சிறப்புக் கட்டுரைகள்

சனி தோஷத்தை சமாளிக்கலாம்

Published On 2023-11-21 16:47 IST   |   Update On 2023-11-21 16:47:00 IST
  • ஒருவர் என்ன நன்மை-தீமை செய்கிறாரோ அவருக்கு ஏற்றபடி சனி பகவான் செயல்படுவார்.
  • வசதி, வாய்ப்பு இருப்பவர்கள் சனிக்கிழமை சனி ஓரையில் வழிபட்டு தானங்கள் செய்யலாம்.

நவக்கிரகங்களில் சனி கிரகம் என்றதும் பலருக்கும் பயம் வந்து விடுகிறது. அந்த அளவுக்கு சனிதோஷம் மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆனால் எல்லோரும் நினைப்பது போல சனி பகவான் ரொம்பவும் மோசமானவர் அல்ல.

ஆயுள் காரகனான சனியை கண்டு யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இவரை பொறுத்தவரை வேண்டியவர், வேண்டாதவர் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. ஒருவர் என்ன நன்மை-தீமை செய்கிறாரோ அவருக்கு ஏற்றபடி சனி பகவான் செயல்படுவார். எனவே தான் நவக்கிரகங்களில் இவரை தலைமை நீதிபதி என்றுகூட சொல்வது உண்டு.

பொதுவாக ஒருவர் ஜாதக அமைப்பில் 1, 2, 5, 7, 8, மற்றும் 12-ம் இடங்களில் சனி அமர்ந்திருந்தால் அது தோஷமாக கருதப்படும். அதாவது ஜாதகத்தில் லக்னத்தில் சனி இருந்தால் அவர் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டு எப்போதும் சோம்பலான மன நிலையில் இருப்பார். 2-வது இடத்தில் சனி இருந்தால் திருமணம் நடைபெறுவது தாமதம் ஆகும் என்பார்கள். சிலருக்கு 2-வது இட சனியால் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் என்று கூட மிரட்டுவார்கள்.

5-வது இடத்தில் சனி இருந்தால் குழந்தை பாக்கியம் தாமதமும், 7, 8-வது இடங்களில் இருந்தால் திருமண தாமதமும் உண்டாகும் என்பார்கள். 12-வது இடத்தில் சனி இருந்தால் விரக்தியான மனநிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று குறிப்பபுகள் உள்ளன. அது போல செவ்வாய், சந்திரன், ராகு ஆகியோரது வீட்டில் சனி நுழைந்தாலும் அது சனி தோஷத்துக்கு காரணமாக அமைந்து விடும் என்று ஜோதிட முறையில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒரு ஜாதகத்தில் சனியும், சந்திரனும் சேர்ந்து நின்றால் அது நல்ல நிலையில் இருந்தாலும் அதை சனி தோஷம் என்றுதான் சொல்வார்கள். சனி வீட்டில் சந்திரன் இருந்தாலோ அல்லது சந்தி ரன் வீட்டில் சனி இருந்தாலோ அதையும் தோஷம் என்று தான் குறிப்பிடுவார்கள்.

சந்திரன் வேகமாக செயல்படுபவர். 30 நாளில் ராசி மண்டலத்தை சுற்றி விடுவார். சனி சற்று மந்தமாக செயல்படுபவர். ராசி மண்டலத்தை சுற்ற 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். இப்படி வேகமும், மந்தமும் கொண்ட இரு கிரகங்கள் இணைவது பெரும்பாலும் தோஷத்துக்கு அடிப்படையாக அமைந்து விடும்.


சனி ஒரு வீட்டை கடந்து செல்ல சுமார் 2½ ஆண்டுகள் ஆகும். இப்படி அனைத்து வீடுகளிலும் ஒரு சுழற்சியை முடிக்க சுமார் 30 ஆண்டுகள் ஆகும். இதன் அடிப்படையில்தான் சனிதோஷத்தின் பல்வேறு வகைகள் கணிக்கப்படுகிறது. அதாவது ஏழரை சனி, அஷ்டமத்து சனி, கண்ட சனி, மங்கு சனி, பொங்கு சனி என்றெல்லாம் சொல்வார்கள்.

சனி பகவான் கோச்சாரத்தில் சஞ்சரிக்கும் ஏழரை ஆண்டுகளை ஏழரை சனி பிடித்துவிட்டது என்று சொல்வார்கள். சனி 8-வது இடத்தில் இருந்தால் அஷ்டமத்து சனி என்பார்கள். அதுபோலதான் மற்ற வகை சனிகளும் சொல்லப்படுகின்றன.

சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாக பிறந்த சனி பகவான் புதன், சுக்கிரன், ராகு, கேதுவுடன் நட்புடன் இருப்பார். சூரியன், சந்திரன், செவ்வாய் சேர்க்கை ஆகவே ஆகாது. இந்த கிரக அமைப்புகளுக்கு ஏற்பதான் ஒருவரது குணத்தில் நடவடிக்கைகளில் சனி நல்லதையும் செய்வார், கெட்டவைகளையும் செய்வார். சனியை அடிப்படையாக கொண்ட கிரக அமைப்புகள் நன்றாக இருந்தால் ஒன்றும் இல்லாதவர்களையும் உச்சாணி கொம்புக்கு கொண்டு போய் விடுவார். பூமி, வாகனம், வசதி ஏற்படுத்தி கொடுத்து பதவிகளையும் தந்து புகழ் பெற செய்வார்.

அதே சமயத்தில் ஒருவரது ஜாதகத்தில் சனி கெடுதல் செய்பவராக இருந்தால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி உச்சாணியில் இருந்து அதல பாதாளத்தில் தள்ளி விட்டு விடுவார். எனவேதான் சனி போல் கொடுப்பாரும் இல்லை. கெடுப்பாரும் இல்லை என்று இதை சொல்வார்கள்.

பொதுவாகவே சனியிடம் இருந்து யாருமே தப்ப முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கால கட்டத்தில் சனி பார்வைக்கு வந்துதான் செல்ல வேண்டும். அப்படி அவர் வரும்போது நல்ல நிலையில் இருந்தால் நீங்கள் அவரை வணங்க வணங்க மேலும் நல்லது நடக்கும். ஒருவேளை சரியில்லாத சூழ்நிலை இருந்தால் சனி பகவான் தரும் தோஷத்தை நிவர்த்தி செய்யும் வகையில் அவசியம் பரிகாரம் செய்ய வேண்டும்.

அப்படி செய்தால்தான் சனி தோஷத்தின் மிக கடுமையான பாதிப்புகளை சற்று குறைக்க முடியும். சனி தோஷம் இருந்தால் ஒவ்வொரு முயற்சியும் தடைபடும். உறவுகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழிலில் பின்னடைவு காணப்படும். நோய்கள் தாக்கம் உடலை படாதபாடு படுத்திவிடும். சில சனி தோஷம் வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும். கடன்களை அதிகரிக்க செய்யும். எனவே இவற்றில் இருந்து விடுபட வீட்டிலேயே எளிய பரிகாரங்கள் செய்யலாம்.

இதில் முதன்மையானதாக தானம் சொல்லப்பட்டு உள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஏழை-எளியவர்களுக்கு இயன்ற தானத்தை செய்யலாம். உங்களால் என்ன தானம் செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். சனி பகவான் மனம் இரங்குவார். அடுத்து சனி பகவான் மனம் குளிர செய்ய விரதம் இருக்கலாம். 51 சனிக்கிழமை விரதம் இருந்தால் சனி பாதிப்பு பாதியாக குறைந்து விடும் என்பார்கள்.

வீட்டிலேயே சனியை சாந்தப்படுத்தும் பாடல்களை படிக்கலாம். சிவன் துதி, அனுமன் துதிகளை சொல்லிக் கொண்டே இருக்கலாம். தினமும் வீட்டில் பூஜை செய்து முடித்ததும் சிவன், லட்சுமி, நரசிம்மர், அனுமன், சனி பகவானுக்குரிய காயத்ரி மந்திரங்களை மனதில் உள்வாங்கிக் கொண்டு சொல்லுங்கள். சனி ஓடோடி வந்து உங்களுக்கு உதவுவார்.

சனிக்கிழமைகளில் பிரதோஷம் வந்தால் அது மகாபிரதோஷம் என்று அழைக்கப்படும். அன்றைய நாட்களில் நந்தியை வழிபடுவது விசேஷமானது. அன்று சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட்டால் சனி தோஷம் வீரியத்தை இழக்கும்.

வீட்டில் சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடலாம். தினமும் காலையில் உணவு அருந்தும் முன்பு காகத்துக்கு உணவு வைத்து சாப்பிடுவது நல்லது. அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று சனிக்கிழமைகளில் அகல் விளக்கு ஏற்றி வழிபடலாம்.

சனி பகவானுக்கு மட்டும்தான் சிவனுக்கு நிகரான ஈஸ்வரன் பட்டம் உள்ளது. எனவே எந்த அளவுக்கு சிவபெருமானை வழிபடுகி றோமோ அந்த அளவுக்கு சனியின் பார்வையில் இருந்து தப்பலாம். சனிக்கிழமை அதிகாலையில் சிவனை வழிபட்டால் ஏழரை நாட்டு சனி தாக்கம் குறையும்.

