- காசியில் இறப்பதால் எம பயமில்லாது போனாலும் ஒரு நாழிகையாவது பைரவரின் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
- காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது மாசி மகத்தன்று இத்தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.
உலகிலேயே புண்ணியத்தை அதிகம் வழங்கும் இடமாக 'காசி' தலம் கருதப்படுகிறது. அத்தகைய மகத்துவம் வாய்ந்த 'காசி' திருத்தலத்திற்கு 100 முறை சென்று வந்த பலனை தமிழகத்தில் கும்பகோணத்திற்கு அருகே உள்ள "ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி" கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தால் கிடைக்கும் என்று பிரமாண்ட புராணம் கூறுகிறது. இந்த ஆலயத்தின் பின்னணியில் உள்ள தல வரலாறு வருமாறு:-
உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் அதன் இறுதி காலத்தில் பறிக்கும் போது தனக்கு அவப்பெயர் ஏற்படுவதாக எமதர்மராஜா மிகவும் வருந்தினார். அதனால் 'திருவாரூர் தியாகராஜரிடம்' சென்று தனது குறையை தெரிவித்தார். அதற்கு இறைவனும், ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடும்படி அசரீரியாக கூறினார். அதன்படி எமதர்மன் "ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாத சுவாமி" கோவிலுக்கு வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். எமதர்மனின் தவத்தில் மகிழ்ந்த இறைவன் மாசி மாதம், பரணி நட்சத்திரத்தில் காட்சியளித்து எமதர்மனுக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார்.
எமதர்மனும் இறைவா அனைத்து உயிர்களையும் பறிக்கும் பதவியால் எல்லோரும் என்னை கண்டு பயந்து திட்டுகின்றனர். உயிர்களைப் பறிப்பதால் "பிரம்மஹத்தி தோஷம்" பிடித்து என்னை வாட்டுகிறது. எனவே அதிலிருந்து நீங்கும் வரம் வேண்டும் என்றார். எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன் எமதர்மா இனிமேல் யாரும் எமன் உயிரை பறித்துவிட்டான் என கூற மாட்டார்கள். நோய் வந்ததால், வயதாகி விட்டதால், விபத்து ஏற்பட்டு இறந்தான் என்றே கூறுவார்கள். அதனால் உனக்கு எந்த பழியும் பாவமும் ஏற்படாது, மேலும் நீ தவம் செய்த இந்த இடத்திற்கு புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும். இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தலத்தின் ஷேத்திர பாலகனாக நீ விளங்குவாய். இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்பு என்னை தரிசிப்பார்கள் என்று கூறினார். அதன்படி இங்கு எமதர்மராஜனுக்கு முதல் வழிபாடு நடைபெறுகிறது.
யோக நிலையில் எமதர்மன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்குகிறது. காசியில் இறப்பதால் எம பயமில்லாது போனாலும் ஒரு நாழிகையாவது பைரவரின் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
ஆனால் ஸ்ரீவாஞ்சியத்தில் இறந்தவருக்கு எமபயம், பைரவ தண்டனை எதுவுமே கிடையாது. இங்கு பைரவரும் யோக நிலையில் இறைவனை வணங்கி கொண்டு இருக்கிறார். எனவே எமதர்மன் பைரவர் இருவருக்குமே அதிகா ரம் இல்லாத இத்தலம் காசியை காட்டிலும் 100 மடங்கு உயர்ந்தது என்று முனிவர்கள் கூறுகின்றனர். ஸ்ரீவாஞ்சியத்தின் சிறப்பு குறித்து பிரமாண்ட புராணத்திலும் கூறப்பட்டு உள்ளது.
மக்கள் அனைவரும் கங்கையில் குளித்து தங்களது பாவத்தை தீர்ப்பதால் கங்காதேவியிடம் பாவம் சேர்ந்துவிட்டது. அதனால் தன்னிடம் சேர்ந்த பாவத்தை போக்க வேண்டும் என்று "கங்காதேவி" சிவபெருமானிடம் சென்று முறையிட்டாள். அதற்கு சிவபெருமான் பதில் கூறுகையில் உயிர்களைப் பறிக்கும் எமதர்ம னுக்கு பாவம் விமோசனம் அளித்த ஸ்ரீவாஞ்சியதிற்கு சென்று வணங்கினால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும் என்று கூறினார்.
அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதியுள்ள 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் வந்திருப்பதாக ஐதீகம். அதனால் "குப்த கங்கை தீர்த்தம்" என்று அழைக்கப்பட்ட இங்கு உள்ள தீர்த்தம் தற்போது 'முனி தீர்த்தம்' என்று அழைக் கப்படுகிறது.
