சிறப்புக் கட்டுரைகள்

மொபைல் மணிபர்ஸ்

Published On 2023-10-21 15:59 IST   |   Update On 2023-10-21 15:59:00 IST
  • சாதாரண மக்களிடையே அதிகம் புழங்க ஆரமித்திருப்பது இந்த மொபைல் மணிபர்ஸ் எனப்படும் மொபைல் வாலட்ஸ்.
  • மொபைல் மணி பர்ஸ் மிக நல்ல தொழில் நுட்ப அனுகூலம்தான். ஆனால் அதிலுமே கொஞ்சம் சூதனமாக இருத்தல் மிக அவசியம்.

சென்ற கட்டுரையில் ஆன்லைனில் பணம் செலுத்த உதவும் டிஜிட்டல் பர்ஸ் தொடங்கினது பற்றி விரிவாகப்பார்த்தோம்.

ஓரிரண்டு வருடங்கள் வரை இந்த இணைய மொபைல் பணப்பரிவர்த்தனை சேவைகளை வெளி நாட்டு உள்நாட்டு தனியார் கம்பெனிகளே நடத்தி வந்தன. இப்போது அரசாங்கமே பலவித இணைய, மொபைல் வழி மென்பொருள் சார்ந்த சேவைகளை சார்ஜ் ஏதுமில்லாமல் இலவசமாகவே ஆரம்பித்துவிட்டது. நான் சொன்னவையெல்லாம் அப்படிப்பட்ட கரன்சி இல்லாப்பணப்பரிவர்த்தனை சேவைகள் மற்றும் தொழில் நுட்பங்களே!

"ஏன் மேடம் கேஷ் தர்ரீங்க? பே டி எம்ல தந்தா, அதுக்கு குலுக்கல் முறையில லாட்டரி வெச்சிருக்கோம். இண்டக்ஷன் ஸ்டவெல்லாம் பரிசுல இருக்கு!"

சமீப காலங்களில் இந்தக்கரன்சி இல்லாப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க ஏராளமான தள்ளுபடி விற்பனை, குலுக்கல் முறைப்பரிசுகள் என்று பல்வேறு ஊக்கங்கள் வந்துவிட்டன.

சாதாரண மக்களிடையே அதிகம் புழங்க ஆரமித்திருப்பது இந்த மொபைல் மணிபர்ஸ் எனப்படும் மொபைல் வாலட்ஸ்.

பல தனியார் நிறுவனங்கள் இந்த மொபைல் மணிபர்ஸ் சேவைகளைத் துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றன. அவை சேவைக்கான விலையாக ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தனி சார்ஜ் போட்டு வசூலித்து வந்தனர். ஆனால் மார்க்கெட்டில் இது போன்ற பல நிறுவனங்கள் மொபைல் மணிபர்ஸ் சேவையைத்தொடங்கிவிட, போட்டியை எதிர்கொள்ள ஒரு பக்க சார்ஜைக்கைவிட்டுவிட்டன. உதாரணமாக பே பால் கலிபோர்னியாவில் ஆரம்பிக்கப்பட்ட தொழில் நுட்ப தள நிறுவனம். இதில் நாம் ஒரு அக்கவுன்ட் தொடங்கிக்கொள்ளலாம். இந்த அக்கவுன்ட் என்பது நாம் பாங்கில் தொடங்குவது போல இல்லை. எல்லாமே இணையத்தின் மூலம்தான். செக், பாஸ்புக் போன்றபேப்பர் சமாச்சாரம் ஒன்றும் கிடையாது. உங்கள் கிரெடிட் கார்டோ அல்லது பாங்க் அக்கவுண்டின் மூலமோ இந்த பே பால் கணக்கில் பணம் நிரப்பிக்கொள்ளலாம். பிறகு பே பாலில் உள்ள உங்கள் கணக்கு வழியாக கரன்சி இல்லாப்பரிவர்த்தனை செய்து பொருளோ சேவையோ வாங்கலாம். இதற்கு சார்ஜ் ஒன்றும் கிடையாது. ஆனால் நீங்கள் ஒரு பொருளையோ அல்லது உங்களின் சேவையையோ விற்கும் பட்சத்தில் உங்களின் கஸ்டமர் அவரின் பே பால் மூலம் உங்கள் பே பாலுக்கு பணம் செலுத்தும்போது, அதாவது நீங்கள் பணம் பெறும் வகைப்பரிவர்த்தனைகளுக்கு சார்ஜ் உண்டு.

