இந்தியா

சவ ஊர்வலத்தில் தேனீக்கள் கொட்டியதால் சாலையில் பிணத்தை போட்டு விட்டு ஓட்டம்

Published On 2025-03-29 11:38 IST   |   Update On 2025-03-29 11:38:00 IST
  • சவ ஊர்வலம் சென்ற சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தன.
  • தேனீக்கள் கொட்டியதில் 40 பேர் கவுரி தேவி பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம், கன்னெரு கொய்யா பாடுவை சேர்ந்தவர் பல்லையம்மா (வயது 86). வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் இறந்து விட்டார்.

நேற்று அவரது இறுதி சடங்குக்கான பணிகள் நடந்தன. இதையடுத்து உறவினர்கள் பல்லைய்யமாவின் பிணத்தை பாடையில் வைத்து தோளில் இடுகாட்டிற்கு சுமந்து சென்றனர்.

அப்போது சவ ஊர்வலத்தில் வந்தவர்கள் நடனமாடியபடி பட்டாசுகளை வெடித்தனர்.

சவ ஊர்வலம் சென்ற சாலையோரம் இருந்த ஒரு மரத்தில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தன. சவ ஊர்வலத்தில் வெடித்த பட்டாசு பறந்து சென்று தேனி கூட்டில் விழுந்தது.

இதனால் கூடு கலைந்து தேனீக்கள் பறந்து வந்து சவ ஊர்வலத்தில் சென்றவர்களை விரட்டி, விரட்டி கொட்டின.

இதனால் வலி தாங்காத அவர்கள் பிணத்தை நடுரோட்டிலேயே போட்டுவிட்டு அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். மூதாட்டியின் பிணம் நீண்ட நேரம் நடுரோட்டிலேயே கிடந்தது.

தேனீக்கள் சென்ற பிறகு மாலை மூதாட்டியின் உறவினர்கள் வந்து அவரது பிணத்தை எடுத்துச் சென்று இடுகாட்டில் இறுதி சடங்கு செய்தனர்.

தேனீக்கள் கொட்டியதில் 40 பேர் கவுரி தேவி பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். படுகாயம் அடைந்த 4 பேர் பத்ராசலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News