இந்தியா

வக்பு சட்டத்திருத்தம் என்ன சொல்கிறது?

Published On 2025-04-08 09:42 IST   |   Update On 2025-04-08 09:42:00 IST
  • பத்திரப்பதிவு செய்யாத சொத்துகள் வக்பு சொத்துகளாக மாறாது.
  • வக்பு என கூறும் பழைய வரையறை அம்சம் நீக்கப்பட்டுள்ளது.

வக்பு என்றால் என்ன?

வக்பு என்பது இஸ்லாமியர் ஒருவர், தனது சொத்தை நிரந்தரமாக ஒதுக்கி, அதன் வருமானத்தை சமுதாய நலனுக்காக பயன்படுத்தும் மத அடிப்படையிலான தானப்பணியாகும். இப்படி தானமாக்கப்பட்ட சொத்துகளை விற்க முடியாது.

அவற்றின் பயன்பாடும் கட்டுப்பாடும் வக்பு வாரியத்தின் வழியாக மட்டுமே நடைபெறும். 'வக்பு' என்ற வார்த்தை அரபு மொழியில் இருந்து வந்தது. அதன் பொருள் 'ஓரிடத்தில் நிறுத்துதல்' அல்லது 'நிரந்தரமாக ஒதுக்குதல்' ஆகும்.

வக்பு சொத்துகள் எவ்வளவு?

வக்பு வாரியத்திடம் தற்போது இந்தியா முழுவதும் 9.4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 8.7 லட்சம் சொத்துகள் உள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.1.2 லட்சம் கோடியை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ராணுவம் மற்றும் இந்திய ரெயில்வேக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய நில உரிமையாளராக வக்பு வாரியம் உள்ளது. வக்பு வாரியத்தின் கீழ் 8 லட்சத்து 72 ஆயிரத்து 805 அசையா சொத்துகளும், 16 ஆயிரத்து 716 அசையும் சொத்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் 3 லட்சத்து 56 ஆயிரத்து 351 வக்பு தொழிற்பேட்டைகள் வக்பு வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதாவது 1 லட்சத்து 40 ஆயிரத்து 803 விவசாய நிலங்களும், 33 ஆயிரத்து 502 தர்காக்கள், ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 569 அடக்க தலங்களும், 92 ஆயிரத்து 517 வீடுகளும், 1 லட்சத்து 19 ஆயிரத்து 820 மசூதிகளும், 64 ஆயிரத்து 975 காலிமனைகளும், 1 லட்சத்து 13 ஆயிரத்து 193 வணிக கடைகளும் உள்ளிட்ட பல்வேறு சொத்துகளும் இருக்கின்றன.

வக்பு சொத்துகளை பதிவு செய்ய மத்திய அரசு, https://wamsi.nic.in/ என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளது. அதில் அதன் சொத்துகள் விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

வக்பு திருத்த சட்டம்...

இதற்கான மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தபோதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இதையடுத்து அந்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கும் கடும் விவாதங்கள் நடைபெற்றது. பின்னர் நாடாளுமன்ற கூட்டுக்குழு சில பரிந்துரைகளுடன் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்பு சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது.

இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் கொடுத்துவிட்டார். இதனால் அது சட்டமாகியுள்ளது.

மத்திய அரசு, இந்த சட்டத்தில் 34 பிரிவுகளை திருத்தம் செய்துள்ளது. 3 புதிய பிரிவுகளை புதிதாக சேர்த்துள்ளது. 5 பிரிவுகளை நீக்கி உள்ளது. அதன்படி சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:-

* வக்பு சட்டம்-1995 என்பதற்கு பதிலாக ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டு சட்டம்-1995 என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* வக்புக்கு சொத்தினை தானமாக கொடுப்பவர், குறைந்தது 5 ஆண்டுகள் முஸ்லிமாக இருக்க வேண்டும். அவர் அந்த சொத்துக்கு உரிமையாளராகவும் இருக்க வேண்டும். அதன்படி வேறு மதத்தினர் மற்றும் 5 ஆண்டுகளுக்குள் முஸ்லிமாக மதம் மாறியவர்கள் சொத்துகள் வக்பு சொத்தாக இனி மாற்ற முடியாது. ஒரு சொத்துக்கு உரிமை இல்லாதவர்கள், வக்புக்கு சொத்து கொடுக்க முடியாது.

பத்திரப்பதிவு

* ஒரு சொத்தை மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்ததை கொண்டு வக்பு என கூறும் பழைய வரையறை அம்சம் நீக்கப்பட்டுள்ளது.

* அரசு சொத்துகள் எந்த சூழ்நிலையிலும் வக்பு சொத்தாக கருதப்பட கூடாது. அரசு சொத்தை வக்பு உரிமைக்கோரினால், அது தொடர்பாக கலெக்டர் விசாரணை செய்து மாநில அரசுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

* முன்னர் ஒரு சொத்தினை வக்பு என்றாலே, அது வக்பு சொத்தாக மாறி விடும். ஆனால் இனி வக்பு சொத்து என்றால் அதற்கு உரிய முறையில் பத்திரப்பதிவு செய்ய வேண்டும். பத்திரப்பதிவு செய்யாத சொத்துகள் வக்பு சொத்துகளாக மாறாது.

