- மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரம் தினத்தன்று அங்கு நீராடுவது கூடுதல் சிறப்பாகும்.
- சிறப்புமிக்க இந்த மகாமகத் தீர்த்தத்தை ஒருமுறை வலம் வந்தால் பூமியை நூறுமுறை வலம் வந்த பலன் கிட்டும்.
கும்பகோணம் என்றதும் அனைவருக்கும் மகாமகம் குளம்தான் நினைவுக்கு வரும். கும்பகோண நகரின் மையப்பகுதியில் மகாமகம் தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. இந்த தீர்த்த குளம் முக்கிய சாலை ஓரத்திலேயே அமைந்திருக்கிறது. எனவே கும்பகோணம் யாத்திரை செல்பவர்கள் தீர்த்தக்குளத்தை கடந்து செல்லாமல் வேறு எங்கும் செல்ல இயலாது.
ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று இந்த தீர்த்த குளத்தில் புனித நீராடுவது அவ்வளவு சிறப்பாக கருதப்படுகிறது. அதிலும் மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரம் தினத்தன்று அங்கு நீராடுவது கூடுதல் சிறப்பாகும்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கு மகாமகம் புனித நீராடல் நடத்தப்படும். நாடு முழுவதும் இருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரண்டு வந்து அந்த நாட்களில் புனித நீராடுவார்கள். இதன் காரணமாக கும்பகோணம் மகாமகம் குளம் வடஇந்தியாவிலும் புகழ் பெற்றுள்ளது.
தஞ்சை பகுதி மக்கள் வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் சொந்த பூமிக்கு வரும்போது மகாமகம் குளத்தில் புனித நீராடுவதை மிகவும் புண்ணியமாக கருதுகிறார்கள். எவ்வளவு பாவங்கள் செய்திருந்தாலும் அவை அனைத்தையும் போக்கி தோஷங்களை களைந்து புத்துணர்ச்சி தரும் ஆற்றல் கொண்டது இந்த தீர்த்த குளம்.
தஞ்சாவூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பாதையில் உள்ளது, இந்தத் தீர்த்தக்குளம். கும்பகோணத்திற்கு வருவதற்கு எல்லா ஊர்களில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. இந்த மகாமக தீர்த்தத்தின் தலைமைக் கோவில் கும்பேசுவரர் கோவில் ஆகும். இத்தலத்து இறைவன் பெயர், "கும்பேசுவரர், அமுதேசுவரர், குழகர்" என்பதாகும்.
அம்பாள் பெயர், "மங்களாம்பிகை" ஆகும். தல மரம் வன்னி ஆகும். இத்தலத்து விநாயகர் "ஆதி விநாயகர்" ஆவார். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற தேவாரத்தலம், இது.
இந்த கும்பகோணத்திற்கே தனிச் சிறப்பு அளிப்பது இங்குள்ள "மகாமக தீர்த்தமே" ஆகும். இந்த தீர்த்தம் கும்பகோணம் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இந்தக் குளத்தைச் சுற்றிலும் உள்ள படிக்கட்டுகள் மீது பதினாறு மண்டபங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டபத்திலும் ஒரு சிறு கோவில் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கோவிலிலும் ஒரு சிவலிங்கம் உள்ளது. அவற்றின் பெயர்கள் வருமாறு:-
1. பிரம்மதீர்த்தேசுவரர், 2. முகுந்தேசுவரர், 3. தளேசுவரர், 4. விருஷபேசுவரர், 5. பரணேசுவரர், 6. கோணேசுவரர், 7. பக்திஹேசுவரர், 8. பைரவேசு வரர், 9. அகத்தீசுவரர், 10. வியாசேசுவரர், 11. உமைபாகேசுவரர், 12. நைருதீசுவரர், 13. பிரமேசுவரர், 14. கங்காதரேசுவரர், 15. முக்த தீர்த்தேசுவரர், 16. சேத்திரபாலேசுவரர் என்பனவாகும்.
இந்த மகாமகக் குளத்தின் படிக்கட்டுகளின் உச்சியில் ஓர் அழகான மண்டபம் உள்ளது. இதில் பதினாறு தூண்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் சிறப்பாக விளங்குகின்றன. இவை யாவற்றையும் கட்டியவர், அச்சுதப்ப நாயக்க மன்னரின் அமைச்சராக இருந்த "கோவிந்த தீட்சிதர்" ஆவார். இக்குளத்தின் பரப்பளவு பதினைந்து ஏக்கர் ஆகும்.
கும்பகோணம் நகரில் 14 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் குளம் ஏழு, கிணறுகள் மூன்று, காவிரித் தீர்த்தங்கள் நான்கு ஆகும்.
