இந்தியா

என்னை மீண்டும் சிறைக்கு அனுப்ப முயற்சி: டி.கே.சிவக்குமார்

Published On 2022-12-20 03:18 GMT   |   Update On 2022-12-20 03:18 GMT
  • 2 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.
  • ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையின்போது நோட்டீசு அனுப்பினர்.

பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், தனக்கு சொந்தமான கல்வி நிலையங்களில் நடைபெற்ற சி.பி.ஐ. சோதனை குறித்து பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சி.பி.ஐ. அதிகரிகள் பெங்களூருவில் உள்ள எங்களுக்கு சொந்தமான கல்வி நிலையங்களில் சோதனை செய்துள்ளனர். ஊழியர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். எந்த தகவலை பெற்றனர் என்பது எனக்கு தெரியவில்லை. அவர்களுக்கு விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது. அந்த பணியை அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்களோ செய்யட்டும்.

தேர்தல் நேரத்தில் மத்திய விசாரணை அமைப்புகள் அடிக்கடி எனக்கு நோட்டீசு அனுப்பி தொல்லை கொடுக்கிறார்கள். சட்டவிரோதமாக சொத்துகள் சேர்த்ததாக 2 ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். நானே சி.பி.ஐ.க்கு கடிதம் எழுதி, இது தொடர்பாக ஏதாவது தகவல் வேண்டுமென்றால் நான் வழங்க தயாராக உள்ளேன் என்று கூறினேன். அப்போது அவர்கள் அமைதியாக இருந்துவிட்டனர். இப்போது தேர்தல் நெருங்குவதால் மீண்டும் தொல்லை கொடுக்கிறார்கள்.

ராகுல்காந்தியின் ஒற்றுமை யாத்திரையின்போது நோட்டீசு அனுப்பினர். நேரில் ஆஜராக காலஅவகாசம் கேட்டேன். ஆஜராகியே தீர வேண்டும் என்று சொன்னதால் நான் டெல்லிக்கு சென்று நேரில் ஆஜரானேன். என்னை ஒரு முறை சிறைக்கு அனுப்பினர். இப்போது மீண்டும் ஒரு முறை சிறைக்கு அனுப்ப முயற்சி செய்கிறார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை. யாரையும் ஏமாற்றவில்லை.

நான் மின்சாரத்துறை மந்திரியாக இருந்தபோது ஒரு தவறு கூட செய்யவில்லை. ஆனால் எனக்கு எதிராக சட்டவிரோதமாக சொத்துகளை சேர்த்ததாக வழக்கு போட்டுள்ளனர். எனது வக்கீலுக்கு கட்டணமாக ரூ.5 லட்சம் வழங்கினேன். அவருக்கும் நோட்டீசு அனுப்பியுள்ளனர்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

Similar News