இந்தியா

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி- டெல்லி நீதிமன்றம் அதிரடி

Published On 2022-07-14 10:49 GMT   |   Update On 2022-07-14 10:49 GMT
  • நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • இனி இத்தகைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.

டெல்லி ஐகோர்ட்டில் அனுபவா ஸ்ரீவாஸ்தவா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தற்போது பெய்துவரும் பருவமழை, மிகவும் தொலைவில் உள்ள 'நீட்' தேர்வு மையங்களை கருத்தில்கொண்டு, ஜூலை 17-ந் தேதி நடைபெற உள்ள 'நீட்' இளநிலை தேர்வை தள்ளிவைக்க வேண்டும்.

இத்தேர்வில் பங்கேற்க மேலும் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு முன் வக்கீல் மம்தா சர்மா முறையிட்டார். அந்த முறையீட்டை பரிசீலித்த ஐகோர்ட்டு, இன்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளித்தது.

அதன்படி, இந்த மனு இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், சில மாணவர்களால் செல்ல இயலவில்லை என்பதற்காக தேர்வையே ஒத்திவைக்கக் கோருவது ஏற்புடையதல்ல என்றும் இனி இத்தகைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Tags:    

Similar News