இந்தியா

ஜி-20 தலைமை பொறுப்பை இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்கிறது இந்தியா

Update: 2022-12-01 07:33 GMT
  • நாடு முழுவதும் 50 நகரங்களில் 200 கூட்டங்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டை எதிர்நோக்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, இந்தியா உள்பட 15 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளடக்கிய அமைப்பாக ஜி-20 உள்ளது. உலகின் சக்திவாய்ந்த அமைப்பான ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு கடந்த மாதம் இந்தோனேசியாவில் நடந்தது.

இதில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஜி-20 அமைப்பின் விதிமுறைகளின்படி அடுத்தாண்டு ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது.

மாநாட்டில் முறைப்படி ஜி-20 மாநாட்டின் கவுரவ பொறுப்பான சுத்தியலை பிரதமர் மோடியிடம், இந்தோனேசிய அதிபர் ஜோஜோ விடோடோ வழங்கினார். அடுத்த ஆண்டு ஜி-20 நாடுகளின் மாநாடு இந்தியா தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறது. இதையடுத்து நாடு முழுவதும் 50 நகரங்களில் 200 கூட்டங்களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

2023-ம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி-20 மாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற அடிப்படையில் இந்தியா பணியாற்றும். இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பருவநிலை நிதி, பேரிடர் அபாய குறைப்பு மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஆகியவற்றை நிகழ்ச்சி நிரலில் முன்னிலையில் வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதிய யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் கடன் நிலைத்தன்மை மற்றும் பலதரப்பு அமைப்புகளின் சீர்திருத்தம் தொடர்பான பிரச்சினைகளில் ஒருமித்த கருத்தை உருவாக்க இந்தியா முயற்சிக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தநிலையில் இந்தியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டை எதிர்நோக்கி இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறும்போது, "தற்போதைய உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வது உள்பட ஒரு நெகிழ்வான உலகளாவிய பொருளாதாரத்தை உருவாக்க அடுத்த ஆண்டு இந்தியாவின் ஜி-20 தலைவர் பதவிக்கு ஆதரவளிக்க நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம்" என்றார்.

Tags:    

Similar News