பல்கலைக்கழக மானியக்குழு விவகாரம்- டெல்லியில் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை?
- கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
- டெல்லியில் நடைபெற்று வரும் உலக புத்தகக் காட்சியையும் கவர்னர் பார்வையிட உள்ளார்.
சென்னை:
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கான தேடுதல் குழு தொடர்பான தமிழக அரசின் அறிக்கையை திரும்பப்பெற கவர்னர் உத்தரவிட்டிருந்தார். மேலும், பல்கலைக்கழக மானியக்குழுத் தலைவர் அல்லது அவரால் முன்மொழியப்பட்ட பிரதிநிதியையும் கொண்ட தேடுதல் குழு அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அவர் அறிவுறுத்தி வருகிறார்.
இந்தப் பிரச்சனையில் தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவும் சூழலில், கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் யு.ஜி.சி. (பல்கலைக்கழக மானியக் குழு) அதிகாரிகளைச் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே சமயம், டெல்லியில் நடைபெற்று வரும் உலக புத்தகக் காட்சியையும் கவர்னர் பார்வையிட உள்ளார்.
இதைத் தொடர்ந்து, தனது பயணத்தை முடித்துக்கொண்டு, அவர் நாளை (புதன்கிழமை) சென்னை திரும்புவார் எனக் கூறப்படுகிறது.