இத்தனை சிறப்புகள் மிக்க புண்ணிய தலமாகிய கும்பகோணம் மகாமக தீர்த்தம் தோன்றிய வரலாறு, வருமாறு:-
பிரளய காலத்திற்குப் பிறகு தன் சிருஷ்டித் தொழிலைத் தொடங்கித் தொடரும் பொருட்டு, பிரம்ம தேவர், சிவபெருமானின் அறிவுரைக்கு ஏற்ப, அமுதத்தை மண்ணில் கலந்து பிசைந்து அழியாக் குடமாகச் செய்து, உலக உற்பத்திக்குத் தேவையான சகல பீஜத் தொகுப்பையும் அதில் வைத்து, மேருமலை மீது அதைப் பத்திரப்படுத்தி இருந்தார். பின்பு பிரளயத்தின்போது அவ்வமுதக் குடம் அசைந்து மிதந்து தென்திசையில் சென்று ஓரிடத்தில் தங்கியது.
பிறகு, சிவ பாணத்தால் அக்குடம் பிளக்கப்பட்டு, அமுதம் பெருகி வழிய அப்போது அந்த அமுதத்தை பூமி குழிந்து தாங்க என பிரமன் நினைத்தருள, அவ்வண்ணமே அமுதம் இரண்டு இடத்தில் திரண்டு நின்றது. அவைதாம் முறையே, கும்பகோணம் கும்பேசுவரர் கோவிலின் பொற்றாமரைக் குளமும், மகாமக தீர்த்தமும் ஆகும்.இது நடந்தது, சூரியனது ஆட்சி வீடாகிய சிம்ம ராசியில், சந்திரனும், குருவும் ஒன்று சேர்ந்து இருக்க, அப்போது சிம்ம ராசிக்கு ஏழாவது வீடாகிய கும்பத்தில் சூரியன் இருந்து, குருவையும், சந்திரனையும் பார்த்த காலகட்டத்தில் ஆகும்.
இதற்கு பிரம்ம தேவன் எம்பெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணமாக கும்பேஸ்வரருக்கு ஒன்பது நாட்கள் உற்சவம் நிகழ்த்தினார். பத்தாம்நாள் உற்சவ முடிவாக, இறைவனுக்கு ஸ்நானம் செய்யும் பொருட்டு, அமுத வாலியாகிய இந்த மகாமக தீர்த்தக்கரையை அலங்கரித்து, அங்கே எம்பெருமானை ரிஷப ரூபராக எழுந்தருளச் செய்து, பிரம்ம தேவன் அவரை தரிசித்து, அந்த உத்தம மகாமகத் தீர்த்தத்தில் நீராட்டி, தானும் நீராடினார்.
அப்போது தேவர்களும் வந்து நீராடினார்கள். இந்த சிறப்புமிக்க திருவிழா இப்போது "12" ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இதன் நினைவாக ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மக நட்சத்திரம் அன்று இறைவன் இந்த மகாமகக் குளத்திற்கு வந்து தீர்த்தமாடல் நடைபெறுகிறது.
இந்த மகாமகக் குளத்தில் பிரம்ம தேவன் தன் பெயரால் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கினார். இதேபோல், எண்திக்குப் பாலகர்களும் நவ கன்னியரும் தத்தம் பெயரில் தீர்த்தம் கண்டார்கள். இதேபோல், தேவர்களும் ஒரு தீர்த்தம் உண்டாக்கினார்கள்.
ஆக, இந்த மகாமகக் குளத்தில் உள்ள இருபது தீர்த்தங்களின் பெயர்களையும், அதில் நீராடுவதால் ஏற்படும் நன்மைகளையும் இனி காண்போம்.
1. இந்திர தீர்த்தத்தில் நீராடினால் சொர்க்கம் கிட்டும்.
2. அக்கினி தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் நாசமாகும்.
3. எம தீர்த்தத்தில் நீராடினால் எம பயம் நீங்கும்.
4. நிருதி தீர்த்தத்தில் நீராடினால் பூத, பிரேத, பிசாசு பீடை நிவர்த்தி ஏற்படும்.
5. வருண தீர்த்தத்தில் நீராடினால் முக்திப் பேறு கிட்டும்.
6. வாயு தீர்த்தத்தில் நீராடினால் துன்ப நிவர்த்தி ஏற்படும்.
7. குபேர தீர்த்தத்தில் நீராடினால் செல்வப் பெருக்கு ஏற்படும்.
8. ஈசான தீர்த்தத்தில் நீராடினால் சகல காரிய சித்தி ஏற்படும்.
9. பிரம்ம தீர்த்தத்தில் நீராடினால் மகத்தில் 101 தலைமுறையும், மகாமகத்தில் 300 கோடி தலைமுறையும் ஈடேறும்.
10.கங்கை தீர்த்தத்தில் நீராடினால் பதினாயிரம் கங்கை ஸ்நானம் செய்த பலன் கிட்டும்.
11. பலமுனை தீர்த்தத்தில் நீராடினால் பொன் பேறு கிட்டும்.
12.கோதாவரி தீர்த்தத்தில் நீராடினால் காரியசித்தி கிட்டும்.
13.நர்மதை தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் ஒழியும்.
14.சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடினால் மெய்ஞானமும், வைராக்கியமும் கிட்டும்.
