புதுச்சேரி

பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும்- போக்குவரத்து ஊழியர்களுக்கு புதுச்சேரி அரசு எச்சரிக்கை

Published On 2025-08-08 10:34 IST   |   Update On 2025-08-08 10:34:00 IST
  • ஊழியர்களின் குறைந்தபட்ச ஊழியத்தை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • போராட்டத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்த சம்பளத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 28-ந் தேதி முதல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து பி.ஆர்.டி.சி. மேலாண் இயக்குனர் சிவக்குமார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தை ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்த நிலையில் எழுத்துப் பூர்வமான உறுதிமொழி கடிதம் கேட்டனர். ஆனால் நிர்வாகம் தரப்பில் உறுதிமொழி கடிதம் வழங்காததால் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 11-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது.

இந்தநிலையில் போரட்டத்தில் ஈடுபட்டு வரும் பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் சிவக்குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:-

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக விதிகளின்படி குறைந்தபட்ச ஊதிய கொள்கைளை முறையாக அமல்படுத்தி வருகிறது. இந்தநிலையில் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊழியத்தை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிநிரந்தரம் வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு எதிராக கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

கடந்த 28-ந் தேதியில் இருந்து 11 நாட்களாக ஒப்பந்த விதிகளை மீறி தொடர்ந்து சட்ட விரோதமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தின் ஒப்பந்த உடன்படிக்கை மற்றும் கொள்கையின்படி, முன் அனுமதியின்றி தொடர்ந்து 8 நாட்களுக்கு மேல் பணிக்கு வராத ஊழியர்களின் மீது பணி நீக்கம் போன்ற ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். மீறினால் 'எஸ்மா' (அத்தியாவசிய சேவை பராமரிப்பு சட்டம்) எந்த முன்னறிவிப்பு இன்றி பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார். எனவே விரைவில் அவர்கள் பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News