சிறப்புக் கட்டுரைகள்

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

Published On 2024-01-27 16:45 IST   |   Update On 2024-01-27 16:45:00 IST
  • நம்மோட மருத்துவ முறையில் சித்தமருத்துவம் என்பது மிகவும் முக்கியமானது.
  • ரமணா ஸ்டைலில் தானே இப்போதெல்லாம் மருத்துவம் பார்க்கிறார்கள்.

வரவர உன் போக்கு சரியில்லை, உடம்பு சரியில்லைன்னு மருந்து கொடுத்தா குடிக்க என்ன?

என்னயிது?

கஷாயம்

யாருக்கு?

அட மக்கு மனசாட்சி... நீதான் நேத்து ராத்திரியில் இருந்து இருமிகிட்டு இருந்தியே? அதனால்தான்.

நீ எப்போதில் இருந்து டாக்டரா மாறினே?

கேள்வி கேட்காம இதைக் குடி. மனசாட்சி ஏற இறங்க ஒரு பார்வைப் பார்த்துவிட்டு எதுக்கு இப்போ திடீர்னு இந்த வேலையிலே இறங்கிட்டே?

இந்தவாரத் தலைப்பு அப்படி ? ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்... மனசாட்சிக்கு இரண்டு மிடறு விழுங்கியதும் புரையேறியது.

அடப்பாவி... என்னைக் கொல்லப் போறீயா?

அட முட்டாள் மனசாட்சி... நீ செத்தா நானும்தானே சாவேன்.

அப்படின்னா சரி... கஷாயம் காலியாகிட ஒரே கசப்பு. மருந்துன்னா இத்தனை கசக்குமா? ஆமா நீ எப்படி இப்போ அரை வைத்தியனா இல்லை முழு வைத்தியனா ?

நான் முறைத்தபடியே, மனசாட்சியிடம், வழக்கம்போல இந்த பழமொழியும் அர்த்தம் மாறித்தான் போயிருக்கிறது. உனக்குத் தெரியுமா? ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதுதான் பழமொழி.

ஒஹோ... சலிப்புடன் எப்படியும் நீ அர்த்தம் சொல்லத்தான் போறே... நான் கேட்கத்தான் போறேன், ஏன் டயம் வேஸ்ட் பண்றே?! கம்மான் ஸ்டார்ட். அதுக்கு முன்னாடி எனக்கு ஒண்ணு சொல்லணும்.


சொல்லேன்... தொண்டையைக் கனைத்தபடியே ஆரம்பித்தது.

போனவாரம் நான் வாசற்படியிலேயே நின்னுகிட்டு கிடந்தேன். ஒரு குட்டிப் பையன் வழுவழுன்னு ஒரு நோட்டீசைத் திணிச்சிட்டுப் போனான். அதில் பக்கத்து தெருவில் புதிய ஆஸ்பத்திரி திறக்கப் போவதாகவும் அங்கே முதல் ஐந்து நாட்களுக்கு மருத்துவம் 50 சதவீதம் இலவசம்னும், 1000 ரூபாய்க்கு டெஸ்ட் எடுத்தா இரண்டு ஊசி இலவசம்னு போட்டு இருந்தது. எனக்கு பகீர்ன்னு ஆயிடுச்சி. பிரியாணிக்கு முட்டை இலவசம்னு போர்ட்டு போடுவாங்களே அதுபோல...ஏம்பா... மருத்துவத்தில் இலவசம் சாத்தியமா...

நீ இதைச் சொல்றே? காம்போ ஆபர்ல கம்ப்ளீட்டெஸ்ட் எடுக்கறோன்னு டீவியிலே அறிவிப்பு வருதே அதை என்ன செய்ய?

படிப்பிலேயே உசந்ததுன்னு டாக்டர், என்ஜினீயர்ன்னு ஒரு அலீபியைக் கிரியேட் பண்ணிடறாங்க. தெருவுக்கு நாலு பிரியாணி கடைக்குப் போட்டியா இப்போ மருத்துவமனைகளையும், பத்துக்கு பத்து அறையும், தட்டுத் தடுமாறி ஊசிபோடற ஒரு உதவியாளரும் கிடைச்சா அங்கே ஒரு மருத்துவமனை ரெடி, பெரிய பெரிய பையோடு, சேல்ஸ் ரெப்புகளும் படையெடுத்து மருந்துகளை கொண்டு வந்து கொட்டறாங்க இதுக்கு மேல...

அட ஆமாப்பா... போனவாரம் நம்ம அடுத்தவீட்டு கீதாக்கா, ஒரு மாத்திரையைக் கொண்டு வந்து கொடுத்து இது போட்டதில் இருந்து தலை சுத்துதுன்னு கிறக்கமாக இருக்குன்னு சொல்லுச்சி. நானும் என்னான்னு வாங்கி, கூகுளில் செக் பண்ணிப் பார்த்தேன். புது பார்முலா, புது மாத்திரை மார்க்கெட்டுக்கு வரும்முன் டாக்டரிடம் சேம்பிள் என்று வந்திருக்கிறது. பணம் செலுத்த முடியாத அக்காவிற்கு, மாத்திரை பணம் கொடுத்து வாங்கி கஷ்டப்பட வேண்டான்னு நல்ல எண்ணத்தில் சேம்பிள் பார்த்திருக்கிறார்.

