இந்தியா

வருகிற 7-ந்தேதி வரை பலத்த மழை எச்சரிக்கை: கேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலி

Published On 2023-10-02 04:32 GMT   |   Update On 2023-10-02 04:32 GMT
  • மழை தொடருவதால் ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் 5 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.
  • தொடர்மழை காரணமாக அம்பலப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திருவனந்தபுரம்:

அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக கேரளாவில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது.

சில மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கனமழை கொட்டிவரும் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.

நேற்று பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எசசரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இன்று பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அந்த மாவட்டங்களில் 64 முதல் 115 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை தொடருவதால் ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் 5 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.

திருவனந்தபுரத்தில் பல வீடுகளில் மழைநீர் புகுந்தது. அந்த பகுதிகளை சேர்ந்தவர்களை மீட்கவும், மறுவாழ்வு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 3 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்மழை காரணமாக அம்பலப்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட காட்டூரை சேர்ந்த ஜித்தின் (வயது27)என்ற வாலிபரும், மலப்புரத்தை சேர்ந்த முகம்மது முகம்மில்( 8) என்ற சிறுவனும் பலியாகினர்.

அதேபோல் சம்பகுளத்தை சேர்ந்த வேலாயுதன் நாயர்(84) என்பவர் குளத்தில் மூழ்கி இறந்தார். திருவனந்தபுரத்தில் விதுரை சேர்ந்த சோமன்(62) என்பவர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். காணாமல் போன அவரை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் வருகிற 7-ந்தேதி வரை மழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மலை மற்றும் கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர்.

Tags:    

Similar News