தோஷங்கள் நீக்கும் ஆலய வழிபாடு: மாங்கல்ய தோஷமா-மங்கலகுடி செல்லுங்கள்
- 8-ம் இடத்தில் கிரக அமைப்புகள் சரியாக அமையவில்லை என்றால் அதைத்தான் மாங்கல்யதோஷம் என்று சொல்வார்கள்.
- சில ஜோதிடர்கள் மாங்கல்ய தோஷம் உடைய பெண்ணை திருமணம் செய்தால் கணவன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூட பூச்சாண்டி காட்டுவார்கள்.
பெண்களின் ஜாதகத்தில் கிரகண அமைப்புகள் சரியாக இல்லாவிட்டால் திருமணம் கைகூடுவது தாமதம் ஆகி கொண்டே இருக்கும். ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கை மற்றும் கோச்சார நிலையில் தோஷங்கள் காணப்பட்டால் பெண்களுக்கு உரிய வயதில் திருமணமாவதை அவை தடுக்கும்.
பொதுவாக ஜோதிட ரீதியாக சொல்லும் போது ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 8-வது இடத்தை முக்கியமாக சொல்வார்கள். ஏனெனில் 8-ம் இடம் என்பதுதான் பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானமாகும். பெண்களில் தாம்பத்யம் மற்றும் ஆயுள் ஆகியவற்றையும் இந்த இடம்தான் தீர்மானிக்கும்.
8-ம் இடத்தில் கிரக அமைப்புகள் சரியாக அமையவில்லை என்றால் அதைத்தான் மாங்கல்யதோஷம் என்று சொல்வார்கள். ஜோதிடத்தில் 2-ம் இடத்து கிரகம் 8-ம் இடத்தையும், 8-ம் இடத்து கிரகம் 2-வது இட கிரகத்தையும் பார்க்கும். இந்த கிரக அமைப்பு சுத்தமாக இருக்க வேண்டும். இந்த இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு-கேது ஆகியவை இருந்தால் அது அவ்வளவு திருப்தியாக கருதப்படமாட்டாது.
8-ம் இடத்தில் இந்த கிரகங்கள் இருப்பதையே ஜோதிடர்கள் மாங்கல்ய தோஷம் என்று சொல்கிறார்கள். எனவேதான் மணமகன் குடும்பத்தார் ஒரு பெண்ணின் ஜாதகத்தை பொருத்தம் பார்க்கும் போது முதலில் அந்த பெண்ணின் ஜாதகத்தில் 8-வது இடத்தின் கிரக அமைப்பு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பார்கள்.
8-ம் இடத்தில் சரியில்லாதபடி கிரகங்கள் இருந்தால் அந்த அமைப்புக்குரிய பெண் அதிகமாக பேசுவாள். வாக்குவாதம் செய்வாள் என்றெல்லாம் ஜோதிடர்கள் கணிப்பதுண்டு. இந்த வாக்குவாதம் கணவன் அல்லது கணவன் குடும்பத்தாருடன் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும் என்றும் கருதுவார்கள்.
சில ஜோதிடர்கள் மாங்கல்ய தோஷம் இருந்தாலே கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு வந்துவிடும் என்று சொல்லி விடுவதுண்டு. மாங்கல்யதோஷம் மிக கடுமையாக இருக்கும் ஜாதகத்துக்குரிய பெண் பிரிந்து வாழ நேரிடும் என்றும் ஜோதிடர்கள் பயம் காட்டுவார்கள். சில ஜோதிடர்கள் மாங்கல்ய தோஷம் உடைய பெண்ணை திருமணம் செய்தால் கணவன் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூட பூச்சாண்டி காட்டுவார்கள்.
