திருப்பதி தேவஸ்தானத்திற்கு 250 ஏக்கர் விளை நிலத்தை தானமாக வழங்கிய விவசாயி
- 250 ஏக்கர் விவசாய நிலத்தை திருப்பதி ஏழுமலையானுக்கு முரளி கிருஷ்ணா தானமாக வழங்கினார்.
- கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்கள், மலர்கள் மற்றும் அன்னதானத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகளை வழங்குவதாக விவசாயி உறுதி அளித்தார்.
திருப்பதி:
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணா. இவருக்கு திருப்பதி மாவட்டம் டெல்லி அடுத்த பொத்தே கொண்டாவில் 90 ஏக்கர் விவசாய நிலமும், டக்குவோலுவில் 160 ஏக்கர் என மொத்தம் 250 ஏக்கர் பரப்பளவில் விளைநிலம் உள்ளது.
இந்த 250 ஏக்கர் விவசாய நிலத்தை திருப்பதி ஏழுமலையானுக்கு முரளி கிருஷ்ணா தானமாக வழங்கினார்.
நேற்று முரளி கிருஷ்ணா ஆந்திர தலைமைச் செயலாளர் ஜவகர் ரெட்டி, திருப்பதி கலெக்டர் வெங்கட்ரமண ரெட்டி, தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி ஆகியோர் முன்னிலையில் நிலத்திற்கான ஆவணங்களை ஒப்படைத்தார்.
தேவஸ்தானத்திற்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தில் தானே விவசாயம் செய்து கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்கள், மலர்கள் மற்றும் அன்னதானத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகளை வழங்குவதாகவும் உறுதி அளித்தார்.
இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் விவசாய நிலத்திற்கு தேவையான தண்ணீர் வசதி, நிலத்தின் வரைபடங்கள், பத்திரப்பதிவு மாற்றம் உள்ளிட்டவைகள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தினர்.
நிகழ்ச்சியில் திருப்பதி உதவி கலெக்டர் பாலாஜி, மாவட்ட வருவாய் அலுவலர் மலோலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.