வாலிபர் அடிப்பட்டு உயிருக்கு போராடுவதையும், அந்த வழியாக பலர் சாதாரணமாக அவரை கடந்து செல்வதையும் படத்தில் காணலாம்.
லாரி மோதி ½ மணி நேரம் உயிருக்கு போராடிய வாலிபர் பலி
- உதவி கேட்டு சத்தம் போட்டும் யாரும் அவரை யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.
- விபத்து நடந்த இடத்தில் இருந்து ஆஸ்பத்திரி 5 நிமிட தூரத்தில் தான் உள்ளது.
மும்பை :
அவுரங்காபாத்தை சேர்ந்தவர் சுனில் காலே (வயது31). ஜால்னா ரோட்டில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் டீ கேனுடன் கடை அருகில் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, வாலிபர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஜவகர்நகர் போலீசார் வாலிபர் மீது மோதிய வாகனத்தை அடையாளம் காண சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர் வாகனம் மோதி அடிபட்டு சுமார் ½ மணி நேரம் உதவி கிடைக்காமல் ரோட்டில் கிடந்தது தெரியவந்தது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின்படி, வாலிபர் சாலையை கடந்து செல்ல முயன்ற போது அவர் மீது லாரி ஒன்று மோதுகிறது. அந்த லாரி நிற்காமல் சென்றுவிடுகிறது. லாரி மோதி பலத்த காயமடைந்த வாலிபர் ரோட்டில் விழுந்தார். அவர் உதவி கேட்டு சத்தம் போடுகிறார். ஆனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொது மக்கள் யாரும் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முன்வரவில்லை. சாதாரணமாக வாலிபரை கடந்து சென்றனர். சிலர் வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.
இந்தநிலையில் வாலிபர் வேலை பார்த்த டீக்கடை உரிமையாளருக்கு தகவல் கிடைக்கவே அவர் ஓடி வந்து, சுனில் காலேயை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்சியை பார்க்கையில் மனித நேயம் மரித்து போய் விட்டதா? என்ற கேள்வி எழுகிறது.
இதுகுறித்து சுனில் காலேவின் தம்பி அமோல் கூறுகையில், " நான் எனது அண்ணன் மற்றும் பார்வையிழந்த தங்கையுடன் வசித்து வந்தேன். சம்பவத்தன்று நான் ஜல்னா சென்று இருந்தேன். காலை 10.30 மணிக்கு அண்ணன் விபத்தில் சிக்கியதாக தகவல் வந்தது. வந்து பார்த்த போது அவர் உயிரிழந்துவிட்டார். எனது அண்ணனை உரிய நேரத்தில் கொண்டு வந்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என டாக்டர்கள் கூறினர். விபத்து நடந்த இடத்தில் இருந்து ஆஸ்பத்திரி 5 நிமிட தூரத்தில் தான் உள்ளது. யாராவது அவரை விபத்து நடந்தவுடன் ஆஸ்பத்திாியில் சேர்த்து இருந்தால் பிழைத்து இருப்பார்" என வேதனையுடன் தெரிவித்தார்.