எனவே காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது மாசி மகத்தன்று இத்தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது. மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரக்காரர்கள், மேஷம், சிம்மம், கும்பம் ராசி மற்றும் லக்னக்காரர்கள் தங்கள் தோஷங்கள் நீங்குவதற்கு இங்கு வந்து பரிகாரம் செய்து வழிபடலாம்.
பதவி இழந்தவர்கள், பணி மாற்றம் விரும்புபவர்கள், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் குப்த கங்கையில் குளித்து வாஞ்சிநாதரை வழிபடுவது சிறந்தது.
உயிரை மாய்த்திடும் பணியில் ஈடுபட்டிருக்கும் எம தர்ம ராஜன் தன் பணியின் கொடுமையினால் ஏற்பட்ட மனச்சுமை நீங்கிட, இத்தல ஈசனான வாஞ்சி லிங்கேஸ்வரரை வணங்கினார். அது முதல் எமனை சேத்திர பாலகராக நியமித்து, கோயிலின் அக்னி மூலையில் தனிக் கோயில் ஒன்றை நிர் மாணித்தார் ஈசன்.
தெற்கு நோக்கிய சந்நிதியில் எமன் நான்கு திருக்கரங்களுடன் பாசம், கதை, ஆலம் ஏந்தி இடக் காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்டு பாதக்குறடுடன் அமர்ந்த நிலையில், காட்சி தருகிறார். அவர் அருகில் முனிவர் போல். ஒரு வரது சிலை வடிவம் உள்ளது.
யோக நிலையில் எமன் இருப்பதால் இங்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு மரண பயம் நீங்கும். காசியில் மரித்தால், எம பயமில்லாவிட்டாலும் ஒரு நாழிகையாவது பைரவ தண்டனை உண்டு, ஆனால், ஸ்ரீ வாஞ்சியத்தில் மரித்தவருக்கு எம பயம், பைரவ தண்டனை என்ற இரண்டுமே கிடையாது. இங்கு பைரவரும் யோக நிலையில், தமது தண்டங்களை யெல்லாம் கீழே வைத்து விட்டு, ஈசனையே துதித்த வண்ணமிருக்கிறார்,
எமன், பைரவர் இருவருக்குமே அதிகாரமில்லாத இத்தலம், 'காசியைக் காட்டிலும் நூறு மடங்கு உயர்ந்தது' என முனிவர்கள் கூறுகின்றனர். பிரம்மாண்ட புராணத்திலும் விரிவாகக் கூறப் பட்டுள்ளது. ஒரு சமயம், திருமானுக்கும் லட்சுமி தேவிக்கும் ஊடல் ஏற்பட்டது. தேவி கண்காணாத தொலைவுக்குச் சென்று விடுகிறாள். அவளில்லாமல், திருமால் தவிக்கிறார். நல்லதொரு முடிவைக் கண்டிட மைத்துனன் சிவபெருமானை அணுகுகிறார் திருமால்.
இந்த நிலை கண்ட கயிலை நாதன் தேவியை அணுகி "உலகெல்லாம் போற்றித் துதிக்கப்படும் தேவி நீ இல்லையென்பதால், பொலிவிழந்து காணப்படுகிறது. தேவி! தயை கூர்ந்து உனது கணவனுடன் வாஞ்சையாக இருந்திட வருவாய்!'' என்று இறைஞ்சி கேட்கிறார் மகாதேவன்.
பிரிவால் வாடியிருந்த அன்னைக்கு இந்த அழைப்பு. ஆறு தலாக இருந்தது. கணவனுடன் சேர்ந்திட மன மகிழ்ந்து ஒப்புக் கொள்கிறாள். லட்சுமி தேவியை வாஞ்சையுடன் அழைத்தமையால், ஈசன் வாஞ்சி நாதேஸ்வரர் ஸ்ரீவாஞ்சி லிங்கேஸ்வரர் என்ற திருநாமங்களைப் பெற்றார். இந்தத் தலத்திற்கு 'ஸ்ரீவாஞ்சி யம்' என்ற தலப்பெயரும் கிடைத்தது.
திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் அருகில் ஸ்ரீவாஞ்சியம் அமைந்துள்ளது. வியாசர் அருளிய ஸ்காந்த புராணம், பிரம்மாண்ட புராணம் ஆகியவற்றில் இந்தத் தலத்தின் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது இதில் இருந்து கோவிலின் தொன்மையைப் புரிந்து கொள்ளலாம். இந்தத் தலத்தில் தேவர்களும் முனிவர்களும் கடும் தவமிருந்து சிவ பூஜை செய்தி ருக்கிறார்கள். தெய்வங்களே இங்கு வந்து, சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொண்டி ருக்கிறார்கள். அவ்வளவு ஏன்... எமதருமருக்கு சிவனார் அருளிய பேறு பெற்ற திருத்தலம் இது. ஆகவே இந்தத் தலத்தின் அம்மைக்கும் அப்பனுக்கும் வாகனத் தொண்டு செய்து வருகிறார். இதனால் எம தருமருக்கு இங்கு தனிச் சந்நிதி உள்ளது.