இதனால்தான் மாங்கல்ய தோஷம் என்றதும் பெரும்பாலான மணமகன் வீட்டார் அந்த பெண்ணின் ஜாதகத்தை ஓரங்கட்டி விடுவார்கள். ஆனால் 8-ம் இட கிரக அமைப்பில் குறை இருப்பதாக கருதப்படும் எல்லா பெண்ணின் ஜாதகத்தையும் கண்ணை மூடிக்கொண்டு மாங்கல்ய தோஷம் என்று சொல்லி விட முடியாது. ஏனெனில் மற்ற கிரக அமைப்புகள் பார்வைபடும் பட்சத்தில் மாங்கல்யதோஷத்தின் வீரியம் குறைந்து விடுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
அதாவது 8-ம் இடத்தை சுப கிரகங்களான சுக்கிரன், குரு பார்த்தால் மாங்கல்யதோஷம் வலுவில்லாமல் இருக்கும். இத்தகைய ஜாதக அமைப்பை பெரும்பாலான ஜோதிடர்கள் மாங்கல்ய தோஷம் என்று சொல்வதில்லை.
எனவே மாங்கல்யதோஷம் பற்றிய தகவல்களை நன்கு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். ஜோதிடர்கள் மாங்கல்ய தோஷத்துக்குரிய பெண் குடும்பத்தாரிடம் பல்வேறு பரிகாரங்களை சொல்வதுண்டு. மாங்கல்ய தோஷம் இருப்பது உறுதியாக தெரிய வந்தால் சில எளிய பரிகாரங்கள் மூலம் அதை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். மாங்கல்யதோஷத்தை நினைத்து பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.
மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறப்படும் ஜாதகத்துக்குரிய பெண் செவ்வாய்க்கிழமை தோறும் முருகனை வழிபட்டு வந்தாலே 99 சதவீத ேதாஷத்தில் இருந்து விடுபட்டுவிட முடியும். வாய்ப்பு இருக்கும் பெண்கள் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகனை வழிபடலாம்.
வசதி உள்ள பெண்களாக இருந்தால் அதற்கேற்ப பரிகாரம் செய்யலாம். எத்தனையோ ஏழை பெண்கள் திருமணத்திற்கு ஒரு பவுன் மாங்கல்யம் வாங்ககூட வசதி இல்லாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான திருமாங்கல்யத்தை தங்கத்தில் தானமாக வாங்கி கொடுத்தால் எவ்வளவு பெரிய மாங்கல்ய தோஷமாக இருந்தாலும் விலகிவிடும்.
வயதான சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு மற்றும் தட்சணை வைத்து கொடுத்து ஆசீர் பெறலாம். பெண்களை வீட்டுக்கு அழைத்து சுமங்கலி பூஜை நடத்தலாம். இத்தகைய பூஜையை சற்று பெரிய அளவில் செய்ய வாய்ப்பிருக்கும் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலி பெண்களை அழைத்து மகாலட்சுமி பூஜை நடத்தலாம்.
இதைதவிர ஹோமம் வளர்த்து பூஜை செய்வதன் மூலமாகவும் மாங்கல்ய தோஷத்தில் இருந்து விடுபட முடியும். ஜோதிடரிடம் கேட்டு உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட நாளில் வீட்டிலேயே மிருத்தியுஞ்சய ஹோமம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த ஹோம வழிபாடு மாங்கல்யதோஷத்தை நிவர்த்தி செய்யும் மிக மிக வலுவான பூஜையாகும்.
வன்னி மரத்திற்கு அடியில் இருக்கும் விநாயகரை மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் வழிபட வேண்டும். அன்றைய தினம் 9 கன்னிப்பெண்களுக்கு ஆடை தானம் செய்தால் மாங்கல்யதோஷம் விலகும்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலை 8 மணி முதல் 9 மணிக்குள் சுக்கிரன் ஓரை நேரத்தில் வயது முதிர்ந்த சுமங்கலி பெண்களிடம் மங்கலகரமான பொருட்களை கொடுத்து அவர்களது காலில் விழுந்து ஆசீ பெற வேண்டும். அடிக்கடி இப்படி செய்து வந்தால் மாங்கல்யதோஷம் விலகும் என்று ஜோதிட சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
சில ஜோதிடர்கள் மாங்கல்யதோஷத்தை கழிப்பதற்கு சில நடைமுறைகளை சொல்லி இருப்பதும் தமிழகத்தில் பழக்கத்தில் இருக்கிறது. புதிதாக தங்கத்தில் தாலி வாங்கி அதை குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்துக்கு முன்பு வைத்து வணங்கி அதை மாங்கல்யதோஷத்தில் உள்ள பெண்கள் கழுத்தில் கட்டி விடுவார்கள். 2 மணி நேரம் கழித்து இந்த தாலியை அவிழ்த்துவிடுவார்கள். எந்த பெண் தாலியை கட்டினாரோ அதே பெண்தான் தாலியை அவிழ்க்க வேண்டும்.
