சிறப்புக் கட்டுரைகள்

மருத்துவம் அறிவோம்- குடலில் பரவும் கெட்ட பாக்டீரியாக்கள்

Published On 2022-11-28 14:26 IST   |   Update On 2022-11-28 14:26:00 IST
  • ஆரோக்கியம் கூடினால் ஆயுளும் கூடுகின்றது. மிக கடுமையான உபவாசம் என்பது இந்த கால சூழ்நிலை, வேலை இவற்றிற்கு ஒத்து வராது.
  • பழங்கள், காய்கறிகள், முழு தானிய உணவு, அதிக கொழுப்பு இல்லாத உணவுகள், அளவான உப்பு, சர்க்கரை உணவுகளை தவிர்த்தல் இவை மிக சிறந்த பலனை அளிக்கும்.

கட் பீலிங் மற்றும் குடல் உணர்வு பற்றி பலர் அடிக்கடி கூற கேட்டிருப்போம். அல்லது நாமே இந்த அனுபவத்தினை பலமுறை பெற்றிருப்போம். உங்கள் வயிறு, குடல் உங்களுக்கு சொல்வதினை கேளுங்கள். சில உணர்வுகள் மற்றும் எண்ணங்களை உங்கள் வயிறு சொல்லும். நீங்கள் அதனை கூர்ந்து கவனித்தாலே தெரிந்து விடும்.

இந்த குரல்கள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கின்றன. நம்மை காக்கும் தேவதைகள் இவை - டோனா ஆஷ்வர்த்.

நீங்கள் ஏதேனும் ஒரு முடிவு எடுக்க குழம்புகின்றீர்களா? தனிமையில் அமைதியான சூழ்நிலையில் உங்கள் பிரச்சினையை வாய் விட்டு சொல்லுங்கள். உங்கள் மனதிற்கு மிக நெருக்கமானவர் (தெய்வம், பெற்றோர், நண்பர்) யாராவது ஒருவரிடம் கூறுவதாக நினைத்து கூறுங்கள். சற்று நிதானம் கொடுங்கள். குடல் உணர்வுகள் உங்களுக்கு வழிகாட்டும். அதனை தெளிவாய் உணர முடியும்.

நீங்கள் எப்பொழுதுமே தனியாக இல்லை. நீங்கள் வழி நடத்தப்படுகின்றீர்கள். உங்கள் உள்ளுணர்வுகள் உங்களிடம் பேசும் பொழுது, வலியுறுத்தும் பொழுது அவற்றை கேளுங்கள். அவை உங்கள் நன்மைக்காகவே என நமது குடல் உணர்வு, உள்ளுணர்வு பற்றி பொதுவில் கூறுவார்கள்.

இதையே நாம் இப்பொழுது மருத்துவ ரீதியாக பார்ப்போம். நமது வாய் முதல் ஆசனவாயில் வரை நம் உடலை பாதுகாக்க நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. இவை சிறுகுடல், பெருங்குடல் இவற்றில் அதிகமாகவே உள்ளன. இவைகளை புரோபயாட்டிக் நுண்ணுயிர்கள் என்று சொல்கிறோம். இவைகளால் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன. இந்த நல்ல பாக்டீரியாக்களை தான் நாம் புரோபயாடிக் என்கிறோம்.

