கை வளத்தினை நீக்கி வறட்சி ஆக்கி விடுகின்றது.
வாரம் இரு முறை எண்ணை மசாஜ், ஆயுர்வேத சீயக்காய் அல்லது தரமான ஷாம்பு போதும். தலைக்கு மூலிகை பொடி கொண்டு வாரம் ஒருமுறை மாஸ்க் போட்டாலே முடி வலுப்பெறும். தலைமுடி சிறப்பாய் இருக்க சத்தான உணவு அவசியம்.
வெயிலில் செல்லும்போது குடை எடுத்து செல்லுங்கள். வெள்ளை நிற குடைகளை உபயோகிக்க வேண்டும். சூடு உள்ளே இறங்காது வெள்ளை நிறம் காக்கும். தினமும் விதம் விதமான தலைமுடி அலங்காரம் அதற்கு ஸ்பிரே என வேண்டாமே. ஆரோக்கியமான கூந்தல் தரும் அழகினை எந்த ஸ்டைலும் தராது. நாம் இருப்பது உஷ்ணம் மிகுந்த பூமி. குளிர்ச்சியான பொருட்கள் போதும். நெல்லி, எலுமிச்சை, வெந்தயம், அரிசி கஞ்சி இவைதான் நம்ம ஊர் பொக்கிஷங்கள்.
மேக்கப்- மிக அளவான மேக்கப் கம்பீரமான தோற்றத்தினைத் தரும். மேக்கப் என்பதே அவசியப்படும்போது மட்டுமே என வைத்துக் கொள்ள வேண்டும். திருத்திய புருவம், கண் மை, எளிதான முகப்பவுடர் இவை வீட்டில் இருக்கிறது. இது போதுமே. மற்றபடி மேக்கப் சில குறைபாடுகளை தவிர்க்க இருக்கலாம். ஆளே அடையாளம் தெரியாத அளவு மேக்கப் என்பது தேவைதானா? வெளியில் செல்லும்போது, வேலைக்குச் செல்லும்போது அளவாக உபயோகிப்பதும் பின்னர் அதனை முறையாய் சுத்தம் செய்து சருமத்தினை பாது காப்பதும் இன்றைக்கு தேவையான ஒன்றாகி விட்டது. எதுவும் இயற்கை யோடு ஒத்து இருப்பதே அழகு.
நகம் பராமரிப்பு- இது கண்டிப்பாய் கவனம் கொடுக்க வேண்டிய ஒன்று தான். இங்கு நான் விதவித மான நிறங்கள், டிசைன்களில் நகம், பூச்சினைப் பற்றி குறிப்பிடவில்லை. நகம் பாதுகாப்பு, நகம் ஆரோக்கியம் பற்றி மட்டுமே எழுதுகின்றேன்.
* வேலை செய்யும்போது அதாவது சுத்தம் செய்யும்போது, தோட்ட வேலை செய்யும்போது கையுறை அணிந்து கொள்ளுங்கள். கால்களில் சாக்ஸ் போட்டு காலணி அணியுங்கள்.
* நகங்களை மிக மிக நீளமாக வளர்ப்பது பல பிரச்சினைகளையே தரும். முறையாய் வெட்டி விடுங்கள்.
* நகங்களுக்கு மாஸ்ட்ரைசர் கண்டிப்பாய் தடவ வேண்டும்.
* எப்போதும் நகப்பூச்சு என்பது நகரங்களை பொலிவிழக்கச் செய்து விடும்.
* மருதாணி வைத்துக் கொள்ளலாம். நகப்பூச்சினை விட மேலானது. இயற்கையான, சுத்தமான, பளிச்சென்ற நகரங்களே உண்மையான அழகு.
* நகம் கடிக்கும் பழக்கத்தினை நிறுத்துங்கள்.
உடல்- முகம் வரை அக்கறை கொடுக்கும் சிலர் கழுத்தினை கூட உரிய கவனம் கொடுக்க மாட்டார்கள். உடலினைப் பற்றி கவனம் சிறிதும் இருக்காது.
