சிறப்புக் கட்டுரைகள்

அரிச்சந்திரனும் வாய்மையும்!

Published On 2025-10-09 16:45 IST   |   Update On 2025-10-09 16:45:00 IST
  • சிறுவன் மனத்தில் அந்த நாடகத்தின் மூலம் விழுந்த விதை நன்றாக வேரூன்றி விட்டது.
  • காந்திஜி பின்பற்றிய உண்மை என்ற தத்துவமே.

அன்று அதிகாலையில், அந்தச் சிறுவன் யோசனையோடு அமர்ந்திருந்தான். அவன் தலையைக் கோதிவிட்ட அவன் தாய் பரிவோடு அவனிடம் கேட்டாள்:

`மோகன்! என்னப்பா தீவிர யோசனையில் ஆழ்ந்திருக்கிறாய்?`

`அம்மா! நேற்று இரவு நான் ஒரு நாடகம் பார்த்தேன். அந்த நாடகம் பார்த்ததிலிருந்து என் மனத்தில் ஏதேதோ மாறுதல்கள். நான் நாடகம் முடிந்து இரவு வீடுவந்த பிறகும் சரியாகத் தூங்கக் கூட இல்லை. அந்த நாடகத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். நான் ஒரு முடிவு செய்திருக்கிறேன் அம்மா!`

சிறுவனான மோகன் பெரியவர்களைப் போல் பேசுவதை எண்ணிக் கலகலவென்று நகைத்தாள் அவன் தாய்.

`நீ என்ன நாடகம் பார்த்தாய்? என்ன முடிவு செய்திருக்கிறாய்?`

`நான் பார்த்த நாடகம் உண்மையே பேசிய அரிச்சந்திர மகாராஜாவின் வரலாறு பற்றிய நாடகம். உள்ளத்தை உருக்கிய நாடகம் அம்மா அது. எத்தனை கஷ்டங்கள் வந்தன அரிச்சந்திர மகாராஜாவுக்கு! ஆனாலும் இறுதிவரை அவர் பொய் பேசவே இல்லை.

ஆசை காட்டினார்கள். வற்புறுத்தினார்கள். பயமுறுத்தினார்கள். என்றாலும் உண்மையை மட்டுமே பேசுவது என்ற விரதத்திலிருந்து அவர் மாறவே இல்லை. இனிமேல் நானும் பொய்யே பேசாமல் இருக்கப் போகிறேன். என்ன கஷ்டம் வந்தாலும் உண்மையை மட்டுமே பேசுவதாக முடிவு செய்திருக்கிறேன்!`

மோகனின் தாய் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

`அப்படியே நடந்துகொள். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்!` எனப் பாராட்டினாள்.

என்ன ஆச்சரியம்! சிறுவன் மனத்தில் அந்த நாடகத்தின் மூலம் விழுந்த விதை நன்றாக வேரூன்றி விட்டது. தான் சொன்னபடியே நடந்துகொண்டான். அவனின் சத்திய விரதத்திற்கு எத்தனை சோதனைகள் வந்தபோதும் பொய்யே பேசாதிருக்கப் பழகினான்.

பின்னாளில் `சத்திய சோதனை` எனத் தன்வரலாற்றை எழுதியபோதும் தன் பலவீனங்களை எல்லாம் மறைக்காமல் குறிப்பிட்டு எழுதினான். உலகம் அந்த நூலைப் படித்து வியந்தது.

மனிதனாக இருந்த மோகனை மகாத்மாவாக ஆக்கியது அரிச்சந்திரனின் கதைதான். அந்த மோகன்தான், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மகாத்மா காந்தி.

திருப்பூர் கிருஷ்ணன்

 

நோபல் பரிசு பெற்ற கவிஞர் தாகூர், காந்திஜிக்கு மகாத்மா என்ற அடைமொழி கொடுத்து முதன்முதலில் அழைத்தார். பின்னர் அந்த அடைமொழி பிரபலமாயிற்று. தாகூர் அவ்விதம் காந்தியை அழைக்கக் காரணம், காந்திஜி பின்பற்றிய உண்மை என்ற தத்துவமே.

*அரிச்சந்திரன் கதை சுவாரஸ்யமானது. விஸ்வாமித்திர முனிவர் ஏற்படுத்திய அத்தனை சங்கடங்களிலிருந்தும் அவன் இறுதியில் மீண்டான். மனைவியை அடிமையாக விற்க நேர்ந்தது. ஆனாலும் உண்மையே பேசினான். இறுதியில் அவனை வானகமும் வையகமும் போற்றியது என்கிறது அரிச்சந்திர புராணம்.

உண்மையே பேசுவது, முதலில் சோதனைகளைத் தந்தாலும் கடைசியில் அனைத்து நலங்களையும் வழங்கும் ஓர் உன்னதமான கோட்பாடு என்பதை அந்தப் புராணம் தெளிவாக்குகிறது.

