இந்தியா

பகையை மறந்து மீண்டும் இணையும் உத்தவ் தாக்கரே - ராஜ் தாக்கரே சகோதரர்கள்? -மகா. அரசியலில் பரபரப்பு

Published On 2025-04-20 15:40 IST   |   Update On 2025-04-20 15:40:00 IST
  • இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
  • எங்களுக்குள் நிலவும் பிரச்னைகளைவிட மகாராஷ்டிராவின் நலனே பெரியது.

இந்தி திணிப்பு

மகாராஷ்டிராவில் தேசிய கல்விக் கொள்கை அமலில் உள்ளது. இந்நிலையில் மும்மொழிக் கொள்கையின் கீழ் 3வது மொழியாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயம் என அம்மாநில பாஜக கூட்டணி அரசு உத்தரவிட்டது.

மேலும் 2025 - 26 கல்வியாண்டு முதல் படிப்படியாக அமல்படுத்தப்படும், 2028 - 29ஆம் கல்வியாண்டிற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது என சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

ராஜ் தாக்கரே

நேற்று கலந்துரையாடல் ஒன்றில் பேசிய ராஜ் தாக்கரே, 'சிவசேனாவின் நான் இருந்தபோது உத்தவ் தாக்கரேவுடன் பணியாற்றுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை. தற்போது என்னுடன் இணைந்து பணியாற்ற உத்தவ் தாக்கரே தயாராக இருக்கிறாரா?

எங்களுக்குள் நிலவும் பிரச்னைகளைவிட மகாராஷ்டிராவின் நலனே பெரியது. மராத்தியா்களுக்காக போராடுவதை ஒப்பிடுகையில் எங்களின் பிரச்னைகள் மிகவும் சிறியது. மீண்டும் நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுவது கடினமான காரியமல்ல' என்று தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே

அதே சமயம் நேற்று தனது கட்சி உறுப்பினா்கள் மத்தியில் சனிக்கிழமை பேசிய உத்தவ் தாக்கரே, சிறிய பிரச்னைகளை புறந்தள்ளிவிட்டு மராத்தியா் நலனுக்கு முன்னுரிமை அளிப்பவா்களுடன் ஓரணியில் திரள நானும் தயாா்.

மக்களவைத் தேர்தலின் போது, மகாராஷ்டிராவின் தொழிற்சாலைகள் குஜராத்துக்கு இடம்பெயர்கின்றன என்று நாங்கள் சொன்னபோது, அவர்கள் (ராஜ் தாக்கரே) அப்போது எதிர்த்திருந்தால், இன்று மத்திய அரசு ஆட்சியில் இருந்திருக்காது.

மகாராஷ்டிராவின் நலனைப் பற்றி சிந்திக்கும் மத்திய மற்றும் மாநில அளவில் ஒரு அரசாங்கத்தை நாங்கள் அமைத்திருப்போம். மக்களவைத் தோ்தலின்போது பாஜகவுக்கு ஆதரவளித்துவிட்டு, பேரவைத் தோ்தலின்போது அவா்களை எதிா்த்துவிட்டு மீண்டும் அவா்களுடன் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டால் எதுவும் மாறாது.

முதலில் மகராஷ்டிரத்துக்கு எதிராக செயல்படுபவா்களை இங்கு வரவேற்காதீா்கள். அதன் பிறகு மாநில நலன் குறித்துப் பேசலாம். எனக்கு யாருடனும் மோதல் இல்லை. பாஜகவுடனான கூட்டணி வேண்டுமா? அல்லது எங்கள் கட்சியுடன் கூட்டணி வேண்டுமா என்பதில் மராத்திய மக்கள் தெளிவான முடிவெடுக்க வேண்டும் " என்று தெரிவித்தார்.

சிவசேனா கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவின் இளைய சகோதரா் மகனான ராஜ் தாக்கரே கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா என்ற கட்சியை தொடங்கி எதிர் துருவத்தில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் இணைவது குறித்து பேசியிருப்பது மகாராஷ்டிர அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவர்கள் இணைவதில் மகிழ்ச்சியே என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.    

Tags:    

Similar News