இந்தியா

மன்சுக் மாண்டவியா

கொரோனா விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை - மன்சுக் மாண்டவியா

Published On 2022-12-23 00:41 IST   |   Update On 2022-12-23 00:41:00 IST
  • கொரோனா பரவலை தடுக்க முக கவசம் அணிவது அவசியம் என மத்திய அரசு வலியுறுத்தியது.
  • கொரோனா விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை என மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா கூறினார்.

புதுடெல்லி:

சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் புதுவகை கொரோனா பரவலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.

இந்தியாவிலும், அரசு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. முடிவில், முக கவசம் அணிவது அவசியம் என அரசு வலியுறுத்தியது.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ராகுல் காந்தி மற்றும் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா நெறிமுறையைப் பின்பற்றுவது சாத்தியமில்லை என்றால் தேசிய நலன் கருதி ஒற்றுமை யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராகுல் காந்திக்கு மட்டும் அரசு கடிதம் எழுதுவது ஏன்? ராகுல் காந்திக்கு கிடைத்து வரும் ஆதரவை பார்த்து மத்திய அரசு பயந்துபோய் விட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்கிறது என குற்றம்சாட்டியது.

இந்நிலையில், பாராளுமன்றத்தின் மேலவையில் மன்சுக் மாண்டவியா பேசுகையில், நாங்கள் கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை. நாடு முழுவதும் பெரிய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கலன்களை நிறுவி உள்ளோம். அவை செயல்பாட்டில் உள்ளன. நாட்டில் போதிய அளவுக்கு உள்ள மருந்துகளை மறுஆய்வு செய்து வருகிறோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News