இந்தியா

திருப்பதி கோவிலுக்கு மேல் பறந்த விமானப்படை ஹெலிகாப்டர்கள்- பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி

Published On 2023-04-26 09:28 IST   |   Update On 2023-04-26 10:49:00 IST
  • பலத்த பாதுகாப்பையும் மீறி திருப்பதி ஏழுமலையான் கோவில் மீது 3 ஹெலிகாப்டர்கள் பறந்தன.
  • தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் மேல் விமானம், ஹெலிகாப்டர்கள் பறக்கக்கூடாது என்பது ஆகம சாஸ்திர விதி. இதனால் திருப்பதி மலைக்கு மேல் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், டிரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் பலத்த பாதுகாப்பையும் மீறி நேற்று மாலை திருப்பதி ஏழுமலையான் கோவில் மீது 3 ஹெலிகாப்டர்கள் பறந்தன. தரிகொண்டா வெங்கமாம்பா, அன்னபிரசாத கட்டிடம், பரகாமணி கட்டிடம் மற்றும் பாலாஜி நகர் உள்ளிட்ட இடங்களுக்கு மேல் பறந்தன.

இந்த சம்பவம் தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, திருப்பதி தேவஸ்தான அதிகாரி பாலிரெட்டி, ரேணிகுண்டாவில் உள்ள விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டார்.

அந்த ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படைக்கு சொந்தமானது என தகவல் கிடைத்தது.

கடப்பாவில் உள்ள அதிரடிப்படை முகாமில் இருந்து சென்னை செல்லும்போது திருப்பதி மலைக்கு மேல் ஹெலிகாப்டர்கள் பறந்ததாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

ஏழுமலையான் கோவிலுக்கு மேல் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் பறக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தது.

விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக திருப்பதி மலை அங்கீகரிக்கப்படவில்லை என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News