இந்தியா

பாராளுமன்றம் நோக்கி பேரணி செல்ல மல்யுத்த வீரர்கள் திட்டம்... டெல்லியில் போலீஸ் அலர்ட்

Published On 2023-05-28 01:07 GMT   |   Update On 2023-05-28 01:07 GMT
  • மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து போராட்டம்
  • பாராளுமன்றம் நோக்கி செல்லக்கூடிய அனைத்து பாதைகளிலும் பேரிகார்டுகள் வைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

டெல்லியில் உள்ள பழைமை வாய்ந்த பாராளுமன்ற கட்டிடத்திற்கு பதிலாக அதன் அருகிலேயே 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்து வைக்கக்கூடாது, சாவர்க்கரின் பிறந்தநாளில் திறப்பது சரியல்ல.. என்பதுபோன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டபோதும், திட்டமிட்டபடி திறப்பு விழா ஏற்பாடுகள் நடக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். பேரணியின் முடிவில் பாராளுமன்றம் முன்பு மகிளா மகாபஞ்சாயத்து நடத்த முடிவு செய்துள்ளனர். அவர்களின் போராட்டத்தில் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு கிராம தலைவர்கள் மற்றும் விவசாயிகள் இணையப்போவதாக கூறி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே டெல்லயில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியின் எல்லைப்பகுதியான திக்ரி எல்லை, சிங்கு எல்லை பகுதி அருகே போலீசார் பேரிகார்டுகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பாராளுமன்றம் நோக்கி செல்லக்கூடிய அனைத்து பாதைகளிலும் பேரிகார்டுகள் வைத்து தடுப்பு அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கணைகள் போராடி வருகின்றனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பாராளுமன்றம் அருகே போராட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News