சிறப்புக் கட்டுரைகள்

திருமண யோகம் தரும் திருமணஞ்சேரி

Published On 2023-12-07 16:54 IST   |   Update On 2023-12-07 16:54:00 IST
  • குழந்தை பாக்கியத்துக்காக வழிபட விரும்புபவர்கள் இந்த தலத்துக்கு அமாவாசை தினத்தன்று செல்ல வேண்டும்.
  • சோழ அரசி செம்பியம் மாதேவியால் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து பஸ் மூலம் மிக எளிதில் சென்று வரலாம்.

கும்பகோணம் பகுதியில் உள்ள ஆலயங்களில் மிகவும் தனித்துவம் வாய்ந்தது திருமணஞ்சேரி. சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்த இடம் என்ற சிறப்பு இந்த தலத்துக்கு உண்டு. இதனால்தான் இந்த தலத்தின் பெயர் திருமணஞ்சேரி என்று அழைக்கப்படுகிறது.

இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறும் சொல்லப்படுகிறது.

சிவனுக்கும் பார்வதிக்கும் கைலாயத்தில் திருமணம் நடந்தது. அந்த சமயத்தில் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்ததால் அகத்திய முனிவரை சிவபெருமான் தென்நாட்டுக்கு அனுப்பி உலகை சமன் செய்ததாக சொல்வார்கள்.

இந்த திருமணத்துக்கு பிறகு மீண்டும் ஒரு தடவை சிவபெருமானை திருமணம் செய்ய வேண்டும் என்று பார்வதிதேவி ஆசைப்பட்டாள். தனது ஆசையை சிவபெருமானிடம் வெளிப்படுத்தி அதை வரமாக கேட்டாள். அந்த வரத்தை கொடுக்க ஈசனும் சம்மதித்தார்.

என்றாலும் திருமணத்தை எப்போது, எப்படி, எங்கு நடத்துவது என்பதை சிவ பெருமான் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் நாட்கள் கடந்து கொண்டே இருந்தன. இதனால் பார்வதி தேவி அதிருப்தி அடைந் தாள். சிவ பெருமானிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தினாள்.

அந்த சமயத்தில் சிவபெரு மானுக்கும் கோபம் ஏற்பட்டது. மறுநிமிடமே பார்வதி தேவிக்கு சிவபெருமான் சாபமிட்டார். பூமியில் பசுவாக பிறந்து அலைந்து திரிய வேண்டும் என்று சாபமிட்டார். இதன் காரணமாக பூமியில் பார்வதிதேவி பசுவாக உருவெடுத்தாள்.

தனக்கு ஏற்பட்ட சாபத்தை நிவர்த்தி செய்து கொள்ள மீண்டும் சிவபெருமானை நோக்கி வழி பட்டாள். பல்வேறு தலங்களுக்கும் சென்று ஈசனை வழிபட்டாள். இதனால் மனம் இரங்கிய சிவபெருமான் விரைவில் பூமிக்கு வந்து பார்வதிதேவியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.

அதன்படி தற்போது திருமணஞ்சேரி என்று அழைக்கப்படும் இடத்தில் சிவபெருமான்- பார்வதி தேவி திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு பரதமகரிஷி மிகப்பெரிய யாகவேள்வி குண்டத்தை அமைத்து பூஜைகள் செய்தார்.

அந்த திருமணத்துக்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் அழைக்கப்பட்டனர். அவர்களை மகாவிஷ்ணு அழைத்து சென்றார். மணப்பெண் ணாக பார்வதிதேவி தயாராக இருந்த நிலையில் அங்குள்ள யாக குண்டத்தில் இருந்து சிவபெருமான் மணமகனாக தோன்றினார். இதையடுத்து சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது மகாவிஷ்ணு தங்கை பார்வதியை கன்னிகா தானம் செய்து கொடுத்தார். பிரம்மா புரோகிதராக இருந்து திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் தேவர்கள், ரிஷிகள் கலந்து கொண்டு வாழ்த்தினார் கள். இப்படி பிரமாண்டமாக திருமணம் நடந்த தால் அந்த இடம் திருமணஞ்சேரி என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிகழ்வை உறுதிப்படுத்தும் வகையில் திருமணஞ்சேரியை சுற்றி இருக்கும் இடங்களும் அதற்கேற்ப பெயர் பெற்றுள்ளன. திருமணஞ்சேரி தலத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் மேலதிருமணஞ்சேரி உள்ளது. இந்த ஊருக்கு எதிர்கொள்பாடி என்ற பெயரும் உண்டு. சிவன்-பார்வதி திருமணத்துக்கு வந்த முப்பத்து முக்கோடி தேவர்களை மகாவிஷ்ணு எதிர்கொண்டு அழைத்த இடம் என்பதால் அந்த ஊருக்கு எதிர்கொள்பாடி என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.

