புதுச்சேரி

புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கத்தில் 4 பகுதிகளிலும் வெள்ள நீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்வதை படத்தில் காணலாம்.

விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை- புதுச்சேரியில் 200 ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியது

Published On 2025-10-22 10:58 IST   |   Update On 2025-10-22 10:58:00 IST
  • ஒட்டுமொத்தமாக 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 14.7 செ.மீ. மழை பதிவாகியது.
  • பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. கிளைகள் முறிந்து விழுந்தன.

புதுச்சேரி:

புதுச்சேரியில் கடந்த 16-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது.

நேற்று முன்தினம் முதல் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்தது. பகல் பொழுதில் மட்டும் 2.86 செ.மீ. மழை பதிவாகியது. மதியத்துக்கு பின் மழை பெய்யவில்லை.

ஆனால் இரவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. 7 மணிக்கு மேல் சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரெங்கும் சாலைகளில் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிய குளம் போல நின்றது.

கடலூர் சாலை நயினார் மண்டபம், சுதானா நகர், இந்திராகாந்தி சிலை சதுக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் போல சாலைகள் காட்சியளித்தது. தாழ்வான பகுதிகளான ரெயின்போ நகர், வெங்கட்டாநகர், கிருஷ்ணாநகர், பூமியான் பேட், பாவாணர் நகர், முதலியார்பேட்டை புவன்கரே வீதி, முத்தியால் பேட்டை டி.வி. நகர், பெரியார் நகர், முத்தியால் பேட்டை பகுதிகளில் 100-க்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் அந்த பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். கிராமப்புறங்களிலும் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் வாரி இறைத்து வெளியேற்றினர். தொடர்ந்து இரவு முழுவதும் அவ்வப்போது மழை கொட்டியது. இரவில் மட்டும் 11 செ.மீ. மழை பதிவானது.

ஒட்டுமொத்தமாக 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 14.7 செ.மீ. மழை பதிவாகியது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. கிளைகள் முறிந்து விழுந்தன. மழையினால் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மழை பாதிப்புகளை அறிந்த முதல்-மந்திரி ரங்கசாமி, நகரின் பல்வேறு இடங்களுக்கு காரில் சென்று மழை பாதிப்புகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மழைநீரை வெளியேற்றவும், பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இன்று அதிகாலை முதல் மழை இல்லை. இதனால் பெரும்பாலான சாலைகள், தாழ்வான பகுதிகளில் இருந்து மழை நீர் வெளியேறியது.

வானம் வெறிச்சோடி காணப்பட்டு லேசான வெயில் அடிக்க தொடங்கியது. ஆனாலும் அவ்வப்போது மேகங்கள் திரண்டு, இருண்டு மீண்டும் மழை பெய்வதற்கான சூழலும் நிலவுகிறது.

இதனிடையே புதுச்சேரிக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனால் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

கிராம பகுதிகளிலும் மழை கொட்டியது. பாகூர், திருக்கனூர், வில்லியனூர், செல்லிப்பட்டு, பத்துக்கண்ணு, அரியாங்குப்பம், தவளக்குப்பம், சேதராப்பட்டு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது. பாகூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் விளை நிலங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Tags:    

Similar News