பே பால் அக்கவுண்ட்டில் உங்கள் கிரெடிட் கார்டை, ஒன்றுக்கு மேலானாலும் கூட, இணைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் பே பால் அக்கவுண்ட்டின் மூலம் பரிவர்த்தனை செய்யும்போது எந்த கிரெடிட் கார்டு மூலம் செலுத்த வேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்து உபயோகிக்கலாம். ஒரு வேளை பே பால் அக்கவுண்ட்டில் பணம் இல்லை எனும்போது அவசர தேவைக்கு உங்கள் கிரெடிட் கார்டு மூலம் அட்வான்ஸ் பணமும் எடுக்க முடியும். ஆனால் இந்த அட்வான்சுக்கு சார்ஜ் உண்டு.

நம் ஊரிலும் பே பால் போல ஏகப்பட்ட மொபைல் மணிபர்சுகள் வந்துவிட்டன. பே டி எம், பிரு சார்ஜ், பே யூ மணி, மொபிக்விக், ஓலா மணி, எம் பைசா, ஏர்டெல் மணி போன்ற எல்லா மொபைல் பணப்பைகளுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இயங்குகின்றன.

இந்த மொபைல் மணிபர்சுகளில் பிரீபெய்ட்போஸ்ட் பெயிட் என்னும் வகைகள் உண்டு. பிரீபெய்ட் வகையில் நீங்கள் உங்கள் அக்கவுண்ட்டில் முதலிலேயே பணத்தை ஏற்றிக் கொள்ள வேண்டும். அதுவும் இணையத்தின் மூலமாக உங்கள் வங்கிக்கணக்கில் இருந்தோ அல்லது கிரெடிட் கார்டு மூலமாகவோ ஏற்றிக்கொள்ளலாம். போஸ்ட் பெயிட் வகையில் உங்கள் கிரெட் கார்டையோ அல்லது வங்கிக்கணக்கையோ இணையத்தின் மூலம் இணைத்துக்கொண்டு பரிவர்த்தனை செய்யலாம்.

இன்னொரு விஷயம் நீங்கள் கவனிக்க வேண்டியது இந்த மொபைல் மணிபர்ஸ் திறந்த வகையா அல்லது மூடின வகையா என்பது. இணைய தளத்தில் நீங்கள் ஒரு பொருளை வாங்கி மொபைல் மணிபர்ஸ் மூலம் செலுத்திய பிறகு ஏதோ ஒரு காரணத்தினால் அந்தப்பொருளைத்திருப்பி விடுகிறீர்கள். நீங்கள் செலுத்திய பணத்தை கம்பெனி இப்போது மீண்டும் உங்கள் மொபைல் மணிபர்சுக்கு திருப்பிக்கொடுத்து விடும். மூடின வகை பணப்பையாக இருந்தால் அந்தப்பணத்தை நீங்கள் மீண்டும் இன்னொரு செலவுக்குத்தான் பயன்படுத்த முடியும். ஆனால் திறந்த வகை பணப்பையில் அந்தப்பணத்தை நீங்கள் மறுபடியும் உங்கள் பாங்க் அக்கவுண்ட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.

தாமதமாக வந்த போதிலும், கூகுளின் வளர்ச்சி மிக விரைவாக இருக்கிறது. இது தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பணப்பைகள் மற்றும் இந்தியாவில் உள்ள சிறந்த ஆன்லைன் கட்டண பயன்பாடுகளில் ஒன்றாகும். கூகுள் பே மூலம் ஒருவர் நண்பர்களுக்குப் பணம் அனுப்பலாம், பில்களைச் செலுத்தலாம் மற்றும் ஆன்லைனில் வாங்கலாம் மற்றும் உங்கள் போனை ரீசார்ஜ் செய்யலாம் - அனைத்தும் யூ.பி.ஐ. வழியாகவும் நேரடியாகவும் பயனர்களின் வங்கிக் கணக்கிலிருந்து. கூகுள் பே உங்களின் தற்போதைய வங்கிக் கணக்குடன் செயல்படுவதால், பயனர்களின் பணம் அவர்களின் வங்கிக் கணக்கில் பாதுகாப்பாக உள்ளது மற்றும் கணக்கில் இருந்து நேரடியாகப் பற்று வைக்கப்படுகிறது அல்லது வரவு வைக்கப் படுகிறது. பணப்பையை மீண்டும் ஏற்றுவது பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை மற்றும் கூடுதல் கே.ஒய்.சி. தேவையில்லை.

