இந்தியா

பஞ்சாப்பில் அட்டாரி எல்லையில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு டிரோனை சுட்டு விரட்டிய பாதுகாப்பு படை

Published On 2022-08-19 10:31 GMT   |   Update On 2022-08-19 10:31 GMT
  • காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த இந்த ஆயுதங்கள் பயங்கரவாதிகளுக்கு வழங்கப்பட்டன.
  • காஷ்மீரில் வெடிபொருட்கள் வீசப்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

பஞ்சாப் மாநிலம் அட்டாரி பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே டிரோன் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அந்த டிரோனில் வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது. வெடிகுண்டுடன் வந்த அந்த டிரோனை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் பார்த்தனர்.

இதையடுத்து அவர்கள் வெடிகுண்டு டிரோனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த டிரோனை தீவிரவாதிகள் அனுப்பியது தெரியவந்தது. பாதுகாப்பு படையினர் சுட்டு விரட்டியதால் அந்த டிரோன் பாகிஸ்தானுக்கு திரும்பி சென்றுவிட்டது. இதற்கிடையே டிரோன் வந்த பகுதியில் ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் பாகிஸ்தான் டிரோன்கள் மூலம் ஆயுதங்களை வீசி வந்தது. இந்த டிரோன்கள் மூலம் ஜம்மு, ஸ்ரீநகர், கதுவா, சம்பா மற்றும் தோடா ஆகிய 5 மாவட்டங்களில் ஆயுதங்கள், வெடி மருந்துகள், வெடிபொருட்கள் வீசப்பட்டன.

லஷ்கர்-இ-தொய்பாவின் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் காஷ்மீரில் இந்த ஆயுதங்களை பெற்று வந்தது தெரியவந்தது. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த இந்த ஆயுதங்கள் பயங்கரவாதிகளுக்கு வழங்கப்பட்டன.

இதுதொடர்பாக கதுவாவில் உள்ள ராஜ்பாக் போலீஸ் நிலையத்தில் கடந்த மே மாதம் 29-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு ஜூலை 30-ந்தேதி என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் காஷ்மீரில் வெடிபொருட்கள் வீசப்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். ஜம்மு, ஸ்ரீநகர், கதுவா, சம்பா, தோடா ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 இடங்களில் நேற்று இந்த சோதனை நடத்தப்பட்டது.

கதுவா மாவட்டத்தில் மர்ஹூன் பகுதியில் 4 வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மேலும் தோடா மண்டலத்தின் கரோவா பல்லா பகுதியில் உள்ள ஒரு வீடு, ஜம்முவில் உள்ள தலாப் காதிகான் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

Tags:    

Similar News