15.காவிரி தீர்த்தத்தில் நீராடினால் மானச பாவ நிவர்த்தியும், காம்யார்த்த சித்தியும் கிடைக்கும்.
16.குமரி தீர்த்தத்தில் நீராடினால் பதினாயிர அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்,
17.பயோட்டிணி தீர்த்தத்தில் நீராடினால் காமதேனு கிடைத்தது போன்று வாழ்வு கிட்டும்.
18.சரயு தீர்த்தத்தில் நீராடினால் கலி கால கஷ்ட நிவர்த்தி ஏற்படும்.
19.அறுபத்தாறு கோடி தீர்த்தத்தில் நீராடினால் உலகின் சகல தீர்த்தங்களிலும் நீராடிய பலன் அனைத்தும் கிட்டும்.
20.தேவ தீர்த்தத்தில் நீராடினால் கல்வி அறிவு கிடைக்கும்.
இத்தகைய சிறப்புமிக்க இருபது தீர்த்தங்க ளும், இந்த மகாமகக் குளத்தில் உள்ளன. இந்த தீர்த்தங்களின் பலனைப் பெற ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் மகத்தன்றும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத்தன்றும், இந்த மகாமகக் குளத்து தீர்த்தங்களில் நீராடி, அனைத்துப் பயன்களும் பெறலாம். மகாமக புண்ணிய காலம் என்பது பகல் 10.30 மணிக்கு மேல் 12.00 மணிக்குள் ஆகும். இந்த நேரத்தில் இங்கு தீர்த்தமாடுதல் மிகச் சிறப்பாகும். இந்த புண்ணிய காலத்தில் இந்த தீர்த்தத்தை வணங்குவதால் தேவர்கள் யாவரையும் வணங்கிய புண்ணியம் கிட்டும்.
இந்த மகாமகக் குளத்தில் குளிப்பதற்கு முன் காவேரி ஆற்றில் நீராடுவது வழக்கமாக உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க இந்த மகாமகத் தீர்த்தத்தை ஒருமுறை வலம் வந்தால் பூமியை நூறுமுறை வலம் வந்த பலன் கிட்டும். இந்த தீர்த்தத்தை உட்கொள்ள பாவங்கள் யாவும் தீரும், இந்த மகாமகக் குளத்தில் குளிக்க வேண்டும் என்று நினைத்தாலே சகல செல்வமும் கிட்டும். மேலும் சந்ததி இல்லாதவர்கள் சந்ததி வேண்டி வருடந்தோறும் வரும் மாசி மகத்தன்று மூழ்க வேண்டும். இவ்வாறு ஐந்து வருடம் மூழ்கினால் தீர்க்காயுள் உள்ள பிள்ளை கிடைக்கும். மகாமகத்தன்று மூழ்கினால் முருகனே மகனாக வருவான் என்கிறது புராணங்கள்.
இத்தகைய சிறப்புமிக்க புண்ணிய தீர்த்தத்தில் தினமும் மூழ்குதல் மிகவும் உத்தமம் ஆகும். அப்படி முடியாவிட்டால் சித்திரை, கார்த்திகை, மாசி ஆகிய மாதங்களில் மூழ்குவது மிகவும் சிறப்பாகும். இதுவும் முடியாவிட்டால் மாசி மாதம் மூழ்குவது சிறப்பு. இதுவும் முடியாவிட்டால் மாசி மகத்தன்றாவது மூழ்க வேண்டும். இதுவும் முடியாவிட்டால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா மகத்தன்றா வது மூழ்குதல் வேண்டும். அப்படியே முடியா விட்டாலும், மகாமகக் குளத்தில் நீராடி வருபவர்களை யாவது தரிசிக்க வேண்டும்.
இதுவும் முடியாவிட்டலும் கும்பகோணம் இருக்கும் திக்கை நோக்கி வணங்கி, பூசித்து, தீர்த்தத்தை தியானித்து இருந்தால்கூட அந்த ஸ்நான பலனைப் பெறலாம் என புராணங்கள் கூறுகின்றன. இங்கு மாசி மகத்தன்றும், மகாமகத்தன்றும் இந்தத் தீர்த்தக் கரையில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியமாகக் கருதப்படுகிறது. இந்த மகாமகத் தீர்த்தத்துடன் தொடர்புடைய குடவாசல் தீர்த்தத்தைப் பற்றியும், சாக்கோட்டை தீர்த்தத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். அங்கும் சென்று அவசியம் நீராட வேண்டும். இந்த இரு தல தீர்த்தங்களிலும் நீராடிய பின்பே, மகாமகத் தீர்த்தத்தில் நீராடுவது முறையாகும்.
இந்த தீர்த்தங்களில் நீராடினால் நிச்சயம் அனைத்து தோஷங்களும் விலகும். தோஷங்கள் விலகினால் நிம்மதியாக வாழலாம். அது மட்டும் போதுமா?
நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் அல்லவா? அதற்கு திருக்கடையூரில் உள்ள அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடு செய்ய வேண்டும். திருக்கடையூர் ஆலயம் பற்றி அடுத்த வாரம் காணலாம்.