மொபைல் மணிபர்சைத் தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்களைப்பார்ப்போம்.

ஒரு கம்பெனியின் மொபைல் மணிபர்சை தேர்ந்தெடுக்கும்போது அந்தக்கம்பெனிக்கு எந்தெந்த ஆன்லைன் மற்றும் இதர நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தொடர்பு இருக்கிறது என்பதைப்பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு பே.டி.எம்.மை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு டெலிபோன், எலக்டிரிசிடி, கேஸ் பில் செலுத்தும் வசதி, துணிமணி, நகை, பேஷன் பொருட்கள், காய்கறி பழம் மற்றும் மளிகை சாமான்கள் வினியோகிக்கும் பல கம்பெனிகளுடன் ஒப்பந்தத்தொடர்பு இருக்கிறது. அதனால் ஒரு பே.டி.எம். கணக்கு வைத்துக்கொண்டாலே உங்களால் வீட்டுக்குத்தேவைப்படும் அத்தனை பொருட்களையும் வாங்கிவிடமுடியும்.


அடுத்து உங்களுக்குக்கிடைக்கும் மதிப்பு. அமெரிக்காவில் புகழ் பெற்ற ஸ்டார்பக்ஸ் நிறுவனம் சில வருடங்களுக்கு முன் மொபைல் பணப்பை வசதியை அவர்களுடைய 16 ஸ்டோர்களில் மட்டும் ஆரம்பித்தனர். வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கொடுத்த சலுகைகளும் தள்ளுபடிகளும் தாராளமாக இருந்ததால் ஸ்டார்பக்சின் மொபைல் பணப்பை மிகவும் பாப்புலர் ஆகிவிட, அமெரிக்கா முழுவதுமான தங்களின் வியாபாரத்திற்கு இப்போது அந்த வசதியைப்பரப்பிவிட்டனர். கொடுக்கும் காசுக்கு நல்ல மதிப்பு கிடைக்குமானால் வாடிக்கையாளர்கள் தயங்காமல் ஆதரிப்பார்கள். அது போன்ற நம் காசுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும் மொபைல் மணிபர்சைத்தேர்ந்தெடுக்க வேண்டும்.

முக்கியமாகப் பார்க்க வேண்டியது மொபைல் மணிபர்ஸ் கம்பெனி நம்மிடம் வசூலிக்கும் சார்ஜ். இப்போது உங்களையும் என்னையும் போன்ற வாடிக்கையாளர்களிடம் மொபைல் மணிபர்ஸ் தொடங்கி அதற்குள் பணத்தை லோடு செய்யும்போதோ அல்லது அந்த மொபைல் மணிபர்ஸ் மூலம் பொருள் வாங்கும்போதோ எந்த வித சார்ஜும் வசூலிப்பதில்லை. ஆனால் நம் பணப்பையை நிரப்ப, கிரெடிட் கார்ட் பயன்படுத்தினால், அதற்கு சார்ஜ் உண்டு.

நீங்கள் ஒரு விற்பனையாளராக இருந்தால் வாடிக்கையாளர் உங்களிடமிருந்து வாங்கின பொருளுக்கு பணப்பை மூலம் செலுத்தினால் அதைப்பெறும் தொகையில் உங்களுக்கு ஒரு சார்ஜ் வசூலிப்பதுண்டு. சாதாரணமாக இப்போது இந்த சார்ஜ் 2 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை இருக்கிறது.

"பிக் பாக்கெட் தொந்திரவு இல்லைன்றீங்க! ஆனா மொபைல் மணிபர்சில் பணம் பறிபோகும் ஆபத்தே இல்லியா?"

