இந்தியா

4வது நாளாக முடங்கியது பாராளுமன்றம்- கடும் அமளியால் இரு அவைகளும் 12 மணி வரை ஒத்திவைப்பு

Published On 2023-02-07 06:26 GMT   |   Update On 2023-02-07 06:26 GMT
  • அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.
  • பாராளுமன்றம் நடைபெறாமல் இது 4-வது நாளாக இன்றும் நீடித்தது.

இந்தியாவின் பெரும் தொழிலதிபரான அதானியின் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.

குறிப்பாக இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

அத்துடன் இந்த பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசுகளையும் வழங்கி உள்ளன.

இந்த கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் வழக்கமான அலுவல்கள் நடைபெறாமல் தொடர்ந்து முடங்கி வருகின்றன.

இந்தநிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற அவை கூடியதும் அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

அதானி குழும விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்றம் நடைபெறாமல் இது 4-வது நாளாக இன்றும் நீடித்தது.

Tags:    

Similar News