* அன்றாடம் ஏதோ ஒரு சோப்பினைக் கொண்டு குளிப்பது மட்டும் குளியல் ஆகாது.
* உடல் சருமம் வறண்டு விடாமல் இருக்க தரமான 'பாடி வாஷ்' பல கம்பெனிகள் அறிமுகப்படுத்தி உள்ளன. சரும வாகிற்கேற்ப ஆய்ந்து அதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* குளிப்பதற்கு முன்பு ஒரு துண்டு முடிந்தால் பூதுவாலை கொண்டு உடலில் மென்மையாக தேய்க்கவும். இது நல்ல ரத்த ஓட்டத்தினை ஏற்படுத்தும். ருணநீர் மண்டலமும் சீராய் இயங்க முடியும்.
* குளிக்கும்போது உலர் பீர்க்கங்காய் நாரினை நன்கு நீரினில் நனைத்து மென்மையாகத் தேய்க்கலாம்.
* மாஸ்ட்ரைசர், சன்ஸ்கிரீம் இரண்டுமே அவசியத் தேவை ஆகின்றது.
* பாதத்தினையும் மாஸ்ட்ரைஸ் செய்ய வேண்டும்.
* வீட்டில் இருக்கும்போது சத்தான எண்ணை சிறிது உடலுக்கு தடவலாம்.
* தோற்றப் பொலிவு பராமரிப்பு என்பது குறைந்தது 6000 வருடங்களுக்கு முற்பட்டது. ஆனால் இதற்கும் மிக மிக அதிகமாகவே குறிப்பிடுகின்றனர்.
* சிகப்பு நிற 'லிப்ஸ்டிக்' மேலை நாடுகளில் அதிகம் பயன்படுத்துவதன் காரணம். இந்நிறம் ஒருவரை இளமையானவராகக் காட்டுமாம்.
* கடலில் இருந்து எடுக்கப்படும் சில பொருட்களைக் கொண்டு செய்யும் அழகு சாதனங்கள் சருமத்திற்கு சிறந்தனவையாக இருக்கின்றனவாம்.
கமலி ஸ்ரீபால்
* வைட்டமின் 'எ' கொண்ட கிரீம்கள் சருமத்தினை பாதுகாக்கின்றன.
* சீரம் என்பது சருமத்தால் உடனடி உறிஞ்சப்படும். வைட்ட மின் 'சீ' சீரம் மிகவும் அழகு நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
* வைட்டமின் டி கொண்ட பவுடர் சரும பராமரிப்பில் இடம் பெற்று உள்ளது.
* வைட்டமின் 'ஈ' கொண்ட கிரீம்கள் மூப்பு தோற்றத்தினை குறைக்கும் தன்மை கொண்டது.
* எஸ்.பி.எப். என்றெல்லாம் சன் ஸ்கிரீம் பார்க்கின்றோம். வெயிலில் இருந்து சருமத்தினை பாதுகாத்து இளமையாய் வைக்கின்றது.
* சாட்டின், பட்டு தலையணை பயன்படுத்துங்கள்.
* சருமத்தில் தடவும் எதுவும் 60 சதவீதம் வரை உள்ளே உறிஞ்சப்படுகின்றதாம்.
* அன்றாடம் லிப்ஸ்டிக் பயன்படுத்துபவர்கள் வாழ்நாளில் 4½ கிலோ வரை லிப்ஸ்டிக் சாப்பிடுகின்றார்கள்.
* நாள் ஒன்றுக்கு 5 இமை முடிகளாவது உதிரும்.
* வெதுவெதுப்பான நீர் குளிப்பதற்கு ஏற்றது.
* குளித்து முடித்தவுடன் மாஸ்ட்ரைஸ் செய்வது நல்லது.
* நல்ல தூக்கம் அழகின் அடிப்படை.