வசதி, வாய்ப்பு இருப்பவர்கள் சனிக்கிழமை சனி ஓரையில் வழிபட்டு தானங்கள் செய்யலாம். இரும்பு பாத்திரங்களில் எள் தானியம் கலந்த நைவேத்தியம் செய்து தானம் கொடுக்கலாம். முடிந்தவர்கள் சனிக்குரிய காயத்ரியை தினமும் 108 தடவை சொல்லலாம்.

ஆஞ்சநேயரை வழிபடுவதும், விநாயகரை வழிபடுவதும் சனி தாக்கத்தை கணிசமாக சரிகட்டும். நம்பிக்கை இருப்பவர்கள் கறுப்பு உடை அணியலாம். பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய 3 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சனி தசாபுத்தி காலத்தில் பிறந்தவர்களாக கணிக்கப்படுகிறார்கள். இவர்கள் கூடுதல் வழிபாடு செய்ய வேண்டும்.

ஆலயங்களுக்கு சென்று பரிகாரம் பூஜை செய்து வழிபட வேண்டும் என்று விரும்புபவர்கள் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்துக்கு சென்று நள தீர்த்தத்தில் நீராடி பிறகு ஆலயத்துக்கு வந்து சனி பகவானை வழிபடலாம். நள தீர்த்தத்தில் நீராடும்போது உடுத்தி இருக்கும் ஆடைகளை அங்கேயே விட்டுவிட்டு வந்து விட வேண்டும் என்று சொல்வார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கொள்ளிகாடு அக்னீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கொங்குசனியை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நவ கைலாயம் உள்ளன. அவற்றில் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் வழிபட்டால் சனிக்கிரகம் மூலம் நல்ல பலன்களை பெற முடியும். உத்திரகோச மங்கை தலத்தில் நவக்கிரகங்களில் சனி பகவான் மட்டுமே இருக்கிறார். அங்கு வேறு எந்த கிரகங்களும் கிடையாது. எனவே உத்திரகோச மங்கையில் சனி பகவானை வழிபட்டால் அதிக பலன்கள் கிடைக்கும் என்பார்கள்.

தேனி மாவட்டம் குச்சனூரில் சனீஸ்வரன் சுயம்பு மூர்த்தியாக அருளும் தனி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு நாளும் சனி பகவானை வழிபட ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வருகிறார்கள். இங்கு வழிபடுவதும் மிகவும் நல்லது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள ஐயாரப்பர் கோவிலில் சனீஸ்வரன் கிழக்கு நோக்கி காகம் வாகனத்தில் காட்சி தருகிறார். அந்த கோலத்தில் சனீஸ்வர பகவானை வழிபடுவது சிறந்த பலனாக கருதப்படுகிறது.

அதுபோன்ற அமைப்பு கடலூர் அருகே உள்ள வில்வராயநத்தம் ஆலயத்திலும் இருக்கிறது. அங்கும் சென்று சனீஸ்வரனை வழிபடலாம். திருவாரூர் தியாகராஜ கோவிலில் நளனும், சனீஸ்வரனும் வழிபட்டு பலன் பெற்றுள்ளனர். சனீஸ்வரன் வழிபட்ட லிங்கம் அங்கு இருக்கிறது. அங்கு வழிபட்டால் நமக்கும் நன்மை உண்டாகும்.

திருநிறையூர் ராமநாத சுவாமி ஆலயத்தில் உள்ள சனீஸ்வரனை தசரதர் வழிபட்டு குழந்தை பாக்கியம் பெற்றதாக குறிப்புகள் உள்ளன. இந்த தலத்தில் சனி பகவான் தனது இரு மனைவிகளான மந்தாதேவி, ஜேஸ்டாதேவியுடன் காட்சி அளிக்கிறார். கூடவே அவரது இரண்டு மகன்களான மாந்தி, குளிகனும் உள்ளனர். இங்கு சனி பகவான் தனி கொடி, தனி பலிபீடம் ஆகியவற்றுடன் கல்யாண கோலத்தில் மங்கள சனியாக இருக்கிறார்.

இந்தியாவில் வேறு எந்த ஊரிலும் சனி பகவான் இப்படி குடும்பத்துடன் திருமண கோலத்தில் இல்லை. எனவேதான் இந்த தலத்து சனீஸ்வரனை கல்யாண சனீஸ்வரர் என்று சொல்கிறார்கள். இந்த ஊரில் மட்டும்தான் சனீஸ்வரன் வீதிஉலா வருகிறார். இத்தகைய சிறப்பான இந்த தலத்தில் சனீஸ்வர பகவானுக்கு திருக்கல்யாணம் நடத்தி வழிபட்டால் தோஷங்கள் விலகுவதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.

Tags:    

Similar News