திருப்பதி கோவிலில் 3 மணி நேரத்தில் சாமி தரிசனம்
- பிரமோற்சவ விழா நாட்களில் 4 மாட வீதிகளில் சாமி வீதி உலா வருவதை காண திருமலையில் பக்தர்கள் குவிந்து உள்ளனர்.
- வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தின் போது பக்தர்களை அடிக்கடி தடுத்து நிறுத்தி தரிசனத்திற்கு அனுமதித்ததால் நீண்ட நேரம் ஆனது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் நவராத்திரி பிரமோற்சவ விழா தொடங்கியது.
அன்று இரவு ஏழுமலையான் பெரிய சேஷ வாகனத்தில் 4 மாட வீதிகளில் விழா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று காலை சின்ன சேஷ வாகனத்திலும் இரவு அம்ச வாகனத்திலும் ஊர்வலமாக எழுந்தருளினார். இன்று காலை சிம்ம வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.
பிரமோற்சவ விழா நாட்களில் 4 மாட வீதிகளில் சாமி வீதி உலா வருவதை காண திருமலையில் பக்தர்கள் குவிந்து உள்ளனர்.
பிரமோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், ஆர்ஜித சேவைகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு தரிசனம் உள்ளிட்டவைகளை ரத்து செய்தது.
வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தின் போது பக்தர்களை அடிக்கடி தடுத்து நிறுத்தி தரிசனத்திற்கு அனுமதித்ததால் நீண்ட நேரம் ஆனது.
தற்போது வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் சுமார் 3 மணி நேரத்தில் எந்த சிரமம் இன்றி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 73,859 பேர் தரிசனம் செய்தனர். 30,634 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.31 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.