VIDEO: பீகார் துணை முதல்வர் சென்ற கார் மீது செருப்பு மற்றும் கற்கள் வீசி தாக்குதல்
- பீகார் துணை முதல்வரும் பாஜக வேட்பாளருமான விஜய் குமார் சின்ஹா காரில் சென்றுகொண்டிருந்தார்.
- விஜய் குமார் சின்ஹா காரில் இருந்தபடி அவர்களை நோக்கி கத்தினார்.
243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டமன்றத்திற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. 121 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த தேர்தலில் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்ற பாஜவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன் (இந்தியா) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் பீகார் துணை முதல்வரும் லக்கிசாராய் தொகுதி பாஜக வேட்பாளருமான விஜய் குமார் சின்ஹா இன்று அந்த தொகுதியில் தனது வாக்கை செலுத்தினார்.
இதன் பின் கோரிஹாரி கிராமத்தில் வாக்குப்பதிவை பார்வையிட விஜய் குமார் சின்ஹா காரில் சென்றுள்ளார்.
அவரது கார் மேலும் செல்லமுடியாதபடி ஊருக்கு வெளியே வழி மறித்து நின்று ஆர்ஜேடி ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் விஜய் குமார் சின்ஹா காரில் இருந்தபடி அவர்களை நோக்கி கத்தினார்.
ஆர்ஜேடி ஆதரவாளர்கள் அவர் கார் மீது செருப்பு மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
உடனடியாக சிறப்பு படைகளை அங்கு அனுப்பும்படி சின்ஹா அம்மாவட்ட துணை ஆட்சியருக்கு போனில் உத்தரவிட்டுள்ளார். இதனால் அவ்விடத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.