* வக்பு சொத்து பதிவு செய்வதற்கு முன்னர், அந்த சொத்தின் உரிமை மற்றும் தகவல்களை கலெக்டர் சரிபார்த்து ஒப்புதல் தரவேண்டும்.

இணையதளத்தில் பதிவு

* வக்பு சொத்து என்றால் அது பத்திரப்பதிவு செய்யப்பட்டு, மத்திய அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அப்படி செய்யாத சொத்துகள் 'இது வக்பு சொத்து' என்று கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது.

*ஒரு சொத்தை வக்பு சொத்தாக அறிவிக்கும் அதிகாரம் முன்பு வக்பு வாரியத்திற்கு இருந்தது. இது நீக்கப்பட்டுள்ளது. இனி ஒருவர் தனது சொத்தின் உரிமையை நிரூபித்து, அதனை வக்புக்கு பதிவு செய்து கொடுத்தால் மட்டுமே அது வக்பு சொத்தாக தகுதி பெறும்.

* ஒரு நிலம் வக்பு சொத்தாக மாறும்போது, அது குறித்து 90 நாட்களுக்கு முன் பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

* அனைத்து வக்பு சொத்துகளும் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதில் சொத்து நிலவரம், வருமானம், வழக்கு போன்ற அனைத்து விவரங்களும் இருக்க வேண்டும்.

*அலால் அவுலாத் வக்பு பிரிவின்படி வக்புக்கு சொத்து தானம் கொடுக்கும் போது, அந்த சொத்தின் பயனாளிகளாக நன்கொடை அளிப்பவரின் வாரிசுகள் இருக்க வேண்டும் என்பது விதி. இனி அந்த வாரிசுகளில் பெண்கள் இருக்க வேண்டும். அவர்களை தவிர்க்க கூடாது.

மேல்முறையீடு

* இதுவரை சர்வே கமிஷனர் செய்து வந்த வக்பு சொத்துகளுக்கான கணக்கெடுப்பு, இனி கலெக்டர் மூலமாக மட்டுமே நடக்கும்.

* இதுவரை சொத்து தொடர்பாக வக்பு தீர்பாயத்தின் முடிவே இறுதியானது. அதனை எதிர்த்து நாம் எந்த கோர்ட்டுக்கும் செல்ல முடியாது. ஆனால் இனி அந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் 90 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்து நிவாரணம் தேடி கொள்ளலாம்.

* வக்பு வாரிய நிர்வாகத்தில் 2 முஸ்லிம் அல்லாத நபர்கள் சேர்க்கப்பட வேண்டும். பெண்களும் அதில் இடம் பெற வேண்டும்.

* வக்பு வாரியத்தில் ஷியா, சன்னி, போக்ரா, அகாக்கணி உள்ளிட்ட சமுதாயங்களுக்கு தனித்தனி பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். மேலும் போக்ரா, அகாக்கணி பிரிவினருக்கு மாநில அரசு தனித்தனி வக்பு வாரியங்களை அமைக்க அனுமதி அளிக்கலாம்.

* வக்பு வாரியம் மாதத்தில் ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது.

மீட்பு நடவடிக்கைகள்

* வக்பு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு நீக்குவதற்கான சட்டப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது.

* வக்பு நிர்வாக அதிகாரி பணியிடத்தில் துணை செயலாளர் பதவிக்கு மேல் உள்ள அதிகாரியை நியமிக்க வேண்டும். மேலும் வக்பு தீர்பாயத்தில் மாவட்ட நீதிபதி மற்றும் இணைச்செயலர் தரத்தில் ஒருவர் கட்டாயம் உறுப்பினராக இருக்க வேண்டும்.

*வக்பு சொத்துகளை சட்டவிரோதமாக மாற்றினாலோ, விற்பனை செய்தாலோ அந்த குற்றங்களுக்கு இனி கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

* தனிநபர்கள், நிறுவனங்களிடம் சிக்கியுள்ள வக்பு சொத்துகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை இனி தடையின்றி வக்பு வாரியம் மேற்கொள்ளலாம்.

* வக்பு நிர்வாகத்தில் ஒருங்கிணைந்த நடைமுறையை கொண்டுவர மத்திய அரசுக்கு விதிமுறைகள் உருவாக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

* தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் உறுப்பினராக இருப்போர் முத்தவல்லி ஆக முடியாது. மேலும் அவருக்கு குறைந்தது 21 வயது, குற்றவியல் தண்டனை இல்லாதவர் மற்றும் மனநலம் பாதிக்கப்படாதவராகவும், முன்னர் நீக்கப்படாதவராகவும் இருக்க வேண்டும்.

மேலும் 2 ஆண்டுகள் கணக்குகளை தாக்கல் செய்யாத முத்தவல்லிகளை பதவியில் இருந்து வக்பு வாரியம் நீக்கலாம். (முத்தவல்லி என்பவர் வக்பு சொத்துகளை பராமரிக்க வக்பு வாரியத்தால் நியமிக்கப்படும் நிர்வாக நபர் ஆவார்.)

இவ்வாறு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Tags:    

Similar News