பிறகு அந்த தாலியை குல தெய்வம் கோவிலில் காணிக்கையாக செலுத்தி விட வேண்டும். இப்படி செய்தால் மாங்கல்ய தோஷம் கழிந்து விடும் என்று கருதுகிறார்கள். இத்தகைய பரிகார பூஜையை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் செய்யக்கூடாது என்பது முக்கிய குறிப்பாகும்.
செவ்வாய்க்கிழமைகளில் எமகண்டம் இருக்கும் நேரத்தில் பைரவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து விராலி மஞ்சள் மாலை சூடி மஞ்சள் கயிறு வைத்து சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், பானகம் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். அப்போது பைரவர் சன்னதிக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து ஆசி பெற்றால் தோஷம் விலகும் என்பது ஐதீகமாகும்.
இன்னும் இந்த தோஷத்தை சிறப்பாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் எந்த கிரகத்தினால் மாங்கல்ய தோஷம் ஏற்பட்டு உள்ளது என்பதை ஜோதிடர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதனடிப்படையில் கிரகத்துக்கு ஏற்ப பரிகாரம் செய்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தி உண்டாகும்.
ராகு மூலம் மாங்கல்யதோஷம் ஏற்பட்டிருப்பதாக ஜோதிடர் தெரிவித்தால் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். துர்க்கைக்கு எலுமிச்சை மாலை அணிவித்து எலுமிச்சை சாதம் படைத்தும் வழிபடலாம்.
ஆலயத்துக்கு சென்று மாங்கல்யதோஷம் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று ஜோதிடர் தெரிவித்தால் முதலில் தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கல குடியில் இருக்கும் ஆலயத்துக்கு தான் செல்ல வேண்டும். அந்த ஆலயத்தில் உள்ள மங்கலநாதரான பிராணநாத சுவாமியையும், மங்கல நாயகியான மங்களாம்பிகையையும் வழிபட்டாலே போதும் மாங்கல்ய தோஷத்தின் கடுமை உடனடியாக குறைந்து விடும்.
இந்த தலம் நவக்கிரகங்களின் தோஷத்தை நீக்கிய அபூர்வ தலமாகும். இங்கு மங்கள நாயகியின் திருக்கரத்தில் இருக்கும் மாங்கல்ய சரடு பெண்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. மங்களாம்பிகைக்கு 5 வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால் எவ்வளவு பெரிய மாங்கல்ய தோஷமும் விலகிவிடும் என்பது ஐதீகமாகும்.
மங்களநாயகியை எந்த அளவுக்கு பெண்கள் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு மாங்கல்ய தோஷம் விலகி விரைவில் திருமணம் கைகூடும். அதுமட்டுமின்றி மற்ற தோஷங்களையும் விலக வைத்து தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியத்தை தரும் சிறப்பு திருமங்கலகுடி தலத்துக்கு உண்டு.
இந்த தலத்தில் பூர்வ ஜென்ம தோஷங்கள், பித்ரு தோஷங்கள் விலக வழிபாடுகள் உள்ளன. எனவே மாங்கல்யதோஷம் என்று ஜாதக அடிப்படையில் கூறப்பட்டால் அதற்குரிய பெண்கள் திருமங்கல குடியில் பூஜை செய்து எளிதில் மனதில் திருப்தி ஏற்படுத்திவிட முடியும்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள பிரளயநாதர் கோவில், புதுக்கோட்டை கல்யாண ராமர் கோவில், தஞ்சை மாவட்டம் கீழவாசல் வல்லவ விநாயகர் கோவில், திண்டுக்கல் அபயவரதர் ஆஞ்சநேயர் கோவில், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள விஸ்வநாதர் கோவில், மதுரை மாவட்டம் பாலமேட்டில் உள்ள நாகம்மாள் கோவில், மதுரையில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில் ஆகியவையும் மாங்கல்யதோஷ பரிகாரத்துக்குரிய ஆலயங்களாகும்.