நால்வர் பெரு மக்கள், அருண கிரிநாதர், வள்ளலார் பெருமான் ஆகியோரால் பாடல்கள் பெற்ற திருத்தலம் இது. இந்தத் தலத்துக்கு வந்து தரிசிக்கும் பாக்கியம் இருந்தால்தான் இங்கு வந்து தரிசிக்க முடியும் என்பது ஐதீகம். அற்புதமான ஆலயம். தலம், தீர்த்தம், மூர்த்தம் என விசேஷங்கள் கொண்ட கோவில். எம பயம் முதலான பலவற்றுக்கு பரிகாரத் தலமும் இதுவே! இந்த பிறவியில் ஒருமுறை யேனும் வாஞ்சியம் வந்து வாஞ்சி நாதரை தரிசித்துவிட்டு, எமதருமனையும் வணங்கினால், இந்த வாழ்க்கை நிம்மதியாகவும் நிறைவுடனும் அமைந்துவிடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!
இந்தக் கோவிலின் தீர்த்தம், குப்த கங்கை எனப்படுகிறது. கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில், இங்கு வந்து நீராடிவிட்டு, இறைவனைத் தரிசித்தால் ஏழு ஜென்மப் பாவங்களும் தீரும் என்பது ஐதீகம்! குறிப்பாக, கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை இன்னும் விசேஷ மாகவும் கூட்டமாகவும் இருக்கும் என்கிறார்கள் பக்தர்கள்!
கார்த்திகை மாதம் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக் கிழமையில், ஸ்ரீவாஞ்சியம் வாருங்கள். பிறவிப்பயனைப் பெறுங்கள். 7 ஜென்மப் பாவம் நீங்கி, புத்துணர்வுடன் வாழ்வீர்கள்! "காசியைவிட வீசம் அதிகம்" என்று காசியைக் காட்டிலும் சிறப்பான சிவத்தலமாக புகழ்ந்து கூறப்படுகிறது, இந்த ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில்.
இங்கு இரண்டு நந்தி சிலைகள் உள்ளன. ஒன்று கோவிலின் கிழக்கு திசையிலும் மற்றொன்று மேற்கிலும் அமைந்துள்ளது.
இந்த கோவில் காசிக்கு சமமாக கருதப்படும் ஆறு சிவன் கோவில்களில் ஒன்றாகும். காசி விசுவநாதர் கோவிலுக்கு சமமான காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோவில்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
காவிரி ஆற்றங்கரையில் உள்ள திருவையாறு, திருவிடை மருதூர், மயிலாடுதுறை மயூரநாதர் சுவாமி கோவில், சாயாவனேசுவரர் கோவில், சாயாவனம். (பூம்புகார் அருகில் உள்ளது) திருவெண்காடு, ஸ்ரீவாஞ்சியம் கோவில்களுக்கு வருகை தருவது சிவ பக்தர்களின் பாவங்கள் மட்டுமல்லாது, அவரது மூதாதை யர்களின் பாவங்களையும் தீர்க்கும் என்று கூறப்படுகிறது. ஸ்ரீவாஞ்சியத்தில் எம தீர்த்தம் மற்றும் குப்த கங்கை ஆகியவை கோவில் தீர்த்தங்களாக உள்ளன. இந்த இடத்தில் பித்ரு தர்ப்பணம் செய்தால், அது புறப்பட்ட ஆத்மாக்களுக்கு இரட்சிப்பைக் கொடுக்கும் என்று தல வரலாற்றில் கூறப்பட்டு உள்ளது. ஸ்ரீவாஞ்சியத்தின் மண்ணில் புறப்படும் ஆத்மாக்களுக்கு வாஞ்சிநாத பகவான் மோட்சத்தை அளிப்பதால் இந்த இடத்தில் மரணம் புனிதமாகவும், இந்த இடம் காசிக்கு சமமாகவும் கருதப்படுகிறது.
இந்த கோவில் சூரிய மற்றும் சந்திர கிரகணத்தின் போது கூட திறந்திருக்கும் (இது கிரகணங்களின் போது மூடப்படும் அனைத்து கோவில்களுக்கும் முரணானதாகும்). பொதுவாக, கிராமத்தில் மரணம் ஏற்படும் போது அங்குள்ள கோவிலை மூடுவது வழக்கம். ஆனால், இந்த கிராமத்தில் யார் இறந்தாலும் வாஞ்சிநாதர் கோவில் மூடப்படாமல் திறந்திருக்கும். காசியில் உள்ள கங்கையை விட இங்குள்ள குப்தா கங்கை தீர்த்தம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. மகாமக தீர்த்தம் பற்றி அடுத்த வாரம் காணலாம்.