புதுச்சேரி

18 மாதத்தில் மகசூல் தரும் மிளகு பயிர்- புதுச்சேரி பெண் விஞ்ஞானி கண்டுபிடிப்பு

Published On 2025-07-22 14:56 IST   |   Update On 2025-07-22 14:56:00 IST
  • மிளகு பயிர் செய்யப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பின் 15 அடிக்கு செடி வளர்ந்த பின்புதான் காய்கள் தர தொடங்கும்.
  • நாற்றுகளை விவசாயிகள் பயன்படுத்தினால் தரமான மிளகு பயிர் கிடைக்கும்.

புதுச்சேரி:

புதுச்சேரி கூடப்பாக்கத்தை சேர்ந்த பத்மஸ்ரீ விருதாளர் வேளாண் விஞ்ஞானி வேங்கடபதி.

இவர் நன்கு விளைச்சல் தரும் சவுக்கு, கனகாம்பரம் உட்பட பல்வேறு பயிர்களை உருவாக்கியுள்ளார். இவரின் வழியில் அவரது மகள் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமியும் விவசாயிகளுக்கு பலன் தரும் பயிர்களை உற்பத்தி செய்து வருகிறார்.

தற்போது விரைவாக மகசூல் தரும் மிளகு பயிரை கண்டுபிடித்துள்ளார். பொதுவாக மிளகு பயிர் செய்யப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பின் 15 அடிக்கு செடி வளர்ந்த பின்புதான் காய்கள் தர தொடங்கும். இந்த 5 ஆண்டுகளால் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு பலன் இருக்காது.

இந்த நிலையில் திசுவளர்ப்பு மூலம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 18 மாதத்தில் மகசூல் தரும் மிளகை ஸ்ரீலட்சுமி கண்டறிந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நர்சரியில் மிளகு செடிகளை உற்பத்தி செய்யும் போது 100 செடிகளில் 60 சதவீதம் வீணாகிவிடும். சரியான முறையில் உற்பத்தி செய்யாததுதான் செடிகள் வீணாவதற்கு காரணம். எனவே தரமான கன்றுகள் தேவை. 100 பதியங்களில் வேர் நன்றாக இருந்தால்தான் தரமானது. தற்போது திசு வளர்ப்பில் புதிய தொழில் நுட்பத்தை கடைபிடித்து 100 பதியங்களில் 99 பதியங்கள் வேருடன் தரமானவையாக இருக்கும் வகையில் மிளகு நாற்றுகளை உருவாக்கி உள்ளோம்.

10 முதல் 15 நாட்களில் வேர் வந்துவிடும். 30 நாட்களில் அரை அடிக்கு மேல் வளர்ந்து விடும். இந்த நாற்றுகளை விவசாயிகள் பயன்படுத்தினால் தரமான மிளகு பயிர் கிடைக்கும். விளைச்சலும் அதிகமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News