உணவு செரித்து இன்னும் சத்துக்களை பெற இந்த பாக்டீரியாக்கள் நமக்கு அவசியம் தேவை. இது குறையும் பொழுதுதான் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகரித்து செரிமானமின்மை, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு என ஆரம்பித்து விடும். பல நோய்களின் மூல வேர் குடலில் இருந்தே உருவாகிறது. நம்ம ஊரு உணவுக்கு புரோபயாட்டிக் குறைவது என்பதும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பது என்பதும் நம் முந்தைய தலைமுறையில் சற்று குறைவான ஒன்றே என்று சொல்லலாம். ஏனெனில் நமது உணவுமுறை புரோபயாடிக் நிறைந்த உணவாக தான் இருந்தது. இட்லி, தோசை போன்ற புளித்த உணவுகள், தயிர், மோர் அதிக எண்ணெய் காரமில்லாத ஊறுகாய்கள் இவை அனைத்துமே புரோபயாடிக் நிறைந்த உணவுதான். இன்று பெரிய ஓட்டல்களில் கூட வழங்கப்படும் பழைய சாதம், ஊறுகாய் கூட புரோபயாடிக் நிறைந்த உணவுதான். குடலை உணவு மண்டலத்தை பாதுகாத்தாலே நம் உடல் நன்கு இருக்கும். இன்று பலர் நீராகாரம் என்ற பெயரில் இரவு நீரில் ஊறவைத்த பழைய சாதம், மோர் ஊறுகாய் என்று காலையில் சாப்பிடுபவர்கள் உண்டு. அவர்களை பார்த்தால் சுறுசுறுப்புடன் இனிமையாகவும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளோடும் இருப்பார்கள். பாலை சார்ந்த உணவான தயிர், மோர், சீஸ் இவைகள் எல்லாமே புரோபயாடிக் உணவுகள் தான். இவை கெட்ட கொலஸ்ட்ராலை தவிர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கும் அதிக எடை கூடியவர்களுக்கும் நன்மை பெற இந்த புரோபயாடிக்கும் அவசியம் ஆகின்றது. இப்பொழுது மீண்டும் கட் பீலிங் என்பதனை பற்றி பார்ப்போம். நல்ல பாக்டீரியாக்கள் இருந்தால் குடல் நல்ல உணர்வுகளை மூளைக்கு அனுப்பும். நாமும் ஆக்கப்பூர்வமாக இருந்து சாதனைகளை செய்வோம். கெட்ட பாக்டீரியாக்கள் அதிகமாக இருந்தால் மூளையின் செயல்பாடும் மாறாகத்தான் இருக்கும்.

பிரீபயாடிக்ஸ் என்றும் சொல்கிறோம். பிரீபயாடிக்ஸ் என்றால் என்ன?

புரோபயோடிக் என்பது நல்ல பாக்டீரியா. இந்த நல்ல பாக்டீரியாக்கள் நன்கு இருப்பதற்கும் அதிகரிப்பதற்கும் உணவு அளிப்பவை தான் இந்த பிரீயோடிக். வெங்காயம், பூண்டு, வாழை, நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ், பிரவுன் அரிசி, பிளாக்ஸ் விதைகள், காய்கறிகள், முழு தானிய உணவு இவை பிரீபயாடிக் நிறைந்த உணவுகள். இனிமேல் உங்களுக்கும் சரி உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கும் சரி மேற்கூறிய உணவு வகைகளையே கொடுங்கள். ஸ்டைல் உணவு வகைகள் வேண்டாம்.

பச்சை பயிறு: பாசிப்பருப்பு பச்சை தோலுடன் இருப்பதை தான் பச்சை பயறு என்கிறோம். இந்த பச்சை பயறு தரும் பலன்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

* பச்சைப்பயிறு போலேட், வைட்டமின் பி9 நிறைந்தது. இதனால் புது செல்கள் உருவாகின்றது. குறிப்பாக சிகப்பு ரத்த அணுக்கள் உருவாக உதவுகின்றது.

* நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாலும் பிளேவறாய்ட்ஸ் இருப்பதாலும் ரத்த குழாய்கள் பாதுகாக்கப்படுகின்றது. வீக்கம் குறைகின்றது.

* கர்ப்பம் தரிக்க நினைக்கும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் பச்சை பயிரினை உணவில் நன்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். இது ரத்த ஓட்டம் சீராக இயங்க உதவுகின்றது. வைட்டமின் பி9 சத்துக்களுடன் இணைந்து இருதய துடிப்பு சீராய் இயங்க உதவுகின்றது. வைட்டமின் பி9 போலிக் ஆசிட் கர்ப்ப காலத்தில் குழந்தை பாதுகாப்பிற்கு பெரிதும் உதவுகின்றது.

* சிறந்த புரதம் கொண்டது. குறிப்பாக சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு சிறந்த புரதம் உள்ளது எனலாம். ஒரு கப் பாசிப்பயிறு 30 சதவீதம் அன்றாட தேவைக்கான புரதத்தினை கொடுக்கின்றது.

* பாசிப்பயறு கொழுப்பு குறைந்தது. இதில் உள்ள நார்ச்சத்தால் வயிறு நிரம்பும். இதன் காரணமாக அடிக்கடி நொறுக்கு தீனி எடுப்பது வெகுவாய் குறையும். அதிக சத்துக்கள் கிடைப்பதோடு எடை குறைப்பிற்கும் வெகுவாய் உதவுகின்றது.

* இன்று சிங்க் எனப்படும் இதன் அவசியத்தினை மருத்துவ உலகம் வலியுறுத்தி வருகின்றது. சிங்க் மாலைக்கண் நோய் பாதிப்பினை நீக்குவதற்கு பெரிதும் உதவுகின்றது.

