புதுச்சேரி

பெங்களூரில் கொள்ளையடித்து புதுச்சேரியில் நகைகளை அடகு வைத்த கொள்ளை கும்பல் 3 பேர் கைது

Published On 2025-05-17 17:49 IST   |   Update On 2025-05-17 17:49:00 IST
  • கொள்ளையர்கள் 3 பேரும் 200 பவுனுக்கு மேல் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றது தெரிய வந்துள்ளது.
  • நகைகளை கர்நாடக போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

புதுச்சேரி:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்தது.

போலீசாரின் அதிரடி விசாரணையில், புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த ரகுராமன், அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நட்சத்திரம் மற்றும் ஜெயசந்திரன் உள்ளிட்ட 3 பேர் இக்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதில் ரகுராமன் உள்ளிட்ட 2 பேர் நேரடியாக கொள்ளையில் ஈடுபடுவதும், நட்சத்திரம் நகைகளை விற்க உதவி செய்து வந்துள்ளார். மேலும் கொள்ளையடித்த நகைகளை புதுச்சேரியில் உள்ள ஒரு வட்டி கடையில் அடகு வைத்து பணம் பெற்றது விசாரணையில் தெரியவந்தது.

தீவிர விசாரணைக்குப் பின் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஒருவர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ரகுராமன், ஜெயச்சந்திரன் ஆகிய 2 பேரையும் பெங்களூரு போலீசார் புதுச்சேரி அழைத்து வந்தனர்.

புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள அடகு கடையில் கர்நாடக போலீசார் சோதனை நடத்தி கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது கொள்ளையர்கள் 3 பேரும் 200 பவுனுக்கு மேல் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த நகைகளை கர்நாடக போலீசார் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

கர்நாடக போலீசார் புதுச்சேரி அடகு கடையில் திடீர் சோதனை நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News