இந்தியா

பீகாரில் பாஜக, காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்று: 100 தொகுதிகளில் போட்டியிட ஒவைசி கட்சி முடிவு

Published On 2025-10-11 14:33 IST   |   Update On 2025-10-11 14:33:00 IST
  • இந்தியா கூட்டணியில் இடம் பெற AIMIM விரும்பியது.
  • ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் பதில் ஏதும் அளிக்காத நிலையில், 3ஆவது கூட்டணிக்கு முயற்சி.

பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி- இந்தியா கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

ஐதராபாத் மக்களவை எம்.பி. அசாதுதீன் ஒவைசி-யின் ஏஐஎம்ஐஎம் (AIMIM) கட்சிக்கு இந்தியா கூட்டணியில் இடம் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்த நிலையில் இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக AIMIM களம் இறங்கப்போகிறது. நாங்கள் 100 இடங்களில் போட்டியிடுவோம் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அக்தருல் இமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அக்தருல் இமான் கூறுகையில் "100 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது எங்களது திட்டம். இரண்டு கூட்டணிகளும் தங்களது இருப்பை உணர வேண்டிய நிலையில் உள்ளன.

2020 தேர்தலின்போது, நாங்கள் வாக்குகளை பிரித்ததாக மகா கூட்டணி குற்றம்சாட்டியது. அவர்களுடன் நாங்கள் கூட்டணி வைக்க விருப்பம் இருப்பதாக நான் லாலு மற்றும் தேஜஸ்வி யாதவுக்கு கடிதம் எழுதியது அனைவரும் அறிந்ததே. ஆனால், அங்கிருந்து பதில் வரவில்லை.

தற்போது நாங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டியுள்ளது. 3ஆவது கூட்டணி என்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் பேசி வருகிறோம். இன்னும் சில நாட்களில் அது தெளிவாகிவிடும்" என்றார்.

கடந்த சட்டசபை தேர்தலின்போது, அசாதுதீன் ஒவைசி கட்சி, தனியாக போட்டியிட்டு மைனாரிட்டி வாக்குகளை பிரித்து, பாஜக கூட்டணி வெற்றிக்கு வழிவகுப்பதாக இந்தியா கூட்டணி குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News