உ.பி.யில் சுவாரசியம் - மருமகனுக்கு புல்டோசர் பரிசளித்த மாமனார்
- உத்தர பிரதேசம் என்றாலே புல்டோசரே நினைவுக்கு வரும் அளவுக்கு மாறிப் போயுள்ளது.
- அங்கு திருமண பரிசாக மருமகனுக்கு புல்டோசரை மாமனார் வழங்கி பரபரப்பு ஏற்படுத்தினார்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், குறிப்பிட்ட குற்ற செயல்களைப் புரிந்தோரின் வீடுகளை புல்டோசரை கொண்டு இடிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதனால், தவறுகள் குறைவதுடன், குற்றம் செய்ய குற்றவாளிகள் அஞ்சும் நிலையும் காணப்படுகிறது.
எனவே, உத்தர பிரதேசம் என்றாலே புல்டோசரே நினைவுக்கு வரும் அளவுக்கு மாறிப் போயுள்ளது. இந்த ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலின்போது கூட இந்த விவகாரம் பற்றிய விவாதம் சூடு கிளப்பியது.
இதற்கிடையே, ஓய்வுபெற்ற ராணுவ வீரரான பரசுராம் பிரஜாபதி என்பவர் தனது மகள் நேகாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். இதன்படி, சாவன்கார் பகுதியை சேர்ந்த யோகேந்திரா பிரஜாபதி என்பவருக்கும், நேகாவுக்கும் திருமணம் முடிவானது. யோகேந்திரா கடற்படை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், தனது மகள் மற்றும் மருமகனுக்கு திருமண பரிசாக மாமனார் ஆடம்பர ரக காரை தருவதற்கு பதிலாக புல்டோசரை வழங்கியுள்ளார். இதற்கான காரணம் பற்றி பரசுராம் கூறுகையில், தனது மகள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு தயாராகி வருகிறார். ஒருவேளை தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால், பணம் ஈட்ட இந்த புல்டோசரை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார்.