இந்தியா

மூன்றுகால் விலங்கை போன்று..! மகாராஷ்டிர மாநில அரசை கிண்டலடித்த ப.சிதம்பரம்

Published On 2023-07-13 03:07 GMT   |   Update On 2023-07-13 03:07 GMT
  • ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர மாநில அரசை டிரிபிள் என்ஜின் அரசு என்கிறார்
  • அஜித் பவார் உள்ளிட்ட 9 பேருக்கு இன்னும் இலாகா ஒதுக்கப்படவில்லை

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து, அக்கட்சியை தனக்குரியதாக்கிக் கொண்ட ஏக்நாத் ஷிண்டே, பா.ஜனதாவுடன் கைக்கோர்த்து முதலமைச்சராக உள்ளார். பா.ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக உள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்திய அஜித் பவார், ஷிண்டே அரசில் ஐக்கியமாகி துணை முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அவருடன் மேலும் 8 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் மந்திரியாக பதவி ஏற்றனர்.

ஏக்நாத் ஷிண்டே அரசில் தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் குரூப் இணைந்தது, மூன்று கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது.

இருந்தாலும் அஜித் பவார் இணைந்த பிறகு முதல்வராக இருக்கும் ஏக்நாத் ஷிண்டே, ''இரண்டு என்ஜின் அரசு தற்போது டிரிபிள் என்ஜின் அரசாகியுள்ளது. இதனால் மாநில வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கும். தற்போது நாங்கள் ஒரு முதல்வர், இரண்டு துணைமுதல்வர்களை பெற்றுள்ளோம். இது மாநில வளர்ச்சிக்கு உதவும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் இந்த கூட்டணியை கிண்டல் அடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ''மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் மற்றும் இரண்டு துணைமுதல்வர்கள், அவர்கள் அரசை டிரிபிள் என்ஜின் அரசு எனக் கூறி வருகிறார்கள். ஆனால், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்று கால்களை உடைய விலங்கு ஓடுவதைபோல் நான் பார்க்கிறேன்.

மகாராஷ்டிரா அரசில் இணைந்த 9 மந்திரிகளுக்கு எந்த வேலையும் இல்லை. ஏனென்றால், அவர்களுக்கு எந்த இலாகாக்களும் ஒதுக்கப்படவில்லை.

தேவேந்திர பட்னாவிஸ் உள்பட 20 மந்திரிகளும் தங்களுடைய இலாகாக்களை விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. ஒரு தீர்வு உள்ளது. அது, 9 பேரும் இலாகா இல்லாத மந்திரி என அறிவிக்கலாம்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News