இந்தியா

50-வது முறையாக சபரிமலைக்கு யாத்திரை வந்த 10 வயது சிறுமி

Published On 2024-01-04 11:13 IST   |   Update On 2024-01-04 11:13:00 IST
  • சபரிமலைக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறுவர்-சிறுமிகள் அதிகளவில் வருகிறார்கள்.
  • இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான குழந்தைகளை பக்தர்கள் அழைத்து வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

சபரிமலைக்கு ஒருவர் விரதமிருந்து ஒருமுறை வந்துவிட்டால் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக செல்ல வேண்டும் என்ற தூண்டுதல் அவருக்குள் ஏற்பட்டு விடுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் விரதமிருந்து சபரிமலைக்கு வருவதை வாடிக்கையாக வைத்துக் கொள்கிறார்கள்.

அது மட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் புதிய பக்தர்களும் அதிகளவில் வருகிறார்கள். இதன் காரணமாகவே ஐயப்ப பக்தர்கள் வருகை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி வருகிறது. சபரிமலைக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறுவர்-சிறுமிகள் அதிகளவில் வருகிறார்கள். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான குழந்தைகளை பக்தர்கள் அழைத்து வருகின்றனர்.


இந்நிலையில் ஒரு சிறுமி 50-வது முறையாக இந்த ஆண்டு சபரிமலைக்கு யாத்திரை வந்திருக்கிறார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் எழுகோன் பகுதியை சேர்ந்த அந்த சிறுமியின் பெயர் அத்ரிதி. தன்னுடைய 10-வது பிறந்த நாளுக்கு ஒருநாள் இருக்கும் நிலையில், அவர் தனது தந்தை அபிலாஷூடன் சபரிமலைக்கு இருமுடி கட்டி 50-வது முறையாக யாத்திரை வந்தார்.

சிறுமி அத்ரிதி ஒன்பது மாத குழந்தையாக இருந்த போது முதன்முதலாக சபரிமலைக்கு தனது தந்தையுடன் வந்திருக்கிறார். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் மாதாந்திர பூஜை மற்றும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் வந்தபடி இருந்துள்ளார்.

இதன்காரணமாக 10 வயதுக்குள்ளேயே 50முறை சபரிமலைக்கு வந்த பெறுமையை சிறுமி அத்ரிதி பெற்றிருக்கிறார். சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களில் பெரும்பாலானவர்கள் தொடர்ந்து 18 ஆண்டுகள் வருவார்கள்.

அதன்பிறகு ஒரு சிலரே தொடர்ந்து தொடர்ச்சியாக சபரிமலைக்கு செல்லும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். ஆனால் சிறுமி அத்ரிதியோ, 10 வயதுக்குள் 50 முறை வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுமி அத்ரிதி எழுகோனில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

Tags:    

Similar News