இந்தியா

மங்களூருவில் விடுதியில் உணவு சாப்பிட்ட 137 மாணவிகளுக்கு மயக்கம்

Published On 2023-02-07 05:10 GMT   |   Update On 2023-02-07 06:57 GMT
  • விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு தினமும் 3 வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
  • உணவை சாப்பிட்ட மாணவிகளில் பலருக்கு நேற்று திடீரென்று வாந்தி, மயக்கம், தலைசுற்று, வயிற்று வலி ஏற்பட்டது.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு சக்திநகர் பகுதியில் சிட்டி நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தட்சிண கன்னடா மட்டுமின்றி, வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவிகள் தங்குவதற்காக கல்லூரியில் விடுதி உள்ளது.

இந்த விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகளுக்கு தினமும் 3 வேளை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இரவு வழக்கம் போல உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை சாப்பிட்ட மாணவிகளில் பலருக்கு நேற்று திடீரென்று வாந்தி, மயக்கம், தலைசுற்று, வயிற்று வலி ஏற்பட்டது.

இதனால் மாணவிகள் கூச்சலிட்டு கதறினர். இதை பார்த்த கல்லூரி மற்றும் விடுதி நிர்வாக அதிகாரிகள் அவர்களை மீட்டு மங்களூருவில் உள்ள வெவ்வேறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 137 மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இவர்களில் ஏ.ஜே. மருத்துவமனையில் 52 பேரும், கேஎம்சி ஜோதி மருத்துவமனையில் 18 பேரும், யூனிட்டி மருத்துவமனையில் 14 பேரும், சிட்டி மருத்துவமனையில் 8 பேரும், மங்களா மருத்துவமனையில் 3 பேரும், பாதர் முல்லர் மருத்துவமனையில் 42 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார், மத்திய சப்-டிவிஷன் உதவி போலீஸ் கமிஷனர் ராஜேந்திர குமார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினர். விடுதிக்கும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

உணவு விஷமாக மாறியதே காரணம் என்று கூறப்படுகிறது.மாணவிகளின் உயிருக்கு எந்தவிதமான பாதிப்பு இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் மங்களூரு நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாணவிகளின் பெற்றோர் மற்றும் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிட்டி மருத்துவமனை முன்பு திரண்டனர். மங்களூரு தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வேதவியாஸ் காமத் மருத்துவமனைக்கு சென்று மாணவிகளிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.

Tags:    

Similar News