தனது கட்சி வேட்பாளருக்கு எதிராக தேஜஸ்வி பிரசாரம்
- விகாஷீல் இன்சான் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
- அந்த கட்சி வேட்பாளர் சந்தோஷ் சாகினியை இந்தியா கூட்டணி ஆதரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்படவில்லை. இந்த குழப்பத்தில் நட்பு போட்டிகள் ஏற்பட்டு உள்ளன. கூட்டணியினரே ஒருவருக்கொருவர் எதிராக போட்டியிடுகிறார்கள்.
தர்பங்கா கவுரா பவுராம் தொகுதி யாருக்கு என்று இறுதி செய்யப்படுவதற்கு முன்பே ராஷ்டிரீய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) அப்சல் அலிகானை வேட்பாளராக அறிவித்தது. கட்சி தலைமை அதற்கான ஆவணங்களையும் வழங்கியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்சல் பிரசாரம் செய்ய தொகுதிக்கு சென்றார்.
அப்போது அவரது தொகுதி கூட்டணியில் உள்ள விகாஷீல் இன்சான் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த கட்சி வேட்பாளர் சந்தோஷ் சாகினியை இந்தியா கூட்டணி ஆதரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் ராஷ்டிரீய ஜனதா தளம் அப்சல்கானை தொடர்பு கொண்டு கட்சி சின்னத்தின் ஆவணத்தை திருப்பி கேட்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். ராஷ்டிரீய ஜனதா தள வேட்பாளராக அவர் மனுதாக்கல் செய்தார்.
அப்சல் அலிகானை தாங்கள் ஆதரிக்கவில்லை என்று ஆர்.ஜே.டி. தெரிவித்தது. முறையான ஆவணங்களுடன் அவர் வேட்புமனு தாக்கல் செய்ததால் நிராகரிக்க முடியாது என்று தேர்தல் அதிகாரிகள் கூறி விட்டனர். இதனால் அந்த தொகுதியில் தனது கட்சி வேட்பாளரை எதிர்த்து ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ்வுக்கு பிரசாரம் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.