பாரத தேசம் முழுமையிலும் தெரிந்த பெயர் அரிச்சந்திரன் என்பது. அரிச்சந்திரனைப் பற்றிய கதைகள் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் இருக்கின்றன.

அரிச்சந்திரனின் கதையைச் சொல்லும் பழந்தமிழ் நூல் ஒன்று உண்டு. ஐந்நூறுக்கும் மேற்பட்ட நேரிசை வெண்பாக்களால் ஆன அந்நூல் `அரிச்சந்திர வெண்பா` என்றே வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் முன்பெல்லாம் அரிச்சந்திரன் கதை தெருக்கூத்தாகவும் நாடகமாகவும் நடிக்கப் பட்டுக் கொண்டிருந்தது.

உண்மையே பேசிய அரிச்சந்திரனை இந்திய மக்கள் பலர் தெய்வமாகவே கும்பிடத் தொடங்கினார்கள். நம் நாட்டில் பல இடங்களில் அரிச்சந்திரனுக்கு ஆலயங்கள் உண்டு.

அந்த ஆலயங்களில் காசியில் உள்ள ஆலயம் குறிப்பிடத்தக்கது. அரிச்சந்திரன் வரலாற்றில் காசிமாநகருக்கு ஒரு முக்கிய இடம் உண்டல்லவா? அவன் தன் மனைவியை விற்றது, மயானத்தில் வேலை பார்த்தது எல்லாமே காசியில் நிகழும் சம்பவங்கள் தானே?

தமிழகத்தில் காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் அரிச்சந்திர ஆலயங்கள் உள்ளன. மக்கள் அங்கெல்லாம் சென்று அரிச்சந்திரனுக்கும் அவன் மனைவி சந்திரமதிக்கும் வழிபாடு நடத்துகிறார்கள்.

புதுச்சேரி கருவடிக்குப்பம் சித்தானந்தர் சுவாமி திருக்கோயில் அருகில் சக்கரவர்த்தி அரிச்சந்திரனுக்கு ஓர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல. தினமும் தவறாது பூஜைகளும் நடக்கின்றன.

இங்கு அரிச்சந்திரன் அரசராகவும் வெட்டியானாகவும் தன் மனைவி சந்திரமதியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

`சத்யமேவ ஜயதே!` என்பது இந்தியாவின் குறிக்கோள் வாசகம். இந்திய தேசியச் சின்னத்தில் இந்த வாசகம்தான் பொறிக்கப் பட்டுள்ளது.

முண்டக உபநிடதத்தில் இடம்பெற்றுள்ள புகழ்பெற்ற பல மந்திரங்களில் இதுவும் ஒன்று. தமிழக அரசு `வாய்மையே வெல்லும்` என இதைத் தமிழாக்கித் தன் இலச்சினையில் பெருமையோடு பொறித்துக் கொண்டுள்ளது. இந்தக் குறிக்கோளைத்தான் மனத்தில் கொண்டு சத்தியத்தைத் தவிர வேறு எதையும் பேசுவதில்லை என விரதம் பூண்டிருந்தான் அரிச்சந்திர மன்னன்.

அந்தக் கடும் விரதத்தால், ஒரு மனிதனுக்கு வரக்கூடிய துன்பங்களில் அதிக பட்ச துன்பத்தை அனுபவித்தான். ஆனாலும் இறுதிவரை சத்தியத்தையே பேசினான்.

அரிச்சந்திரன் கதை பெரும்புகழ் பெற்று விளங்குவதைக் கண்ட நாடக ஆசிரியரான பம்மல் சம்பந்த முதலியார், அந்தக் கதைக்கு நேர் எதிர்க் கதையாக சந்திரஹரி என்றொரு நாடகத்தை எழுதினார்.

அரிச்சந்திரன் உண்மையே பேசுபவன். சந்திரஹரியோ பொய் மட்டுமே பேசுபவன். மறந்தும் உண்மை பேசாதவன்.

நாடகம் முழுவதும் ஓர் உண்மையையாவது அவனைப் பேச வைக்க நாடகப் பாத்திரங்கள் எல்லோரும் முயல்வார்கள். ஆனால் ஓர் உண்மையேனும் அவன் நாவில் வராது.

நாடகப் பாத்திரங்களின் பெயர்களையெல்லாம் அரிச்சந்திரன் நாடகத்தில் உள்ளதிலிருந்து தலைகீழாக மாற்றியிருந்தார் முதலியார்.

அரிச்சந்திரன் சந்திரஹரி ஆனதைப் போல் அவன் மனைவி சந்திரமதி, மதிச்சந்திரா ஆனாள். விஸ்வாமித்திரரை மித்திரவிசு என்றும் வசிஷ்டரை சிஷ்டவசி என்றும் மாற்றினார்.

