இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு - வெப்ப அலை வீசியது காரணமா?
- கிராமப்புறங்களில் 15-29 வயதுக்குட்பட்ட ஆண்களின் வேலையின்மை சதவீதம் மே மாதத்தில் 14 சதவீதமாக இருந்தது.
- ஒட்டுமொத்தமாக தொழிலாளர்களின் வேலையில்லா திண்டாட்டம் 54.8 சதவீதத்திலிருந்து 55.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:
கடந்த மாதம் 5.1 சதவீதமாக இருந்த வேலையின்மை சதவீதம் இந்த மாதம் 0.5 சதவீதம் அதிகரித்து 5.6 சதவீதமாக உயர்ந்துள்ளதாக காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு முறையில் தெரிய வந்துள்ளது.
மே மாதத்திற்கான காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு மாதாந்திர தரவுகளின்படி கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களிடையே வேலையில்லா திண்டாட்டம் 5.2 சதவீதத்திலிருந்து 5.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது பெண்களில் 5 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கிராமப்புறங்களில் 15-29 வயதுக்குட்பட்ட ஆண்களின் வேலையின்மை சதவீதம் மே மாதத்தில் 14 சதவீதமாக இருந்தது. இது கடந்த ஏப்ரல் மாதத்தை விட ஒரு சதவீதம் அதிக மாகும். இது பெண்களிடையே 10.7 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நகர்ப்புறங்களிலும் 15-29 வயதுக்குட்பட்ட ஆண்களின் வேலையின்மை 15 சதவீதத்திலிருந்து 15.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெண்களிடையே 23.7 சதவீதத்திலிருந்து வேலையின்மை 24.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக தொழிலாளர்களின் வேலையில்லா திண்டாட்டம் 54.8 சதவீதத்திலிருந்து 55.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை புதிதாக எடுக்கப்பட்ட இக்கணக்கெடுப்பானது ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கும் வேலையில் தொழிலாளர்களின் பங்கேற்பின் சதவீதத்தையும் சுட்டிக்காட்டுகிறது.
வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்ததற்கு வடமாநிலங்களில் வீசிய வெப்பஅலை ஒரு முக்கிய காரணம் என இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
கடும் வெயில் காரணமாக கட்டிடம் கட்டுதல் போன்ற வெளியில் செய்யும் வேலைகள் குறைந்ததால் வேலையின்மை சதவீதம் அதிகரித்துள்ளது. மாறி வரும் பருவநிலை இனி வரும் காலங்களில் வேலையின்மையில் பெரும் பங்கு வகிக்கும் எனவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
அது மட்டுமில்லாமல் வடமாநிலங்களில் பயிர் அறுவடை காலம் முடிந்ததும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
கிராமப்புறங்களில் விவசாயம் குறைந்து சேவைத் துறைகள் வளர்ந்து வருவதாலும், பெண்கள் சாதாரண தொழிலாளர்களாகவும், குறைவான ஊதியத்தில் வேலைகள் செய்வதாலும் வேலையில்லா திண்டாட்டம் உயர்ந்துள்ளது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.