இந்தியா

திருப்பதியில் பஸ்சுக்கு காத்திருந்த சட்டக் கல்லூரி மாணவி காரில் கடத்தல்

Published On 2022-08-04 14:09 IST   |   Update On 2022-08-04 14:09:00 IST
  • பட்டப்பகலில் சட்டக் கல்லூரி மாணவியை காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • போலீசார் 2 பேரை கைது செய்து மாணவியை எதற்காக காரில் கடத்தினார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் திருப்பதியில் சட்டக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கர்னூலை சேர்ந்த 24 வயது மாணவி ஒருவர் இறுதியாண்டு படித்து வருகிறார்.

நேற்று மாலை கல்லூரி முடிந்து மாணவி தாமனேனி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது காரில் வந்த 2 வாலிபர்கள் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று காரில் ஏற்றிக்கொண்டு வேகமாக சென்றனர்.

பஸ் நிறுத்தத்தில் இருந்த பொதுமக்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாணவியை கடத்திச் சென்ற கார் எண்ணுடன் திருப்பதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து சித்தூர், ரேணிகுண்டா, திருச்சானூர், காளஹஸ்தி, கடப்பா உள்ளிட்ட போலீஸ் நிலையங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். சாலைகளின் குறுக்கே தடுப்புகளை அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேர வாகன தணிக்கைக்கு பிறகு ராஜம்பேட்டை நோக்கி வந்த காரை மறித்த போலீசார் அதிலிருந்து சட்டக் கல்லூரி மாணவியை மீட்டனர்.

மேலும் மாணவியை கடத்திச் சென்ற வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் மாணவியின் சித்தப்பா மகன் வினய் தனது நண்பருடன் சேர்ந்து மாணவியை கர்னூலுக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.

போலீசார் 2 பேரையும் கைது செய்து மாணவியை எதற்காக காரில் கடத்தினார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் சட்டக் கல்லூரி மாணவியை காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News