"இருக்கு! நிச்சயமா இருக்கு!"

"எப்படி ஜாக்கிரதையா இருக்கணும்?"

முதலில் நல்ல பேரைச்சம்பாதித்த மொபைல் மணிபர்ஸ் கம்பெனியைத்தேர்ந்தெடுங்கள். உங்களுடைய மொபைல் போனை ஜாக்கிரதையாக வைத்திருக்க வேண்டும். வேறு யார் கையிலாவது கிடைக்குமானால் அவன் உங்கள் மணிபர்சில் இருக்கும் பணத்தைச்சு ரண்டிவிடக்கூடாதே! எனவே உறுதியான கடவுச்சொல்லைப் பயன்படுத்துங்கள். உங்கள் பிள்ளையின் பெயர் கணவரின் பெயர் போன்ற பாஸ்வோர்டெல்லாம் சாலாக்காகத்திருடி விடுவார்கள். ஒரு காபிடல் எழுத்து, ஒரு நம்பர், ஒரு ஸ்பெஷல் காரக்டர் (@, #, &) போன்ற காட்டமான பாஸ்வோடு வைத்துக்கொள்வது சிலாக்கியம்.

"யேய் இவளே! என் மொபைலைப்பார்த்தியா" என்னும் கேள்வியைக்கேட்காமல் இருக்க வேண்டும்!

அதாவது மொபைல் போனை கை தவறி எங்காவது வைத்துவிடும் பழக்கம் மிக ஆபத்தானது!

உங்களுக்கு ஒரு போன் வரும்.

"மேடம்! நா இந்த மொபைல் கம்பெனியிலேர்ந்து பேசறேன்! எங்க கம்பெனியோட சிறந்த கஸ்டமரா உங்கள செலக்ட் செஞ்சிருக்கோம். நீங்க உங்க பாஸ்வோர்டைச் சொன்னீங்கன்னா சரி பார்த்துடுவோம். அடுத்த பத்தே நிமிஷத்துல உங்க மணிபர்சுல பத்தாயிரம் ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வோம்!"

இந்தக்காலுக்கு உங்களின் பதில், "வைடா போனை!"

இது அரதப்பழைய முறை பிராடு! ஏமாறாதீர்கள்!

சின்னச்சின்ன பர்ச்சேசுக்கு மொபைல் மணி பர்சைப்பயன் படுத்துங்கள். அதிகத்தொகைக்கு ஆன்லைன் பாங்கிங்கோ அல்லது கிரெடிட்/டெபிட் கார்டோதான் சரி. மேலும் உங்கள் மொபைல் மணிபர்சின் உபயோகத்தை அடிக்கடி கவனியுங்கள். தப்பான சார்ஜ் ஏதும் இருந்தால் உடனே கம்பெனியுடன் பேசிச்சரி செய்துவிடுங்கள். கால தாமதம் செய்வது உங்களுக்கு எந்த விதத்திலும் நன்மை தராது.

இந்த மொபைல் மணி பர்ஸ் மிக நல்ல தொழில் நுட்ப அனுகூலம்தான். ஆனால் அதிலுமே கொஞ்சம் சூதனமாக இருத்தல் மிக அவசியம்.

அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் "டிஜிட்டல் இந்தியா" நமது தேசத்திற்கு தொழில்நுட்ப அதிகாரம் அளித்து அறிவுசார்ந்த பொருளாதார தேசமாக்க எடுக்கப்பட்டுள்ள நல்ல முயற்சி என்பதில் சந்தேகமே இல்லை. "முகமற்ற, காகிதமற்ற, கரன்சியற்ற" தேசமாக்குவது இந்த டிஜிட்டல் இந்தியாவின் முக்கிய குறிக்கோளாகும்.

"மாயாண்டி! இந்தப்பெட்டியில இருக்கற கள்ள நோட்டுக்களை நம்ம லாக்கர்ல பத்திரப்படுத்தி வை…" வகை வசனங்கள் தமிழ் சினிமாவில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பணமுதிர் காலத்துக்குள் நுழைந்துவிட்டோம்!

Tags:    

Similar News