ஆனா... உண்மைதான் மருத்துவர்களைத் தாண்டி சில மெடிக்கல்ஷாப்பில் பணிபுரிபவர்கள் கூட அடிக்கடி இப்படித்தான்... அண்ணே தலைவலிக்குது, லேசா இருமல், தொண்டை சரியில்லை ஏதாவது மாத்திரை கொடுங்க என்று ஒருவர் கேட்க,

அவர் நான்கைந்து டப்பாக்களைத் திறந்து சில மாத்திரைகளை எடுத்து தருகிறார்.

என்ன சார் இது, டாக்டர் மருந்து சீட்டு இல்லாம நீங்க கொடுக்கலாமா என்று கேட்க, அவர் பதில் சொல்லும் முன் நோயாளி சொல்லுகிறார். அட போங்க சார்.. தலைவலின்னு போனா எக்ஸ்ரே எடுக்க சொல்றாங்க. ஒண்ணுமில்லாததுக்கு ஆயிரக்கணக்கிலே துட்டைப் பிடுங்குறாங்க. இதிலே எங்கே சார் அங்கே போக முடியுது. மாத்திரையை வாங்கிப்போட்டோமா தூங்கினோமோ காலையிலே ஜோலியைப் பார்க்க போனோமான்னு இல்லாம? அவர் பேசியது ஆச்சரியமாக இருந்தாலும், ரமணா ஸ்டைலில் தானே இப்போதெல்லாம் மருத்துவம் பார்க்கிறார்கள். அந்த நண்பரின் கேள்வி சரியாகவேப்பட்டது.

அட ஆமாப்பா மருந்தைக் கண்டுபிடிச்சி நோயை உருவாக்குகிறார்கள். அது சரி..

ம்... அப்போ ஆயிரம் பேரைக் கொன்றால்தான் அரை வைத்தியன் என்பது சரிதானா? அது சரி முழு வைத்தியன் ஆகணுன்னா எத்தனை பேரைக் கொல்லணும்?

எங்கே போனாலும் கரெக்டா என்னை டிராக்கிலே கொண்டு வந்திடறே பாரு... நீதான் நல்ல மனசாட்சி.

புகழ்ந்தது போதும் விளக்கத்தைச் சொல்லு..

பண்டைய காலத்திலே சித்த மருத்துவர்கள் மூலிகை வேர்களைக் கொண்டு மருந்துகளைத் தயாரித்தார்கள். அதனால் எண்ணிக்கையில் அதிகப்படியான வேரை வைத்திருப்பவர்களுக்கான பழமொழி.

டாக்டர் கையெழுத்து போல புரியாத மாதிரி விளக்கம் சொல்லாதே?

நம்மோட மருத்துவ முறையில் சித்தமருத்துவம் என்பது மிகவும் முக்கியமானது. இதற்கு மூலிகைத் தாவரங்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாதிரி மருத்துவத்தில் ஈடுபடுகிறவர்கள் நோயைக் குணப்படுத்திட சரியான மூலிகையைத் தேடி காடு மேடெல்லாம் அலையணும். தன்னோட வாழ்நாளில் பாதியை இதற்காக செலவிடணும். இந்த மருத்துவ முறையை கற்றுக்கொள்ள மாணவனாக சேரும் ஒருவன் ஆயிரம் மூலிகை வேர்களை பறித்து அதன் தன்மைகள், அது எந்த நோயைக் குணமாக்க பயன்படும் என்பதை எல்லாம் ஆராய்ந்து தன் பணியைத் துவங்க வேண்டும். இப்படி ஆராய்ந்து பார்த்து செயல்படும் பிராசஸ்சுக்கு தான் அரை வைத்தியன் என்று பெயர்.

இப்போ புரியுதுப்பா.


இன்னும் விரிவா சொல்றேன்... சித்த ஆயுர்வேத வைத்தியர்கள். பல வகையான மூலிகைகளைப் பறித்து வந்து அவற்றினை பதப்படுத்தி, உலர வைத்து, சில மூலிகைகளைப் பிழிந்து சாறு எடுப்பார்கள். இந்த மாதிரி மூலிகைகளைப் பதப்படுத்தும் போதும், உலர வைக்கும் போதும் அதிலிருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றுவார்கள். இவ்விதம் மூலிகைகளைப் பதப்படுத்துதலை மாரணம் செய்தல் என்று கூறுவார். மாரணம் என்ற சொல்லுக்கு வடமொழியில் கொல்லுதல் என்று பொருள்.

இப்படி வேரை மாரணம் செய்து மருந்து தயாரிப்பவன் வைத்தியன். எனவேதான் ஆயிரம் வேரை... நல்லா கவனி... ஆயிரம் பேரை இல்லை ஆயிரம் வேரை கொன்றவன் அரை வைத்தியன்.

அடடா... இத்தினி நாளா இது தெரியாம போச்சே?!

பழமொழி - ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.

நாளடைவில் மருவி ஆயிரம் பேரைக் கொன்றவன் என்றாகிப்போனது.

ஒரு சினிமாவில் இப்படித்தான், டாக்டர் டிரஸ் போட்டுகிட்டு எப்பா நான் இப்பவே 999பேரைக் கொன்னுட்டேன். இன்னும் ஒரேயொருத்தர்தான், நான் அரை வைத்தியன் ஆகிவிடுவேன் என்று சிரிப்பிற்கு சொல்லுவார்கள். சிந்தனைகள் எல்லாம் சிரிப்பாக மாறியது போலும், பழமொழிகளும் அதன் விளக்கங்களை நமக்கு எப்படி தோணுதோ அப்படி மாற்றிக் கொள்ள சபிக்கப்பட்டு விட்டது.

அடுத்த பழமொழியில் சந்திப்போம்.

Tags:    

Similar News