இந்தியா

திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருப்பதை தவிர்க்க ஸ்மார்ட் கார்டு

Published On 2022-06-18 12:26 IST   |   Update On 2022-06-18 13:54:00 IST
  • ஆக்ஸிஸ் கார்டில் பக்தர்களுக்கு தரிசன நேரம் ஒதுக்கப்படுகிறது.
  • வைகுண்டம் காம்ப்ளக்சில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் வெளியே சென்றால் மீண்டும் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படாது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இலவச தரிசனத்திற்கு வைகுண்டம் காம்ப்ளக்சில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் ஆக்சிஸ் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது.

ஆக்ஸிஸ் கார்டில் பக்தர்களுக்கு தரிசன நேரம் ஒதுக்கப்படுகிறது. ஸ்மார்ட் கார்டு பெற்ற பக்தர்கள் வைகுண்டம் காம்ப்ளக்சில் காத்திருக்காமல் வெளியே சென்று விட்டு தரிசனத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக வரவேண்டும். பிறகு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்கு முன்பு வைகுண்டம் காம்ப்ளக்சில் தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள் வெளியே சென்றால் மீண்டும் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படாது.

தற்போது நேரம் ஒதுக்கீடு முறையில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு சிரமத்தை போக்கி உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பதியில் நேற்று 76,407 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 39,938 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.28 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.

Tags:    

Similar News