இந்தியா
null

ஓயாத ORS சர்ச்சை.. கிடப்பில் கிடக்கும் FSSAI உத்தரவு.. மக்களுக்கு மருத்துவர் கோரிக்கை

Published On 2025-10-25 18:01 IST   |   Update On 2025-10-25 18:01:00 IST
  • உத்தரவு அமல்படுத்தப்படாதது தேசிய அவமானம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • மருந்தகங்கள் மற்றும் பள்ளிகளில் ஒருபோதும் கிடைக்கக்கூடாது.

இந்தியாவில் சர்க்கரை பானங்களை, ORS எனப்படும் oral rehydration solutions என்று ஸ்டிக்கர் ஒட்டி பல்வேறு நிறுவனங்கள் விற்று வந்தன.

இந்த பிரச்சனை தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரான சிவரஞ்சனி சந்தோஷ் கடந்த 8 ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்தார்.

இவரது தொடர் முயற்சிகளின் விளைவாக, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ஓஆர்எஸும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த தரநிலைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் அப்படி அதைப் பூர்த்தி செய்யாதவை 'ORS' என்று விளம்பரப்படுத்தி விற்கப்படக்கூடாது என்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அக்டோபர் 14 அன்று உத்தரவிட்டது.

ஆனால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 நாட்கள் கடந்தும் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. மாநில FSSAI களுக்கு  உத்தரவு தொடர்பான அறிவிருதலைகள் சென்று சேர்வதில் தாமதம் நிலவுகிறது.  

ORS என்று விளம்பரப்படுத்தப்பட்ட போலி கரைசல்கள் இன்னும் சந்தைகளில் விற்கப்பட்டு வருகிறது. மேலும் தங்களிடம் உள்ள இருப்பை காலி செய்யும் வரை தடையை இடைநிறுத்தி வைக்க இந்நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக JNTL என்ற ஜான்சன் & ஜான்சன் உடைய கிளை நிறுவனம் தங்கள் பொருட்கள் ஸ்டாக் தீரும் வரை விற்பனை செய்துகொள்ள அனுமதி FSSAI இடம் அனுமதி பெற்றதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இதுதொடர்பாக மருத்துவர் சிவரஞ்சனி கவலை தெரிவித்துள்ளார். உத்தரவு அமல்படுத்தப்படாதது தேசிய அவமானம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அனைவரும் உச்சநீதிமன்றத்துக்கு கடிதம் எழுத வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "உங்கள் அனைவருக்கும் எனது உண்மையான மற்றும் மனமார்ந்த வேண்டுகோள். தயவுசெய்து உச்ச நீதிமன்றத்திற்கு எழுதுங்கள். எதிர்கால சந்ததியினரையும் பாதுகாக்க ஒரு வலுவான சட்டம் இயற்றப்படட்டும்.

WHO பரிந்துரைத்த மருந்து வகை ORS ஐ தவிர வேறு எதுவும் மருந்தகங்கள் மற்றும் பள்ளிகளில் ஒருபோதும் கிடைக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.  

Tags:    

Similar News