ஆண்டு தோறும் இந்த ஊரில் இருந்துதான் சிவன்-பார்வதி திருமணத்துக்கு லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசைகள் கொண்டு செல்லப்படுகின்றன என்பது குறிப்பி டத்தக்கது. திருமணஞ்சேரியில் சிவனும், பார்வதியும் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து திருமணம் செய்த னர். அவர்களை மேற்கு பார்த்து நின்று விஷ்ணு வாழ்த்தினார். இதை பிரதிபலிக்கும் வகையில் எதிர்கொள்பாடியில் பெருமாள் மேற்கு பார்த்து காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சிறப்புடைய திருமணஞ்சேரி தலத்தில் வேண்டிக்கொண்டால் எத்தகைய திருமண தடைகள் இருந்தாலும் அவை அனைத்தும் பனி போல் விலகி மிக விரைவில் திருமணம் கை கூடும் என்பது ஐதீகமாகும். திருமண பிரார்த்தனைக்காக வருபவர்கள் உரிய முறைபடி இந்த ஆலயத்தில் பரிகார பூஜைகள் செய்ய வேண்டும்.

முதலில் ஆலயத்துக்கு வந்ததும் தங்களை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் ஆலயம் அருகே உள்ள சப்தகிரி தீர்த்தத்தில் குளித்து விட்டு ஆலயத்துக்கு செல்வார்கள். தற்போது அது இயலாத காரியம் என்பதால் தலையில் தீர்த்தத்தை தெளித்துக் கொண்டால் போதும்.


பின்னர் ஆலயத்துக்குள் சென்று கல்யாண அர்ச்சனையில் பங்கேற்க வேண்டும். இந்த கல்யாண அர்ச்சனைக்காக 2 மாலை, 2 தேங்காய், மஞ்சள்-குங்குமம், சூடம், வெற்றிலை பாக்கு, எலுமிச்சப்பழம், சர்க்கரை வாங்கி செல்ல வேண்டும். குறிப்பாக கல்கண்டு இடம் பெறுவது நல்லது.

இவை அனைத்தும் ஆலயம் அருகிலேயும் ஆலயத்துக்கு உள்பகுதியிலும் கிடைக்கும். இந்த பூஜை பொருட்களுடன் கோவிலுக்குள் இருக்கும் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபட வேண்டும். மூலவரையும் வழிபட்டு அங்கு அர்ச்சனை செய்து தீபம் வைக்கப்படும் மேடையில் 5 தீபம் வைக்க வேண்டும். இதையடுத்து கல்யாண சுந்தரர் சன்னதிக்கு செல்ல வேண்டும். அங்குள்ள பெரிய அரங்கத்தில்தான் திருமண யோகம் பெறும் பூஜைகள் நடத்தப்படும். கல்யாண வரம் வேண்டி வந்திருப்பவர்கள் ஒரு பக்கமாகவும், இந்த தலத்தில் வேண்டிக் கொண்டு திருமணம் ஆனவர்கள் தம்பதி சகிதமாக மற்றொரு பக்கமாகவும் அமர வைக்கப்படுவார்கள்.

பின்னர் கல்யாண வரம் வேண்டி வந்திருப்பவர்களிடம் இருந்து பூஜைக்குரிய பொருட்களை அர்ச்சகர் வாங்கி சென்று கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்வார். சுவாமி மீது சாத்தப்பட்ட மாலைகளில் ஒன்றை ஒவ்வொருவருக்கும் கொடுப்பார். தம்பதிகள் அந்த மாலையை மாற்றிக் கொள்வார்கள்.

திருமண வரம் வேண்டி சென்றவர்கள் அந்த மாலையை பெற்று தங்கள் கழுத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். அந்த மாலையை பத்திரமாக வீட்டுக்கு எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும். அந்த மாலைக்கு தனி மகத்துவம் உண்டு. அந்த மாலையை எப்படி பராமரித்து பூஜைகள் செய்ய வேண்டும் என்பதை அர்ச்சகர் தெளிவாக மைக்கில் சொல்வார். இதை கவனமுடன் கேட்டுக் கொள்ள வேண்டும்.

