பீகாரில் காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமாக காற்று வீசுகிறது: வேணுகோபால் நம்பிக்கை
- அரியானா தேர்தலுக்குப் பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு என்ன சொன்னது?.
- காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது. ஆனால், முடிவு வேறு மாதிரியாக வந்தது.
பீகாரில் உள்ள 243 தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நேற்றைய வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டன.
அதில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கருத்து கணிப்பை மீறி நாங்கள் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
வழக்கத்திற்கு மாறாக பீகாரில் அதிக சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் திரண்டு வந்து வாக்களித்துள்ளனர். இதனால் மகாகத்பந்தன் கூட்டணி (Mahagathbandhan) வெற்றி பெறும் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் பீகாரில் மகாகத்பந்தன் கூட்டணிக்கு சாதகமாக காற்று வீசுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கே.சி. வேணுகோபால் கூறியதாவது:-
அரியானா தேர்தலுக்குப் பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு என்ன சொன்னது?. காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது. ஆனால், முடிவு வேறு மாதிரியாக வந்தது. அதனால் நாம் தேர்தல் முடிவு வரும் வரை காத்திருப்போம். எங்கள் கூட்டணிக்கு சாதகமாக காற்று வீசுகிறது.
முன்னதாக தேர்தல் நடைபெற்று இரவு 8.30 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிவான வாக்குகளின் முழு விவரத்தையும் வெளியிட்டுவிடும். வாக்களித்த ஆண்கள் மற்றும் பெண்கள் விவரங்கள் உள்பட அனைத்து விவரங்களையும் வெளியிட்டு விடும். தற்போது அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. சில தேர்தல்களில், மொத்த வாக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு அறிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் சமரசம் கமிஷனாகி விட்டது என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளைமறுதினம் (14-ந்தேதி) நடைபெறுகிறது.