கேரளாவில் செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலி
- செல்போன் வெடித்ததற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.
- பழையனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார், முன்னாள் பஞ்சாயத்து கவுன்சிலர். இவரது மனைவி சவுமியா. இவர்களது ஒரே மகள் ஆதித்யஸ்ரீ (வயது 8)
இவள், அந்தப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு வீட்டில் இருந்த ஆதித்யஸ்ரீ, தனது தந்தையின் செல்போனை எடுத்து, அதில் ஒரு வீடியோவை பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த செல்போன் வெடித்தது. வீட்டில் வெடி வெடித்தது போன்ற சத்தம் கேட்டதால், பக்கத்து அறைகளில் இருந்த பெற்றோர் ஓடி வந்தனர். அங்கு ஆதித்யஸ்ரீ காயங்களுடன் கிடந்துள்ளார். செல்போன் வெடித்து சிதறி கிடந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அசோக்குமார், உடனடியாக ஆதித்யஸ்ரீயை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆதித்யஸ்ரீ இறந்துவிட்டதாக தெரிவித்தனர். செல்போன் வெடித்ததற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இதுகுறித்து பழையனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.