2025 - ஒரு பார்வை

2025 REWIND: 'மக்கள் மாளிகை' என பெயர் மாற்றப்பட்ட ஆளுநர் மாளிகை

Published On 2025-12-24 12:39 IST   |   Update On 2025-12-24 12:39:00 IST
  • ராஜ்பவன் பெயரை, லோக் பவன் என்ற மக்கள் மாளிகை என்று மாற்றம் செய்ய வேண்டும் என்பதற்கு வித்திட்டவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. தான்.
  • 'பெயர் மாற்றத்தைவிட சிந்தனை மாற்றமே தேவை' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள ராஜ் பவன் என்று சொல்லப்படும் ஆளுநர் மாளிகையின் பெயர், மக்கள் மாளிகை என பெயர் மாற்றப்படுவதாக கடந்த நவ.30-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது.

இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களின் துணை நிலை ஆளுநர் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அதில்,

கடந்த 2024-ம் ஆண்டில் நடந்த ஆளுநர் மாநாட்டில் ராஜ்பவன் என்பதனை லோக் பவன்கள் என பெயர் மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. ஏனென்றால் ராஜ்பவன் என்ற சொல் காலனித்துவத்தை நினைவூட்டுகிறது. எனவே அனைத்து ஆளுநர் அலுவலகங்களும், துணை நிலை ஆளுநர் அலுவலகங்களும் அதிகாரபூர்வமாக முறையே லோக் பவன், லோக் நிவாஸ் என பெயரிடப்பட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

அதன் தொடர்ச்சியாக நாட்டில் உள்ள அனைத்து ஆளுநர் மாளிகையின் பெயர்களும் லோக் பவன் என்று மாற்றப்படுகிறது. அதன்படி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையும், ஆங்கிலத்தில் லோக் பவன் என்று பெயர் மாற்றப்படுகிறது. தமிழில் அது மக்கள் மாளிகை என்று அழைக்கப்படும்.

 

நாடு முழுவதும் உள்ள ஆளுநர்களின் அதிகாரபூர்வ இல்லமான ராஜ்பவன் பெயரை, லோக் பவன் என்ற மக்கள் மாளிகை என்று மாற்றம் செய்ய வேண்டும் என்பதற்கு வித்திட்டவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. தான். அவர் தான் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த ஆளுநர் மாநாட்டில் அதற்கான தீர்மானத்தை கொண்டு வந்தார். அதனை மற்ற ஆளுநர்கள் அனைவரும் ஏற்று கொண்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் மத்திய அரசு இப்போது நடவடிக்கை எடுத்து இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் கூறுகையில்,

ஆளுநர் மாளிகைகள் 'ராஜ்பவன்' என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஆளுநர்கள் மாநாட்டில் தலைமையேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி 'ராஜ்பவன்' என்பதை 'மக்கள் பவன்' என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதை அனைவரும் வரவேற்ற நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகமும் அதை ஏற்று அதிகாரபூர்வமாக 'ராஜ்பவன்' என்பதை இனி 'மக்கள் பவன்' என அனைத்து மாநிலங்களும் மாற்றி அழைக்க உத்தரவிட்டுள்ளது.

நமது ஆளுநரின் இந்த முயற்சி ராஜ்பவன் வரலாற்றில் ஒரு மைல்கல். அவரது கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசுக்கு நன்றி என்று தெரிவித்து இருந்தார்.

 

'மக்கள் பவன்' பெயர் மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'பெயர் மாற்றத்தைவிட சிந்தனை மாற்றமே தேவை' எனத் தெரிவித்தார்.

சட்டமன்றத்தை மதிக்காதவர்கள் 'மக்கள் மாளிகை' என பெயர் மாற்றுவது கண் துடைப்பா என்றும் மக்களாட்சி தத்துவத்தின் கண்களில் மண்ணை தூவுவதற்காகவா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் தற்போதைய தேவை எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், ஆளுநர் மாளிகையின் பெயர் மாற்றம் தேவையற்றது என தெரிவித்தார்.

 

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இதனை வரவேற்றார். அவர், 'ஆளுநர் மாளிகைக்கு இதுவரையில் ராஜ் பவன் என்று இருந்த பெயரை, இப்போது லோக் பவன் என பெயர் மாற்றம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது' எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News