* இதில் உள்ள பொட்டாசியம் உயர் ரத்த அழுத்த பாதிப்பினை குறைக்க உதவுகின்றது.

* நார் சத்து மிகுந்தது. ஒரு கப் வேகவைத்த பச்சை பயறு 40 சதவீதம் அன்றாட தேவைக்கான நார் சத்தினை கொடுக்கின்றது.

* இதில் உள்ள பாஸ்பரஸ் கால்சியத்துடன் இணைந்து உறுதியான ஆரோக்கியமான எலும்பினை தருகின்றது.

* ஒரு கப் பாசிப்பயிறில் அன்றாட தேவைக்கான 20 சதவீதம் மக்னீசியம் இருக்கின்றது. எலும்பு, பல் இவற்றிற்கு மிகவும் முக்கியமானது. மனச்சோர்வு நீங்கும். வீக்கங்களை குறைக்கின்றது. ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுகின்றது.

* இதில் உள்ள வைட்டமின் பி சத்து உணவில் இருந்து முழு சத்தினை பெற உதவுகின்றது.

* மூளை, மனநிலை நன்கு இருக்கும்.

* புற்றுநோயினை எதிர்க்கவல்லது.

* சர்க்கரை நோய் பாதிப்பினை தடுக்க வல்லது.

இத்தனை சக்தி கொண்ட பச்சைப் பயிரினை தினமும் உணவில் சேர்ப்பது சிறந்தது. இக்கருத்துக்கள் ஒரு ஆய்வு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் இதை சாப்பிடுங்கள், அதை சாப்பிடுங்கள் என்று கூறினாலும் மருத்துவ விஞ்ஞானம் அவ்வப்போது உண்ணாவிரதம் இருப்பதனையும் அதன் பலன்களையும் கூறித்தான் வருகின்றது.

எடை குறைப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருத்தல், வீக்கம் குறைவு, நல்ல இருதய ஆரோக்கியம், நரம்புகள் ஆரோக்கியம், சில பிரிவு புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பு என பல நன்மைகளை விஞ்ஞான ரீதியாக நிரூபித்து உள்ளனர்.

உண்ணாவிரதம், நோன்பு, பண்டிகை நாட்கள் என மாதத்தில் சில நாட்களில் உபவாசம் இருக்கும் வழக்கம் நம் நாட்டவருக்கு பழக்கமான ஒன்றுதான். காலப்போக்கில் பலர் நம் உணவு பழக்க முறைகளை மாற்றிக் கொண்டு விட்டனர். ஆனால் இங்கு நாம் பார்ப்பது விஞ்ஞான ரீதியான நன்மைகளை தான்.

இன்று பிரபலமாக பலராலும் பின்பற்றப்படுவது இன்டர்மிட்டன்ட் பாஸ்டிங் என்ற முறை தான். இதனை அவரவர் மருத்துவர் அல்லது உணவு நிபுணர் மூலம் தனிப்பட்ட ஆலோசனை, அறிவுரை பெற்றே கடைபிடிக்க வேண்டும். இங்கு சாதாரண உண்ணாவிரதம் தரும் நன்மைகளை பார்ப்போம்.

உடல் ஆரோக்கியமானவர்களுக்கு உயர் சர்க்கரை பாதிப்பு ஏற்படுவதினை கட்டுப்படுத்த உதவுகின்றது. காரணம் அதிகமான உணவு உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. நீரிழிவு நோய் உடையவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று இன்டர்மிட்டன்ட் பாஸ்டிங் இருக்கும் பொழுது ரத்தத்தில் சர்க்கரை அளவு நன்கு குறைகின்றது.

* வீக்கங்கள் குறைய உதவுகின்றது.

* உயர் ரத்த அழுத்த பாதிப்பு வெகுவாய் குறைகின்றது. இருதய நோய் பாதிப்பு நன்கு தவிர்க்கப்படுகின்றது.

* மூளை செயல்பாடு கூர்மை யாகின்றது. நரம்புகள் சீராக செயல்பட ஒரு காரணமாக உள்ளது.

* எடை குறைப்பிற்கு எளிய வழி.

