இந்தியா

5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை நியமிக்க இந்தியா கூட்டணி திட்டம்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Published On 2024-05-25 07:35 GMT   |   Update On 2024-05-25 07:35 GMT
  • இந்தியா கூட்டணியை நாட்டு மக்கள் வெளியேற்றி உள்ளனர்.
  • இந்தியா கூட்டணி கட்சிகள் சொந்த நலன்களை நிறைவேற்றும் நோக்கில் செயல்படுகின்றன.

பாட்னா:

பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் பாட்லிபுத்ராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

இந்த 2024-ம் ஆண்டு தேர்தலில் ஒருபுறம் உங்களுக்காக 24 மணி நேரமும் உழைக்கும் மோடி, மறுபுறம் உங்களிடம் பொய் சொல்லும் இந்தியா கூட்டணி இருக்கிறது. 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த பாரத் ஆக்குவதில் நான் 24 மணி நேரமும் உழைத்து கொண்டிருக்கிறேன்.

இந்தத் தேர்தல் இந்தியாவை வலிமையாக்க 24 மணி நேரமும் உழைக்கும் மோடிக்கும், வேலை இல்லாத இந்தியக் கூட்டணிக்கும் இடையே நடப்பதாகும்.

இந்தியா கூட்டணியை நாட்டு மக்கள் வெளியேற்றி உள்ளனர். அதனால்தான் இந்த இந்தியா கூட்டணி என்னை தவறாக பேசுவதில் மும்முரமாக உள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகள் சொந்த நலன்களை நிறைவேற்றும் நோக்கில் செயல்படுகின்றன. அவர்கள் 5 ஆண்டுகளில் 5 பிரதமர்களை உருவாக்கும் திட்டத்தில் உள்ளனர்.

இந்தியாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு இருக்காது என்று நமது அரசியலமைப்பு கூறுகிறது. இதை டாக்டர் அம்பேத்கரும் கூறியுள்ளார். ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளம்-காங்கிரஸ் எஸ்.சி,எஸ்.டி, ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை மதத்தின் அடிப்படையில் தங்கள் வாக்கு வங்கிக்கு வழங்க விரும்புகின்றன.

இந்தியா கூட்டணி தலைவர்கள் வகுப்புவாதிகளாக இருக்கிறார்கள். நான் உயிருடன் இருக்கும் வரை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீட்டை கொள்ளையடிக்க இந்தியா கூட்டணியை அனுமதிக்க மாட்டேன்.

தங்கள் வாக்கு வங்கியை சந்தோஷப்படுத்த, காங்கிரஸ் சிறுபான்மை நிறுவனங்கள் தொடர்பான சட்டத்தை ஒரே இரவில் மாற்றியது. இதற்குப் பிறகு, ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் சிறுபான்மை நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டன. அதற்கு முன்பு இந்த நிறுவனங்களில் சேர்க்கையின்போது எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி முழு இட ஒதுக்கீட்டைப் பெற்றனர்.

இது எல்.இ.டி பல்புகளின் காலம். ஆனால் பீகாரில் சிலர் லாந்தருடன் அலைகிறார்கள். ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 'லாந்தர்' ஒரு வீட்டிற்கு மட்டுமே வெளிச்சம் தருகிறது. அதே நேரத்தில் பீகார் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags:    

Similar News