இந்த அர்ச்சனையின்போது பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சம் பழம் ஒன்றையும் அர்ச்சகர் தருவார். அதை மறுநாள் காலை சாறு பிழிந்து காலை உணவுக்கு முன்பு அருந்த வேண்டும். அர்ச்சகர் சொல்வது போல மாலை, விபூதி, குங்குமம், மஞ்சள் போன்றவற்றை பூஜை அறையில் வைத்து வழிபட்டு வர வேண்டும். இந்த வழிபாட்டால் நிச்சயம் விரைவில் திருமணம் நடைபெறும்.

திருமணஞ்சேரியில் சிவனும், பார்வதியும் கைகோர்த்த நிலையில் புன்னகை பூக்க அழகாக காட்சி தருகிறார்கள். அந்த காட்சியை கண்குளிர கண்டு தரிசனம் செய்து வந்தாலே தோஷங்கள் அனைத்தும் விலகி உடனே திருமணம் கை கூடும் என்பது பலரது வாழ்விலும் நடந்த அனுபவப்பூர்வமான உண்மையாகும்.

திருமணம் நடந்த பிறகு பூஜையில் வைத்து வழிபட்டு வந்த மாலையை மீண்டும் திருமணஞ்சேரி தலத்துக்கு எடுத்து வர வேண்டும். தம்பதிசகிதமாக கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு நன்றி தெரிவித்து பிரார்த்தனையை நிறைவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் இத்தகைய பிரார்த்தனை தலம் திருமணஞ்சேரி மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது. எனவே கும்பகோணம் ஆலய வழிபாட்டுக்கு செல்லும் போது கும்பகோணத்தில் இருந்து மிக அருகில் உள்ள இந்த தலத்துக்கு செல்வதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

குழந்தை பாக்கியத்துக்காக வழிபட விரும்புபவர்கள் இந்த தலத்துக்கு அமாவாசை தினத்தன்று செல்ல வேண்டும். அங்கு மனித உருவில் இருக்கும் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து பால் பாயாசம் நைவைத்தியம் படைத்து பூஜை செய்து சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

குழந்தை பெற்ற பிறகு மீண்டும் இந்த தலத் துக்கு வந்து கொலுசு, மணி, விளக்கு வகைகள் போன்றவற்றை காணிக்கை செலுத்து வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

சிவபெருமான் நெற்றி கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதன் தனது தவறுக்கு வருந்தி ஈசனை பல ஆண்டுகள் வழிபட்டான் அவனுக்கு இந்த தலத்தில்தான் சிவபெருமான் சாபவிமோசனம் வழங்கினார். எனவே இந்த தலத்தில் வழிபட்டால் எத்தகைய சாபமும் நிவர்த்தி ஆகும்.

அது மட்டுமல்ல இந்த தலம் நித்திய கல்யாண தலம் என்ற சிறப்புக்குரியது. சிவனும், பார்வதியும் கை கோர்த்த நிலையில் இங்கு இருப்பதும் தனி சிறப்பாக கருதப்படுகிறது. அதுமட்டுமல்ல சிவன், பார்வதி, விஷ்ணு, லட்சுமி, பிரம்மா ஆகியோர் இந்த தலத்தில் வாசம் செய்வதாக சொல்கிறார்கள்.

ஆகையால் இங்கு வழிபட்டால் தடைபட்ட திருமணம் விரைவில் கைகூடும். இந்த தலத்தில் தாயார் கோகிலாம்பிகை என்ற பெயரில் வீற்றிருக்கிறாள். சித்திரை மாதம் பூசம் நட்சத்திரத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் இந்த தலத்தில் நடக்கும் திருமணம் மிக விமர்சையாக நடைபெறும்.

இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. சிவபெருமான் இங்கு உத்வாக நாதராக இருந்து அனைத்தையும் ஆட்சி செய்கிறார். இவரை வழிபட பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம். சோழ அரசி செம்பியம் மாதேவியால் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு கும்பகோணத்தில் இருந்து பஸ் மூலம் மிக எளிதில் சென்று வரலாம்.

திருமணம் ஆகி விட்டது. வருகிற கணவர் நல்லவராக இருக்க வேண்டுமே? அதற்கு கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் உள்ள மங்களாம்பிகையை வழிபட வேண்டும். அந்த வழிபாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

Tags:    

Similar News