அரிச்சந்திரன் கதைக்கு எதிராக எழுதப்பட்ட இந்த எதிர்க்கதை நாடகம் கூட, மறைமுகமாக அரிச்சந்திரனுக்கே மேலும் புகழ் சேர்த்தது.

*உண்மை பேசுபவர்களுக்கு ஒரு பெரிய சவுகரியம் உண்டு. அவர்கள் எதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை! பொய் பேசுபவர்கள் என்ன பேசினோம் என்பதைத் தெளிவாக ஞாபகம் வைத்துக் கொண்டால்தான் தொடர்ந்த பொய்களின் மூலம் முதலில் சொன்ன பொய்யைக் காப்பாற்ற இயலும்.

பொய் பேசுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. பொய்சொல்வதை ஆழ்மனம் உணர்ந்திருப்பதால் உடல் படபடக்கிறது. வியர்வை கொட்டுகிறது. மொத்தத்தில் ஆரோக்கியம் கெடுகிறது.

பழங்காலம் தொட்டே நீதிவிசாரணை நடக்கும் இடங்களில் பொய்ச் சாட்சி சொல்பவர்கள் இருந்திருக்கிறார்கள். தம் `மனுமுறை கண்ட வாசகம்` என்ற உரைநடை நூலில் பொய்ச்சாட்சி சொல்வது மகாபாவம் என்கிறார் வள்ளலார். அந்த நூலில் பல பாவங்களை அவர் பட்டியலிடுகிறார்.

`ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்` என்கிற வள்ளலார் பாடல் புகழ்பெற்றது. தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்தில் உறையும் கந்தவேளைக் குறித்துப் பாடப்பட்ட உயரிய பக்திப் பாடல் அது.

அந்தப் பாடலில், `உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!` என ஓர் அடி வருகிறது.

பொய் பேசுபவர்கள் உள்ளொன்று வைத்துப் புறம் வேறொன்று பேசுபவர்கள். பொய்பேசுபவர்களுடன் உறவு பாராட்டுவது மிகுந்த ஆபத்துகளை விளைவிக்கக் கூடியது என்பதை வள்ளலார் உணர்ந்திருக்கிறார்.

இந்த வரிகளால் வள்ளலார் காலத்திலேயே உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள் நிறைய இருந்திருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

வாய்மை என்பது ஓர் உயர்ந்த அறநெறி. அதைப் பற்றி வள்ளுவம் மிக உயர்வாகப் பேசுகிறது. (அதிகாரம் 30).

உண்மை என்பது சத்தியமே. சத்தியம் என்ற வடமொழிச் சொல்லுக்குத் தமிழில் மூன்று இணைச்சொற்கள் வழங்கப்படுகின்றன. `உண்மை, வாய்மை, மெய்ம்மை` என்பன அவை. உள்ளத்தில் சத்தியத்தோடு இருப்பது உண்மை. பேச்சில் சத்தியத்தையே பேசுவது வாய்மை. உடலால் உண்மை நெறிப்படி நடப்பது மெய்ம்மை.

பொதுவாக வாய்மை என்ற சொல்லை சத்தியத்திற்குச் சமமான சொல்லாக நாம் கொள்ளலாம்.

வாய்மை என்பது ஓர் அறம். அதாவது தர்ம நெறி. இந்த தர்ம நெறிப்படி நடந்தால் அந்த நெறி நம்மைக் காக்கும். தர்மத்திற்குச் சோதனைகள் வரலாம். ஆனால் இறுதியில் தர்மம்தான் வெல்லும்.

அதனால்தான் `சத்தியமேவ ஜயதே` என்ற கோட்பாட்டை `வாய்மையே வெல்லும்` என மொழிபெயர்த்துக் கொண்டாடுகிறோம். வாய்மை கட்டாயம் வெல்லும். இன்னும் சரியாகச் சொல்லப் போனால் வாய்மைதான் வெல்லும்.

அதில் சந்தேகமே தேவையில்லை. பொய்ம்மைக்குத் தற்காலிக வெற்றி கிட்டலாம். ஆனால் நிரந்தர வெற்றி வாய்மைக்கு மட்டுமே.

வாய்மை உள்ளிட்ட தரும நெறிகளே இறுதியில் வெல்லும் என்பதைப் புராணங்களில் மட்டுமல்ல, நடைமுறை வாழ்விலும் நாம் பரிசோதித்து உணரலாம். அதை அறியக் கொஞ்சம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் வாய்மை வெல்வது உறுதி.

பல துன்பங்கள் வந்தாலும் இறுதியில் வாய்மைதான் வெல்லும் என்ற தத்துவத்தை நடைமுறை வாழ்வில் சோதித்துப் பார்த்து வெற்றி கண்டவர்களில் முக்கியமானவர் நம் தேசப் பிதா காந்தியடிகள்.

அரிச்சந்திர புராணம் சொல்லும் வாய்மை வெல்லும் என்ற தத்துவம் நம்மாலும் பின்பற்றப் படுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.

தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News