இந்தியா

மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்?: உத்தவ் தாக்கரே கட்சி கேள்வி

Published On 2023-06-18 03:31 GMT   |   Update On 2023-06-18 03:31 GMT
  • இந்த இனக்கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
  • மணிப்பூரில் தற்போது இரட்டை எஞ்சின் அரசு உள்ளது.

மும்பை :

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்-மந்திரி பைரன் சிங் தலைமையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பெரும்பான்மையினராக உள்ள மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதற்கு நாகா, குகி ஆகிய பழங்குடியின சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு வன்முறை தொடர்ந்து வருகிறது.

இதுவரை இந்த இனக்கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமான வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இணைய சேவையும் முடக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இம்பால் நகரில் உள்ள மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி ராஜ்குமார் ரஞ்சன் சிங் வீட்டை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலவர கும்பல் சூழ்ந்து தீ வைத்து எரித்தது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தில் பிரதமர் மோடி மவுனம் காத்து வருவதை மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்து உள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான 'சாம்னா'வின் தலையங்கத்தில் கூறி இருப்பதாவது:-

மணிப்பூரில் குகி பயங்கரவாதிகளால் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதலில் இந்துக்கள் இறந்துகொண்டு இருக்கும் வேளையில் இந்துத்வா என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சக்திவாய்ந்தவர்கள் கண்களை மூடிக்கொண்டு இருக்கின்றனர். ஏன் மணிப்பூரை சேர்ந்த இந்துக்கள் இந்துக்கள் இல்லையா?

ஒரே கட்சி மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தால் தான், ஆட்சி மற்றும் நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்த முடியும் என்று பா.ஜனதா கூறி வருகிறது. மணிப்பூரில் தற்போது இரட்டை எஞ்சின் அரசு உள்ளது.

அப்படியானால் மணிப்பூரில் ஏன் இந்த இரட்டை என்ஜின் அரசு தோல்வியடைந்தது?, மாநிலத்தில் அமைதியை இன்னும் நிலைநாட்ட முடியாததற்கு காரணம் என்ன? இந்த பயங்கரமான பிரச்சினை பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஒருவார்த்தை கூட பேச மறுப்பதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள வேண்டும். குகி பயங்கரவாதிகளுக்கு எங்கிருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கிடைக்கிறது என்பதை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News