இந்தியா

ஆந்திராவில் ரூ.15,300 கோடியில் புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Published On 2022-11-12 11:39 IST   |   Update On 2022-11-12 11:39:00 IST
  • பிரதமர் மோடியை காண்பதற்காக ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் திரளானோர் சாலை ஓரங்களில் திரண்டிருந்தனர்.
  • பவன் கல்யாண் சந்திப்பு மூலம் பா.ஜ.க., ஜனசேனா, தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பதி:

பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு வந்தார்.

அவருக்கு ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கவர்னர் விஸ்வ பூஷன் அரிச்சந்தன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முக்கிய பிரமுகர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து விசாகப்பட்டினத்தில் உள்ள மாருதி சர்க்கிளில் இருந்து 15 கி.மீ தூரத்திற்கு ரோடு ஷோ நடந்தது. பிரதமர் மோடியை காண்பதற்காக ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் திரளானோர் சாலை ஓரங்களில் திரண்டிருந்தனர். அவர்கள் பிரதமரை வாழ்த்தி கோஷமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரதமர் மோடி காரில் இருந்தபடியே கை அசைத்தபடி சென்றார்.

ரோடு ஷோ முடிந்தவுடன் ஆந்திரா பிரபல நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பிரதமர் மோடியை சந்தித்து 5 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அளித்தார்.

அந்த கடிதத்தில் ஆந்திராவில் நிலவி வரும் அவலங்கள் குறித்து குறிப்பிட்டு இருந்தார்.

இந்த சந்திப்பு ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பவன் கல்யாண் சந்திப்பு மூலம் பா.ஜ.க., ஜனசேனா, தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பிரதமர் மோடி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கினார்.

இன்று காலை 8 மணிக்கு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழக மைதானத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ரூ.15,300 கோடியில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

முதல்-அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தெலுங்கானா சென்றார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி விசாகப்பட்டினத்தில் 8,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News