இந்தியா

நாம் மக்களின் இதயங்களை திருடி விட்டோம் - பீகார் தேர்தல் வெற்றி உரையில் பிரதமர் மோடி பெருமிதம்

Published On 2025-11-14 19:44 IST   |   Update On 2025-11-14 20:35:00 IST
  • பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.
  • பீகார் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.

பீகாரில் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 6 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக-ஜேடியுவின் என்டிஏ கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் - ஆர்ஜேடியின் மகபந்தன் கூட்டணி 17 இடங்களில் வென்றுள்ளது.

இதைத்தொடர்ந்து ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.

இந்த வெற்றியால் நாடு முழுவதும் பாஜக அலுவலகங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவகத்தில் தேர்தல் வெற்றி விழா நடைபெற்றது.

இதில் அமித் ஷா, ஜே.பி நட்டா, பிரதமர் மோடி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய மோடி, "நாம் மக்களின் சேவகர்கள். நாம் நம் கடின உழைப்பால் மக்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டே இருக்கிறோம். மேலும் மக்களின் இதயங்களை நாம் திருடி விட்டோம். அதனால்தான் ஒட்டுமொத்த பீகாரும் மீண்டும் ஒருமுறை என்டிஏ அரசை தேர்ந்தெடுத்துள்ளது.

நான் பீகார் தேர்தல்களில் காட்டு ராஜ்ஜியம் மற்றும் அராஜக ஆட்சி பற்றிப் பேசியபோது, ஆர்ஜேடி கட்சி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் அது காங்கிரஸின் மனதை நோகடித்தது.

இன்று நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன், 'காட்டு ராஜ்ஜியம்' ஒருபோதும் பீகாருக்குத் திரும்பி வராது. பீகார் மக்கள் விக்சித் (வளர்ந்த) பீகாருக்காக வாக்களித்துள்ளனர்.

பீகாரில் சில கட்சிகள் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் முஸ்லீம் - யாதவ் பார்முலா ஒன்றை உருவாக்கியிருந்தன. ஆனால், இன்றைய வெற்றி ஒரு புதிய நேர்மறையான மஹிளா(பெண்கள்) மற்றும் இளைஞர்கள் பார்முலாவை உறுதி செய்துள்ளது.

இன்று, பீகார் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.

இதில் ஒவ்வொரு மதத்தையும், ஒவ்வொரு சாதியையும் சேர்ந்த இளைஞர்கள் அடங்குவர். அவர்களுடைய ஆசைகள், அவர்களுடைய கனவுகள், காட்டு ராஜ்யம்  செய்தவர்களின் பழைய வகுப்புவாத முஸ்லீம் - யாதவ் பார்முலாவை முழுவதுமாகத் தகர்த்துவிட்டன.

மேலும், ஜம்மு காஷ்மீரில் உள்ள நக்ரோட்டா மற்றும் ஒடிசாவில் உள்ள நுவாபடா பகுதி மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இடைத்தேர்தல்களில் பாஜகவின் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.

இது என்டிஏ-வுக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி. இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கான வெற்றி இது. இந்தத் தேர்தல், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

நான் தேர்தல் ஆணையம், நமது பாதுகாப்புப் படைகள் மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய பீகார் வாக்காளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை நினைத்து நாடு பெருமை கொள்கிறது.

பீகார் தேர்தல்கள் மற்றொரு விஷயத்தையும் நிரூபித்துள்ளன. இப்போது, நாட்டின் வாக்காளர்கள், குறிப்பாக நமது இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு அமோக ஆதரவு அளித்துள்ளனர்.

இன்றைய வெற்றி ஒரு புதிய பயணத்தின் தொடக்கம். பீகார் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை, எங்கள் தோள்களில் இன்னும் பெரிய பொறுப்பைச் சுமத்தியுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பீகார் அதிவேகத்தில் முன்னேறும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

பீகாரில் புதிய தொழில்கள் நிறுவப்படும். பீகார் இளைஞர்கள் பீகாருக்குள்ளேயே வேலைவாய்ப்பைப் பெறுவதை உறுதிசெய்ய நாங்கள் அயராது உழைப்போம். பீகாருக்கு முதலீடுகள் வரும். இந்த முதலீடுகள் அதிக வேலைவாய்ப்புகளைக் கொண்டு வரும்.

பீகாரில் சுற்றுலாத் துறை விரிவடையும். பீகாரின் புதிய ஆற்றலை உலகம் காணும். நமது புனித யாத்திரை ஸ்தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நமது வரலாற்று பாரம்பரியங்கள் புத்துயிர் பெறும்.

இன்று நான் நாடு முழுவதிலுமிருந்து மற்றும் உலகத்திலிருந்தும் வரும் முதலீட்டாளர்களுக்குச் சொல்கிறேன், பீகார் உங்களை வரவேற்கத் தயாராக உள்ளது.

நாடு முழுவதிலும் மற்றும் உலகத்திலும் வாழும் பீகாரைச் சேர்ந்த பிள்ளைகளிடம் நான் சொல்கிறேன், பீகாரில் முதலீடு செய்வதற்கு இதுவே மிகவும் பொருத்தமான நேரம்" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News