* ஆரோக்கியம் கூடினால் ஆயுளும் கூடுகின்றது. மிக கடுமையான உபவாசம் என்பது இந்த கால சூழ்நிலை, வேலை இவற்றிற்கு ஒத்து வராது. மேலும் ஆரோக்கிய ரீதியான உபவாசத்தில் இதனை பரிந்துரைப்பதில்லை. எனவே கண்டிப்பாக தகுந்த ஆலோசனையினை மருத்துவர் மூலம் பெற்று கடைபிடித்து மேற்கூறிய அனைத்து பலன்களையும் பெறலாமே.

இன்று இண்டர்மிட்டன்ட் பாஸ்டிங் என்பது ஆரோக்கியமற்றது என்று ஆய்வு கட்டுரைகள் கூறி உள்ளது. எனவே தான் ஒரு வேளை உணவினை தவிர்ப்பது, இரவு 7 மணி முதல் காலை ஏழு மணி வரை உண்ணாது இருப்பது. தண்ணீர் மட்டும் குடிப்பது போன்ற முறையை மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது சிறுநீரகங்கள் பாதிப்படைந்து ரத்தத்தினை சுத்திகரித்து செயல்பட வேண்டிய வேலையை செய்ய இயலாது போவது ஆகும். சர்க்கரை நோயும் உயர்ரத்த அழுத்தமும் இதற்கு முக்கிய காரணமாகின்றது. இருதய பாதிப்பு, பரம்பரையில் சிறுநீரக நோய் பாதிப்பு இவையும் சிறுநீரக பாதிப்பிற்கு காரணமாகின்றது. சிறுநீரகத்தினை மேற்கூறிய பாதிப்பு உடையவர்கள் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். முறையான உணவு, மேற்கூறப்பட்டுள்ள பாதிப்புகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்தல், சரியான எடை இருத்தல் இவை தனிப்பட்ட ஒருவர் தன் முயற்சியாக செய்ய வேண்டும்.

பழங்கள், காய்கறிகள், முழு தானிய உணவு, அதிக கொழுப்பு இல்லாத உணவுகள், அளவான உப்பு, சர்க்கரை உணவுகளை தவிர்த்தல் இவை மிக சிறந்த பலனை அளிக்கும். இத்துடன் முறையான தூக்கமும் அவசியம். கண்டிப்பாக புகை, மது இவற்றினை விட்டு விட வேண்டும்.

உணவில் உப்பின் அளவு, புரதம் அளவு இவற்றினை மருத்துவர் அவரவர் உடல் நிலைக்கேற்ப பரிந்துரைப்பார். இதுபோன்று குறைந்த அளவு பாஸ்பரஸ், பொட்டாசியம் உணவுகளையும் மருத்துவர் பரிந்துரைப்பார்.

சிறுநீரகத்தில் பாதிப்பு என்றாலே சோர்வு, சரும அரிப்பு, உயர் ரத்த அழுத்தம் என இருக்கும். தலைவலி, குறைந்த சிறுநீர் வெளிப்போக்கு, வயிற்றுப்பிரட்டல், சிறுநீரில் ரத்தம் என இருக்கும். சுறுசுறுப்பாக இருத்தல், உடற்பயிற்சி போன்றவை சிறுநீரக பாதுகாப்பிற்கு மட்டுமல்ல அனைத்து நோய் பாதிப்பிற்கும் தவிர்க்க முடியாததாக அமையும். அதிக கடும் உடற்பயிற்சி என்பது கூடாது. யோகா செய்வது நலம் தரும்.

பலருக்கு ஆரம்ப கால சிறுநீரக பாதிப்பு தெரிவதில்லை. அதிக சோர்வு, நுரைத்த சிறுநீர், நெஞ்சு வலி, மூச்சு வாங்குதல், சதை பிடிப்பு, சதை துடிப்பு, கண் கீழே பைப் போல் தொங்கிய சதை, தூக்கமின்மை, அடிக்கடி சிறுநீர் செல்லுதல், கை கால்களில் வீக்கம், எப்போதும் அரிக்கும் சருமம், வறண்ட சருமம், பசியின்மை, வாந்தி, வயிற்றுப் பிரட்டல் போன்றவை பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.

தேவையான அளவு நீர் குடித்தல், அதிக உப்பு உள்ள உணவுகளை உட்கொள்ளாது இருத்தல் போன்றவற்றினையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

நீண்ட நாள் சிறுநீரக பாதிப்பு என்பது அதிக பிரச்சினை ஏற்படுத்தும் என்பதால் தவிர்ப்பதே இதற்கு சிறந்த தீர்வாக அமையும்.

Tags:    

Similar News